Published:Updated:

அண்ணாமலையின் டெல்லி விசிட்... கூட்டணி விவகாரத்தில் தலைமையின் முடிவு என்ன?!

அண்ணாமலை, அமித் ஷா, எல்.முருகன்

“தேசியத் தலைமையும் கூட்டணியை தொடரவே விரும்புகிறது என்பதை அண்ணாமலையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்படியிருக்க நாளை அவர்களோடுதான் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கப்போகிறோம் என்பதை கவனத்தில்கொண்டு இனி நகர்வுகள் இருக்கும்” என்கிறார்கள்

Published:Updated:

அண்ணாமலையின் டெல்லி விசிட்... கூட்டணி விவகாரத்தில் தலைமையின் முடிவு என்ன?!

“தேசியத் தலைமையும் கூட்டணியை தொடரவே விரும்புகிறது என்பதை அண்ணாமலையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்படியிருக்க நாளை அவர்களோடுதான் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கப்போகிறோம் என்பதை கவனத்தில்கொண்டு இனி நகர்வுகள் இருக்கும்” என்கிறார்கள்

அண்ணாமலை, அமித் ஷா, எல்.முருகன்

மார்ச் 17-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க மாநில நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருந்த கருத்து தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து டெல்லி தலைமைக்கு அண்ணாமலை கடிதம் ஒன்று எழுதியதும் முக்கியத்துவம் பெற்றது. அண்ணாமலையின் கருத்துக்கு வெளிப்படையாகவே தமிழக பாஜக சீனியர்கள் எதிர்க்கருத்தும் தெரிவித்துவந்தனர். இதற்கிடையே, விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் இந்தியாவின் முதல் பி.எம் மித்ரா ஜவுளிப் பூங்கா திட்டத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கிவைத்த நிகழ்ச்சியிலும், அண்ணாமலை பங்கேற்காதது கட்சிக்குள்ளையே விவாதத்துக்குள்ளானது.

பியூஸ் கோயால், ஸ்டாலின்
பியூஸ் கோயால், ஸ்டாலின்

இதனால் அண்ணாமலைக்கும், டெல்லி தலைமைக்கும் இடைவெளி ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்கிறார் என்கிற தகவல் வெளியானது. ஆனால், அதற்கு முன்கூட்டியே டெல்லிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலை டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநில பா.ஜ.க தலைவர்களை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மாற்றியிருந்ததும் தமிழக பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது.

நிலைமை இவ்வாறு இருக்க, அண்ணாமலையின் டெல்லி சந்திப்பு குறித்து பாஜக சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “கர்நாடகத் தேர்தலின் இணைப் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டத்திலிருந்து மாதம் இரண்டு, மூன்று முறை டெல்லி தலைமையைச் சந்தித்து அவர்களது ஆலோசனையில் பங்கேற்கிறார். அதன்படி இந்த முறையும் சென்றார். அங்கு அமித் ஷாவைச் சந்தித்த அண்ணாமலை, தமிழக பாஜக-வின் நிலைகளை எடுத்துக் கூறியிருக்கிறார். எனினும், கர்நாடகத் தேர்தல் குறித்துதான் அதிகம் விவாதித்திருக்கிறார்கள்.

இதன் அடிப்படையிலேயே டெல்லியிலிருந்து தமிழகத்துக்குத் திரும்பிய அண்ணாமலை, ‘பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்தேன். பாஜக-வைப் பொறுத்தவரை அகில இந்திய தலைமை முதல் கடைக்கோடி தொண்டன் வரை அனைவருக்குமே தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று செயல்பட்டுவருகிறோம்.

இ.பி.எஸ்., சி.டி.ரவி, அண்ணாமலை
இ.பி.எஸ்., சி.டி.ரவி, அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக-வை எப்படி ஆளுங்கட்சியாகக் கொண்டு வர வேண்டும் என்று செயல்படுகிறோம். தமிழ்நாட்டின் அரசியல் களம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல் பாஜக-வில் எங்களின் பொறுப்பை நாங்கள் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. பாஜக நாடாளுமன்றக்குழு அனைத்து விவகாரங்களையும் கவனித்துவருகிறது. நாடாளுமன்றக்குழுதான் அனைத்தையும் முடிவுசெய்யும். அதேபோல் பாஜக-வுக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்தக் கட்சிமீதும், தலைவர்மீதும் கோபமோ, ஆதங்கமோ கிடையாது’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

இப்போதைக்கு தேசியத் தலைமையும் கூட்டணியைத் தொடரவே விரும்புகிறது என்பதை அண்ணாமலையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். கட்சித் தலைமையைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை இறுதி செய்வார்கள். அப்படியிருக்க, நாளை அவர்களோடுதான் கூட்டங்களில் பங்கேற்கப்போகிறோம் என்பதை கவனத்தில்கொண்டு இனி நகர்வுகள் இருக்கும். அதை உணர்ந்து வரும் நாள்களில் தமிழக பாஜக-வின் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார்கள்.