Published:Updated:

``காஷ்மீரில் தேசியக்கொடி; பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல ராகுல் மறந்துவிட்டார்" - அனுராக் தாக்கூர்

அனுராக் தாக்கூர் - ராகுல் காந்தி

``காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கியதால்தான் ராகுல் காந்தியால் காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றமுடிந்தது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:

``காஷ்மீரில் தேசியக்கொடி; பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல ராகுல் மறந்துவிட்டார்" - அனுராக் தாக்கூர்

``காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கியதால்தான் ராகுல் காந்தியால் காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றமுடிந்தது” என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

அனுராக் தாக்கூர் - ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த ஆண்டு, செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கி பல்வேறு மாநிலங்களைக் கடந்து நேற்று காஷ்மீரில் நிறைவடைந்தது. நடைப்பயணத்தின் நிறைவு விழாவின்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி தேசியக்கொடி ஏற்றினார். 136 நாள்கள் நடைபெற்ற இந்தப் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸார் அனைவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

பனிக்கட்டியுடன் விளையாடும் ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி
பனிக்கட்டியுடன் விளையாடும் ராகுல் காந்தி - பிரியாங்கா காந்தி

அப்போது அருகிலிருந்த பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி பனிக்கட்டிகளை வீசியெறிந்து தனது அன்பை வெளிப்படுத்தினார். பிரியாங்காவும் பனிக்கட்டியை ராகுல் மீது எறிந்து விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "ராகுலும் பிரியங்காவும் பனிப்பந்துகளுடன் விளையாடுவதையும், ரசித்ததையும் பார்த்தோம். காஷ்மீரில் இந்தியாவின் கொடியை ராகுல் காந்தி ஏற்றினார். அதற்கு காரணம், பா.ஜ.க 370 மற்றும் 35-ஏ விதிகளை ரத்துசெய்து நிறைவேற்றியது தானே!

கடந்த காலங்களில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி, ஜம்மு - காஷ்மீர் வரை இந்தியாவை ஒருங்கிணைந்த பகுதியாக வைத்திருக்க யாத்திரையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். அதற்கு இன்றுவரை எந்த பதிலும் இல்லை.

1992-ல், பா.ஜ.க தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், அப்போதைய கட்சித் தொண்டராக இருந்த நரேந்திர மோடியும், லால் சவுக்கில் வெடிகுண்டுகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் இடையே மூவர்ணக் கொடியை ஏற்றினர். அந்தக் காலம் பனிப்பந்துகளின் காலமல்ல. குண்டுகளின் காலம்.

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்
ட்விட்டர்

2011-ல், யுவமோர்ச்சா தலைவராக நான், கொல்கத்தாவிலிருந்து காஷ்மீர் வரை திரங்கா யாத்திரையைத் தொடங்கினேன். அப்போது ஜம்மு முழுவதும் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். தேசியக்கொடியை ஏற்றியபோது எங்கள் தொண்டர்கள் தாக்கப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 'அனுராக் தாக்கூர் தேசியக்கொடி ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும்' என்று கூறியது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ஆனால் இப்போது, காஷ்மீரில் அமைதியும், சுற்றுலாவும் அதிகரித்திருக்கிறது. 370 மற்றும் 35-ஏ ரத்து செய்யப்பட்ட பிறகு இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருக்கின்றனர். மோடி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்த பிறகுதான் இது நடந்திருக்கிறது. அதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்வதற்கு ராகுல் காந்தியும், பிரியாங்கா காந்தியும் மறந்துவிட்டனர்” என்றார்.