Published:Updated:

பரந்தூர் விமான நிலையம்: அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படுத்த முயற்சி - அறப்போர் இயக்கம் சொல்வதென்ன?

அறப்போர் இயக்கத்தினர்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் சுமார் 20 ஆயிரம் கோடி தோராய மதிப்பீட்டில், 4,751 ஏக்கர் பரப்பளவில் அமையவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

பரந்தூர் விமான நிலையம்: அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படுத்த முயற்சி - அறப்போர் இயக்கம் சொல்வதென்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் சுமார் 20 ஆயிரம் கோடி தோராய மதிப்பீட்டில், 4,751 ஏக்கர் பரப்பளவில் அமையவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

Published:Updated:
அறப்போர் இயக்கத்தினர்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில், மோசடிப் பத்திரப்பதிவு மூலமாக அரசுக்கு ரூ.165 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்த கூட்டுச்சதி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்ட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

பரந்தூர் | விமானம்
பரந்தூர் | விமானம்

பரந்தூரில் புதிய விமான நிலையம்:

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், `காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமையவிருக்கிறது' என அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் தோராய மதிப்பீட்டில், 4,751 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமையவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, விரைவில் நிலம் கையப்படுத்தும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்வுக்கு சந்தை விலையைவிட மிகவும் கூடுதலான இழப்பீடு வழங்கப்படும் எனவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கு பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு:

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி அறப்போர் இயக்கம் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட்டியது. அதில், ``பரந்தூர் இரண்டாம் விமான நிலையம் அமையவிருக்கும் இடங்களிலுள்ள நிலங்களை மோசடி வழியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்படவிருக்கிறது" என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்தார். மேலும், ``இந்த மோசடியில் ஈடுபட்ட கூடுதல் ஐ.ஜி கே.வி.ஶ்ரீனிவாசன், சார்பதிவாளர் ராஜதுறை மற்றும் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரத்துடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவு செயலாளருக்கு அறிக்கை அனுப்பி கோரியிருக்கிறோம்'’ என்றும் தெரிவித்தார்.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்
அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்

அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கை விவரம்:

அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், ``பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பரந்தூர், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 73 ஏக்கர் நிலத்தில் ஒருசில பகுதிகளை சதுரஅடியில் பதிவுசெய்ய மார்ச் 12, 2020-ல் காஞ்சிபுரம் இணை 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்திருக்கின்றனர். அதை மார்ச் 26, 2020-ல் சார்பதிவாளராக இருந்த ரா.பிரகாஷ், காஞ்சிபுரம் மாவட்டப் பதிவாளருக்கு இதைப் பதிவு செய்ய முடியமா என்று விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்புகிறார். அதில், இந்த ஆய்வுசெய்ததில் குறிப்பிட்ட சர்வே எண் 631 மற்றும் வேறு சில சர்வே எண்கள் முழுவதும் நிலமாகவே இருந்திருக்கின்றன. பசுமை விமான நிலையம் அமைய கருத்துரு உள்ள நிலையில், அதிக விஸ்தீணத்தில் அதிக சர்வே எண்களைச் சதுரஅடியாக மாற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சதுர அடியில் அதிகமாகப் பெரும்பொருட்டு இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் அரசுக்குப் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கும் பரந்தூர் மக்கள்
எதிர்க்கும் பரந்தூர் மக்கள்

அதற்கு ஜூன் 15, 2020 அன்று பதிலளித்த மாவட்டப் பதிவாளர், `தனிமனை எந்த சர்வே எண்ணில் அமைந்துள்ளது என்பதை பிரத்யேகமாக ஆவணத்தில் குறிப்பிடாத நிலையில், இந்த ஆவணத்தை பதிவுக்காக அனுமதித்தே முரணானது என்றும், சர்வே எண் விவரத்தை திருத்தக் கோரி ஆவணத்தை பதிவுசெய்யாமலேயே திரும்ப வழங்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஜூன் 16, 2020-ல் திடீரென கூடுதல் பதிவுத்துறை ஐ.ஜி கே.வி.ஶ்ரீனிவாசன், `சொத்து விவரத்தில் சதுரஅடி எனக் குறிப்பிட்டுள்ள ஒரே காரணத்துக்காக இதற்கு தடையின்மைச் சான்று கேட்கத் தேவையில்லை என்றும், பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தின் ஆவணங்களை விரைந்து பதிவு செய்து விடுவிக்குமாறும்' சார்பதிவாளர் பிரகாஷுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பிரகாஷை இடமாற்றம் செய்துவிட்டு, ராஜதுரை என்பவரை காஞ்சிபுரம் இணை 2-வது சார்பதிவாளராக நியமனம் செய்கிறார். இதையடுத்து, ஜூலை 20, 2020-ல் கூடுதல் ஐ.ஜி ஶ்ரீனிவாசன், சார்பதிவாளர் ராஜதுரையும் கூட்டுச்சதி செய்து ஆவணங்களைப் பதிவுசெய்கிறார்கள். அதாவது, ரூ.8,71,000-ஆக இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை சதுரஅடி மதிப்பீட்டில் ஏக்கர் ரூ.64,45,455 என்று நிர்ணயம் செய்து பதிவுசெய்திருக்கிறார்கள். இதனால், ரூ.25 கோடி இழப்பீடு வழங்கவேண்டிய இடத்துக்கு ரூ.191 கோடி வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், கிராமப்புறங்களிலுள்ள நிலங்களை கையகப்படுத்தப்படும்போது நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசுக்கு ரூ.165 கோடி கூடுதலாக இழப்பு ஏற்படும். மேலும், இந்த மாதத்துடன் ஓய்வு பெறவிருக்கும் கே.வி.ஶ்ரீனிவாசனையும், மோசடி ஊழலில் ஈடுபட்ட மற்ற பொது ஊழியர்களையும் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யவும், புதிய பத்திரப்பதிவு சட்ட திருத்தப்படி மேற்கூறிய பத்திரப்பதிவுகளை ரத்துசெய்யவும் நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மற்றும் செயலர் இருவரையும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கே.வி. ஶ்ரீனிவாசன்
கே.வி. ஶ்ரீனிவாசன்

வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிக்கை

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில், ``சென்னை புதிய விமான நிலையம் அமையவிருக்கும் காஞ்சிபுரம் வட்டம், பரந்தூர் கிராமத்தில் காஞ்சிபுரம் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2976/2020, 2977/ 2020, 2978/2020, 2979/2020 என்ற எண்கள்கொண்ட ஆவணங்களின் மூலம் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு தனிநபர்களால் 19-3-2020 அன்று கிரய ஆவணங்கள் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல சர்வே எண்களில் அடங்கிய சுமார் 73 ஏக்கரில் 1.17 ஏக்கர் நிலம் என கிரயம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே எண்களில் வழிகாட்டி மதிப்பு அதிக பட்சம் ஏக்கர்  ரூ 11,39,000/- என உள்ள நிலையில் இந்த ஆவணங்களில் சதுரஅடி ரூ 150/- என்ற மதிப்பு (ஏக்கர் ரூ 65,40,000/- ) அனுசரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரயம் செய்யப்பட்ட ஏக்கர் 1.17 நிலம் எந்த சர்வே எண்களில் கட்டுப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி

ஆகவே, சென்னை விமான நிலையம் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டால் அரசிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகை பெறும் நோக்கில் இந்த ஆவணங்கள் பதியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வர வலுவான முகாந்திரம் உள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் 2020-ம் ஆண்டு அதாவது, முந்தைய ஆட்சிக்காலத்தில் எழுதி பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆவணங்களைப் பதிந்த பதிவு அலுவலர் தற்காலிகப் பணி நீக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அதற்கு உதவிய ஓர் உயர் அலுவலர் மீது இந்நேர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறைக்கு ஏற்கெனவே கடிதம் எழுதப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதே நேர்வை மேற்கோள் காட்டி சென்னை விமான நிலையம் அமைய நிலம் கையகப்படுத்தும்போது இவ்வாறு அதிக மதிப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மிக அதிக அளவிலான இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று ஊடகங்களில் சொல்லப்பட்டிருப்பது தவறானதாகும்.

அரசுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் நேர்வுகளில் இது போன்ற அதிக மதிப்புடைய ஆவணங்கள், `பகட்டு மதிப்பு ஆவணங்கள்’ என வகைப்படுத்தப்பட்டு அவற்றின் மதிப்பு இழப்பீடு வழங்க அடிப்படை மதிப்பாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும், நில உடமையாளர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு நில எடுப்பு செய்யப்படும் இனங்களில் சரியான சந்தை மதிப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டு அந்தக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, நில நிர்வாக ஆணையர் தலைமையில் இயங்கும் மாநில அளவிலான குழுவால் சரிபார்க்கப்பட்டு, அரசால் சரியான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்கள் பாதிக்கப்படாதவாறு ஏற்ற வகையிலான இழப்பீடு வழங்கப்படும்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

மேலும், மாநிலத்தில் எந்த ஒரு நிலத்தின் மதிப்பையும் சரிசெய்ய பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மைய வழிகாட்டுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. இந்நிலையில் 2020-ம் ஆண்டில், அதாவது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ஓர் ஆவணப் பதிவைக்க் காரணம் காட்டி தற்போது அமையவிருக்கும் விமான நிலையத்துக்கு செய்யப்படவிருக்கும் நில எடுப்புக்கு மிக அதிக அளவில் அரசு பணத்தைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று பரப்பப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விமான நிலையம் அமைய நிலம் வழங்கவிருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடைமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

அதிகாரிகள்மீது அரசின் சஸ்பெண்ட் நடவடிக்கை:

இது குறித்து விசாரணை செய்த ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை ஐ.ஜி ஶ்ரீனிவாசன் குறித்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக பதிவுத்துறைக்கு அறிக்கை அனுப்பியது. மேலும் அதில், ஐ.ஜி ஶ்ரீனிவாசன் குறித்து நடத்திய விசாரணையில் இதேபோல முறைகேடாகப் பல்வேறு பத்திரப்பதிவுகள் செய்திருப்பதையும் உறுதிசெய்தது. இந்த நிலையில், பத்திரப்பதிவுத் தறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமிக்கு உத்தரவிட, குற்றம்சாட்டப்பட்ட கூடுதல் ஐ.ஜி ஶ்ரீனிவாசன் ஆகஸ்ட் 20-ம் தேதியன்றே சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே, வேறொரு வழக்கிலும் சேர்த்து சார்பதிவாளர் ராஜதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.