Published:Updated:

திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?!

அண்ணா அறிவாலயம்

``உத்தரப்பிரதேசம், குஜராத்தில் சாதி, மதரீதியான பிளவை மக்களிடம் ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பா.ஜ.க., தமிழ்நாட்டில் இவர்கள் மூலமாகச் செய்யப் பார்க்கிறது." - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம்... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?!

``உத்தரப்பிரதேசம், குஜராத்தில் சாதி, மதரீதியான பிளவை மக்களிடம் ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பா.ஜ.க., தமிழ்நாட்டில் இவர்கள் மூலமாகச் செய்யப் பார்க்கிறது." - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

Published:Updated:
அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவருகின்றன. இந்தச்சூழலில், கடந்த சில மாதங்களாகவே திராவிடம் குறித்த கருத்துகள் திமுக-வினரால் அதிகம் பேசப்பட்டுவருகின்றன. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் திமுக அரசை, `திராவிட மாடல் அரசு’ என்று தொடர்ந்து புகழ்பாடிவருகிறார்கள். திமுக-வின் திராவிட கருத்துக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்டோரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் எதிர்வினையாற்றிவருகிறார்கள். இந்தச் சூழலில், 59 சிறு சிறு இயக்கங்கள் இணைந்து திராவிட ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருக்கின்றன.

ஏர்போர்ட் மூர்த்தி
ஏர்போர்ட் மூர்த்தி

இது குறித்து, புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கூறுகையில், " அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, மதுரை பிள்ளை, பி.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட பட்டியல் சமூக மக்களின் வளர்ச்சிக்காகப் போராடிய தலைவர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. 1940 வரை பெருவாரியான பட்டியல் சமூகத் தலைவர்கள் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமையாக இருந்தனர். அதற்குப் பிறகு பட்டியல் சமூகத் தலைவர்கள் யாரும் தன்னெழுச்சியாக வந்துவிடாதபடி திராவிடக் கழகம் பார்த்துக்கொண்டது. சாதி வேறுபாடு அதிகமாகக் காணப்படும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பட்டியல் சமூகப் பெண் முதல்வராக முடிகிறது. பீகாரில் வர முடிகிறது. ஆனால், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் தமிழகத்தில் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ வர முடிவதில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்களும், கட்சிகளும்தான். எனவே, எங்களின் உரிமை இழப்புகளை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய கடமை இருக்கிறது" என்றார். 

ரேவதி நாகராஜன்
ரேவதி நாகராஜன்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி நாகராஜன், "திராவிடக் கட்சிகள் அனைத்தும் பறையர் சமூகத்தை ஜீரோவாக வைத்திருக்கின்றன. அரும்பாக்கத்தில் வீடுகளை அப்புறப்படுத்தி எங்களின் அடிமடியில் கைவைத்தார்கள். அப்போது கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். பறையர் சமூக மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள், திராவிடக் கட்சிகளின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள். எங்கள் தாத்தா அயோத்தி தாசர் பண்டிதரும், ரெட்டமலை சீனிவாசனும்தான் பட்டியல் இனம் என்ற ஒன்றைக் கொண்டுவந்தார்கள். தமிழ்நாட்டில் பறையர் இன மக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்" என்றார். 

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``2009-ல் கொடுக்கப்பட்ட 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் அதிகமான இட ஒதுக்கீடு பறையர் சமூகத்துக்குத்தான் இருந்தது. திராவிட இயக்கத்தால் படிப்பு, உயர்கல்வி, வங்கிக் கடன் கிடைக்காமல் போய்விட்டதா... பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு முதன்முதலில் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்து திமுக அரசுதான். இந்தத் திட்டத்தின் மூலம் அதிகம் பயனடைந்தது அவர்கள் சொல்லும் பறையர் சமூகம்தான். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே தலைவர் என்றால் அது கலைஞர்தான். இதைப் பார்க்கும்போது, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் சாதிரீதியான, மதரீதியான பிளவை மக்களிடம் ஏற்படுத்தி, அதில் குளிர்காயும் பாஜக, தமிழ்நாட்டில் அதை இவர்கள் மூலமாகச் செய்யப்பார்க்கிறது. இதில் ஒன்றாகத்தான் இந்த ஒருங்கிணைப்புக்குழு இருக்கும் என்று நினைக்கிறேன். திராவிட இயக்கம் என்ற ஒன்று இல்லையென்றால் இன்றைக்கு ஏர்போர்ட் மூர்த்தி எப்படி உருவாகியிருப்பார்... திராவிட இயக்க எதிர்ப்பு என்றாலே அனைவருக்கும் தெரியும், அவர்கள் பாஜக-வின் கையாள்கள்தான் என்று" என்று கூறினார்.