Published:Updated:

`அந்த 12 பேரை தமிழகத்துக்குள் அனுமதித்திருக்கக் கூடாது!’- ஊட்டியில் ஆ.ராசா ஆவேசம்

``தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் இருக்கும் ஒவ்வொரு நாளும் இந்திய இறையான்மைக்கு ஆபத்து. இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்த அ.தி.மு.க-வினரின் வீட்டை முற்றுகையிட்டிருக்க வேண்டும்"

கண்டன பொதுக்கூட்டம்
கண்டன பொதுக்கூட்டம் ( Arun.K )

தேசிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினர், கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பலதரப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டன பொதுக்கூட்டம்
கண்டன பொதுக்கூட்டம்

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் ஊட்டி ஏ.டி.சி சுதந்திர திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மேலும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹாஜா கனி, எழுத்தாளரும் பேச்சாளருமான மதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா குறித்து கண்டன உரையாற்றினர்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரியில் பரப்புரையில் ஈடுபட்டுவரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும் இந்தக் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்,

கண்டன பொதுக்கூட்டம்
கண்டன பொதுக்கூட்டம்

அப்போது அவர், ``நாடாளுமன்றத்தில் இந்திய தேசிய குடியுரிமைச் சட்டம் கள்ளத்தனமாக, அவசர கோலத்தில், ஜனநாய நெறிமுறைகளை எல்லாம் படுகொலை செய்து, அரசியல் சட்டத்தை புதை குழியில் வீழ்த்தி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து திங்கள் கிழமை நாடாளுமன்ற மக்களைவையில் வைக்கின்றனர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறைவேறிய சட்டம், புதன்கிழமை மாலை 6 மணிக்கு மாநிலங்களவைக்குச் செல்கிறது.

அங்கேயும் அவசரமாக இச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது. மூன்றே நாள்களில் ரகசியமாக வைத்திருந்து, விவாதத்துக்கு விடாமல், அதற்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மசோதாவின் நகலை வழங்காமல் திருட்டுத்தனமாக, கள்ளத்தனமாக தங்களுக்குள்ள அசுர பலத்தை வைத்துக்கொண்டு இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

கண்டன பொதுக்கூட்டம்
கண்டன பொதுக்கூட்டம்

எடப்பாடி அரசு குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மக்களவையில் கையொப்பம் போட்டுவிட்டு வந்தது. அவர்கள் நினைத்திருந்தால், இச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் செய்திருக்கலாம். இச்சட்டம் நிறைவேற 11 ஓட்டுகள் தேவைப்பட்டன. ஆனால், அ.தி.மு.க-வைச்சேர்ந்த உறுப்பினர்கள் 11 பேரும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி என 12 பேர் ஓட்டு போட்டு இச்சட்டத்தை நிறைவேற்ற உதவியுள்ளனர்.

இவர்களை தமிழகத்துக்குள் அனுமதித்ததே தவறு. இவர்களின் வீட்டை முற்றுகையிட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் இருக்கும் ஒவ்வொரு நாளும் இந்திய இறையான்மைக்கு ஆபத்து என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எடப்பாடி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களை இந்த தமிழ்நாட்டுக்குள்ளேயே விடக் கூடாது. தி.மு.க ஒரு மாநிலக் கட்சி.

கண்டன பொதுக்கூட்டம்
கண்டன பொதுக்கூட்டம்

ஆனால், இந்த தேசத்தில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்கள் பாதிக்கக் கூடாது என ஸ்டாலின் போராடி வருகிறார். இதுதான் பெரியார் ஊட்டிய உணர்வு. இந்தியா என்பது அனைவருக்கும் சொந்தம். இதைப் பிரிக்க தி.மு.க ஒரு போதும் அனுமதிக்காது” என்றார்.