Election bannerElection banner
Published:Updated:

'சென்ற முறை வழக்கு, இந்த முறை வெற்றி!' - சவாலில் வென்ற 'ராதாபுரம்' அப்பாவு #TNelections2021

அப்பாவு
அப்பாவு

203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சர்ச்சைக்குரிய மூன்று சுற்றுகளில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.

நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் 2016 தேர்தல் முடிவே சர்ச்சைக்குள்ளான நிலையில், இந்தத் தேர்தலிலும் தமிழக அளவில் கவனம் ஈர்த்த தொகுதியாக பார்க்கப்பட்டது ராதாபுரம் தொகுதி. 1957 முதல் 2016 வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறை, அதிமுக 2 முறை, திமுக 2 முறை, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 2 முறை, தமாகா, தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு முறை இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2006-ல் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கிய எம்.அப்பாவு வெற்றிபெற்றார். 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட எஸ்.மைக்கேல் ராயப்பன் வெற்றிபெற்றார்.

அப்பாவு
அப்பாவு

2016 தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுக்கும், அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சர்ச்சைக்குரிய 3 சுற்றுகளில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்துக்கும் சென்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்த தேர்தலே வந்துவிட்டது. இந்த முறையும் திமுக சார்பில் அப்பாவுவும், அதிமுக சார்பில் அதே இன்பதுரையும் போட்டியிட்டனர்.

சென்ற முறை எந்தத் தபால் வாக்குகளுக்காக வழக்கு வரை சென்று பரபரப்பானதோ அதே தபால் வாக்குகள் இன்று காலை முதலாவதாக எண்ணப்பட்டன. அந்தச் சமயத்தில் முன்னிலையில் இருந்த அதிமுக-வின் இன்பதுரை அதன் பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது பின்னடைவைச் சந்தித்தார்.

அப்பாவு
அப்பாவு

சென்ற முறை இன்பதுரைக்கெதிராகத் தோல்வி அடைந்ததற்காக வழக்கு தொடுத்த அப்பாவு முன்னிலை வகித்தார். அதன் பிறகு தொடர்ந்து முன்னிலைவகித்த அப்பாவு அனைத்துச் சுற்றுகளின் முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இன்பதுரையைவிட 4,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு