Published:Updated:

எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டமைப்பு... இணைவார்கள்... ஆனால், சாதிப்பார்களா?

ஸ்டாலின், மம்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மம்தா

இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே தேர்வு முறை என்று ஒற்றை அதிகாரத்தை மத்திய அரசு திணிக்கப் பார்க்கிறது.

எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டமைப்பு... இணைவார்கள்... ஆனால், சாதிப்பார்களா?

இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே தேர்வு முறை என்று ஒற்றை அதிகாரத்தை மத்திய அரசு திணிக்கப் பார்க்கிறது.

Published:Updated:
ஸ்டாலின், மம்தா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், மம்தா

மாநில சுயாட்சியைக் காப்பாற்றவும், மாநில அதிகாரத்தில் தலையிடும் ஆளுநர்களுக்கு எதிராகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் தேசிய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத கூட்டமைப்பைத் தொடங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட சிலரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஓர் இயக்கம் தொடங்கப்பட்டால், அதன் தாக்கம் எப்படி இருக்கும்?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அந்த மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் இடையே நீண்ட நாள்களாக உரசல்கள் இருந்துவருகின்றன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஜக்தீப் தன்கர், பிப்ரவரி 12-ம் தேதி முதல் அந்த மாநில சட்டசபையை முடக்க உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘மம்தா பானர்ஜி என்னைத் தொடர்புகொண்டு, பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து கவலையைப் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் என்றும் அவர் கூறினார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் தி.மு.க-வுக்கு இருக்கும் உறுதிப்பாட்டை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்பு விரைவில் நடைபெறும்’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

சந்திரசேகர ராவ் , உத்தவ் தாக்கரே , பினராயி விஜயன்
சந்திரசேகர ராவ் , உத்தவ் தாக்கரே , பினராயி விஜயன்

இது பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், ‘‘இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே தேர்வு முறை என்று ஒற்றை அதிகாரத்தை மத்திய அரசு திணிக்கப் பார்க்கிறது. கூடுதலாக மாநிலங்களின் அதிகாரத்தில் ஆளுநர்கள் தலையிடுவது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசுப் பணிகளுக்கு மாற்றும் நடவடிக்கை... என மொத்தமாக மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறது மத்திய அரசு. சட்டமன்றம் என்ற அமைப்பையே சிதைத்து, நாடு முழுமைக்கும் ஒரே ஆட்சி என்பதை நோக்கி மத்திய பா.ஜ.க அரசு நகர்ந்துகொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. இதற்கு இந்திய அளவில் பா.ஜ.க எதிர்ப்பிலிருக்கும் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தே, எதிர்க்கட்சி முதல்வர்கள் ஒன்றிணையத் திட்டமிட்டிருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் நடந்திருக்கின்றன’’ என்றவர்கள், அது பற்றிய விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்...

‘‘இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங் அமைத்த கூட்டணி, ஐ.கே.குஜ்ரால். தேவகவுடா ஆகியோர் காலத்தில் உருவான கூட்டணி என எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்தக் கூட்டணிகளில் இடம்பெற்ற கட்சிகளின் சித்தாந்த வேறுபாடுதான் அந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம். இப்போது கூடவிருக்கும் எதிர்க்கட்சி முதல்வர்களுக்குள்ளும் இந்தச் சித்தாந்த வேறுபாடு இருக்கிறது. தவிர சிவசேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தாங்கள் தேசியக் கட்சியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றன. எனவே, இந்தக் கூட்டமைப்பு பா.ஜ.க எதிர்ப்பில் வெற்றிபெறுமா என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. காங்கிரஸையும் உள்ளடக்கிய பா.ஜ.க எதிர்ப்பை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, ‘காங்கிரஸுடன் எந்தவொரு மாநிலக் கட்சியும் நல்லுறவைக் கொண்டிருக்கவி ல்லை. காங்கிரஸ் கட்சி அதன் வழியில் செயல்படும். நாங்கள் எங்கள் வழியில் செயல்படுவோம். காங்கிரஸைத் தவிர்த்த கூட்டமைப்பையே செயல்படுத்த விரும்புகிறோம்’ என்று மம்தா தெளிவுபடுத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டமைப்பு இந்தச் சிக்கல்களைச் சமாளித்து எப்படி வெற்றிபெறப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி’’ என்றார்கள் விரிவாக.

ஸ்டாலின், மம்தா
ஸ்டாலின், மம்தா

இதன் தாக்கம் குறித்து அரசியல் பார்வையாளர் சுபகுணராஜன் நம்மிடம், ‘‘எதிர்க்கட்சி முதல்வர்கள் ஓர் அமைப்பாகக் கூடியது முன்பும் நடந்திருக்கின்றனதான்... ஆனால், அவையெல்லாம் தேர்தலையொட்டி நடந்தவை. ஆனால், தற்போது உருவாகவுள்ள கூட்டமைப்பு மாநில உரிமைக்கானது. கடந்த ஏழாண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க., மாநிலம் என்ற அமைப்பையே சிதைத்து, கூட்டாட்சித் தத்துவத்தையும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதையும் அழிக்கும் வேலைகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது. இந்த இரண்டையும் காப்பாற்றும் நோக்கில்தான் எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டமைப்பு உருவாகவுள்ளது. காங்கிரஸ் ஆட்சியிலும் ஆளுநர்களால் மாநிலங்களுக்குச் சிக்கல்கள் இருந்தனதான். ஆனால், இப்போது இருக்கும் அளவுக்கு மாநில அரசுகளைப் புறக்கணிக்கும் போக்கு இந்திய வரலாற்றிலேயே நடந்ததில்லை. பா.ஜ.க போன்ற வலுவான கட்சியை எதிர்க்க வேண்டுமானால், இப்படியான கூட்டமைப்பு கட்டாயம் தேவை. அதேசமயம், முரண்பாடுகள் இல்லாமல் எந்தக் கூட்டமைப்பும் இல்லை. இதிலும் முரண்கள் இருக்கும் என்றாலும், இதன் நோக்கம் அந்த முரண்களைத் தவிர்த்து இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

சுபகுணராஜன், நாராயணன் திருப்பதி
சுபகுணராஜன், நாராயணன் திருப்பதி

இதை மறுக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி நம்மிடம், ‘‘ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மோசமான முடிவுகளைச் சந்திக்கவுள்ளது என்பதை உணர்ந்துதான் மம்தா, ஸ்டாலின் ஆகியோர் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக்கொண்டதோடு, மாநிலக் கட்சிகளையும் அழிப்பதற்கான வேலை களைச் செய்துவருகிறது. அதன் விளைவாகவே எதிர்க்கட்சிகள் இப்படியான கூட்டமைப்பை உருவாக்க முயல்கின்றன. பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது... மாநில மொழிகளை, உரிமைகளை, கூட்டாட்சியை வலியுறுத்திவருவது பா.ஜ.க-வும் ஜனசங்கமும்தான். பா.ஜ.க-வுக்கு வகுப்பெடுப்பதற்கு ஸ்டாலின், மம்தா போன்றவர் களுக்கு தகுதியே கிடையாது. இவர்கள் பேசும் மாநில சுயாட்சி என்பது சந்தர்ப்பவாத அரசியல் தானே தவிர, இதனால் பா.ஜ.க-வுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படப்போவதில்லை’’ என்றார்.

கட்சியைப் பற்றி மட்டுமல்ல... நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்கவேண்டிய தருணம் இது. தலைவர்கள் சிந்திப்பார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism