Published:Updated:

மீண்டும் நெருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! - எடப்பாடி பழனிசாமி பேச்சால் கே.சி.வீரமணிக்குச் சிக்கலா?

வேலூர் வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து காட்டமான வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் சென்ற மறுநாளான இன்று கே.சி.வீரமணி விவகாரத்தை மீண்டும் தூசுதட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, 1.04.2016 முதல் 31.03.2021 வரை 28.78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்திருக்கிறார்’ என்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செப்டம்பர் 15-ம் தேதி வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 16-ம் தேதி ஜோலார்பேட்டையிலுள்ள வீரமணியின் இரண்டு வீடுகள் உட்பட அவருக்குச் சொந்தமான 35 இடங்களில், ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல குழுக்களாகப் பிரிந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல்
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவல்

இந்தச் சோதனையில் ரூ.34 லட்சம் பணம், ரூ.1.8 லட்சம் மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட ஒன்பது சொகுசு கார்கள், ஐந்து கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் தங்க நகைகள் (அதாவது 623 சவரன்), 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளிப் பொருள்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த கே.சி.வீரமணி, `லஞ்ச ஒழிப்புத்துறையினர் எனக்குச் சொந்தமான இடங்களிலிருந்து எதையும் கைப்பற்றி எடுத்துச் செல்லவில்லை. தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன’ என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். ஆனாலும், அவர் பேட்டி கொடுத்த மறுநாளே வீரமணியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் நகை, பணத்தை வேலூர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, கே.சி.வீரமணி விவகாரம் மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

இந்தநிலையில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக நிர்வாகிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக-வையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்தும் காட்டமான வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று இரவே எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் சென்ற மறுநாளான இன்றைய தினத்தில் கே.சி.வீரமணி விவகாரத்தை மீண்டும் தூசுதட்டியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலூர் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளரும், ஆவின் தலைவருமான வேலழகனை நெருக்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ். வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான `ஆவின்’ தலைமை அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கிவருகிறது.

வேலூர் ஆவின் அலுவலகம்
வேலூர் ஆவின் அலுவலகம்

ஆவின் தலைவராக வேலழகன் இருப்பதால், இந்த அலுவலகத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். தொடர்ந்து, வேலழகனுடன் நெருக்கம் காட்டுபவர்களிடமும் அதிரடிகாட்டிவருகிறார்கள். வேலழகனின் நண்பரான வேலூர் சாயிநாதபுரம் லட்சுமண முதலி தெருவில் வசிக்கும் சம்பத் என்பவருடைய வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. ஆவின் தலைவரான வேலழகன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடன் பல்வேறு விவகாரங்களில் நெருக்கம் காட்டுபவர் என்று சொந்தக் கட்சிக்குள்ளேயே பேச்சு உண்டு. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்டு வேலழகன் தோல்வியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு