கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
அதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர், இந்த விசாரணை ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டுமென அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது.

இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், `ஆணையத்தில் வேறு சில நீதிபதிகளை நியமித்தால், அதன் செயல்பாடுகள் பாதிக்கும்' என்று கூறியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையால் இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம், தற்போது மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை வழங்கியபோது உடன் இருந்த 10 மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
