Election bannerElection banner
Published:Updated:

மறைக்கப்படும் மோடி; முன்னிலைப்படுத்தப்படும் ஜெ., எம்.ஜி.ஆர் - அரவக்குறிச்சியில் பாஜக பிளான் என்ன?

மோடியின் பெயர் மறைக்கப்பட்ட  சுவர் விளம்பரம்
மோடியின் பெயர் மறைக்கப்பட்ட சுவர் விளம்பரம் ( நா.ராஜமுருகன் )

அரவக்குறிச்சியில் மோடி, அமித் ஷா பெயர்களை இப்போது தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாறாக, வேட்பாளர் அண்ணாமலையின் பெருமைகளைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவருகிறார்கள். ஏன் இந்த மாற்றம்? அரவக்குறிச்சி களம் குறித்துப் பார்க்கலாம்.

அரவக்குறிச்சியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை எப்படியும் ஜெயிக்கவைத்தே தீருவது என்று பா.ஜ.க தலைமை தீவிரமாக இருக்கிறதாம். அதற்காக, மோடி, அமித் ஷா பெயர்களைத் தவிர்த்துவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை முன்னிலைப்படுத்தும், புது யுக்தியை பா.ஜ.க தலைமை செய்யச் சொல்லியிருப்பதாகக் கூறுகின்றனர்.

அண்ணாமலை பிரசாரம்
அண்ணாமலை பிரசாரம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சியில், பா.ஜ.க சார்பில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், பா.ஜ.க மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மொஞ்சனூர் இளங்கோ என்பவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-விடம் பேசி பா.ஜ.க வாங்கிய இடங்களில் மற்ற வேட்பாளர்கள் வெற்றிபெறுகிறார்களோ இல்லையோ, அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலரை ஜெயிக்கவைப்பது அவசியம் என்று ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருக்கிறதாம் தலைமை. அதனால், அண்ணாமலை அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். பிரசாரத்தைத் தொடங்கியபோது, `நான் எம்.எல்.ஏ ஆனதும், ஆறே மாதங்களில் மோடியை அழைத்து வந்து, புதிய திட்டங்களை அறிவிக்க வைப்பேன்' என்று பேசினார். அதோடு, இளைஞர்களைக் கவரும் வகையில் வேலைவாய்ப்பு, தொழிற்சாலை, சுயதொழில் என்று பல திட்டங்களை வாக்குறுதிகளாக முன்வைத்து, பிரசாரம் மேற்கொண்டுவந்தார்.

கரூர்: `6 மாதங்களில் மோடியை அழைத்து வந்து திட்டங்களை நிறைவேற்றுவேன்’ - அண்ணாமலை அதிரடி

இந்தநிலையில், சில நாள்களாக அவரது பிரசாரத்திலும், பிரசார உத்திகளிலும் சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பா.ஜ.க சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, விஷயங்களில், `பாரத் மாதா கி ஜே' என்று கோஷம் எழுப்பபடும். ஆனால், அந்த கோஷத்தை இப்போது பார்க்க முடியவில்லை. அதேபோல, சுவர் விளம்பரங்களில் `பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் அண்ணாமலை’ என்ற வாசகங்களில் மோடியின் பெயர் மட்டும் மறைக்கப்பட்டதாக ஒரு போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. பிரசாரத்திலும், `மோடி, அமித் ஷாவின் ஆசிபெற்ற வேட்பாளர்’ என்ற அறிமுகம் தரப்படவில்லை. `எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசிபெற்ற வேட்பாளர்' என்று மட்டும் சொல்லப்படுகிறது.

சுவர் விளம்பரம்
சுவர் விளம்பரம்
நா.ராஜமுருகன்

பா.ஜ.க-வின் பரப்புரை யுக்தி மாற்றம் குறித்து அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.

``அண்ணாமலை, தனது ஐ.பி.எஸ் பணியை விட்டுவிட்டு அரசியலுக்குள் வந்திருக்கிறார். அவருக்கு இது முதல் தேர்தல். தவிர, சொந்தத் தொகுதியில் நிற்கிறார். கண்டிப்பாக அவர் தனது செல்வாக்கைக் காட்ட, இந்தத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார். அதேபோல், பா.ஜ.க கட்சி, குறைந்தபட்சம் ஐந்திலிருந்து எட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களை சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறதாம். ஆனால், கள நிலவரம் அவர்களுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கே பல இடங்களில் சாதமாக இல்லை. மோடி, அமித் ஷா பெயரைச் சொன்னால், பல இடங்களில் எதிர்ப்பு வருகிறது. அதனால், அவர்கள் பெயரைத் தவிர்த்துவிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களை முன்னிலைப்படுத்தச் சொல்லியிருக்கிறார்களாம்.

அதேபோல், தாமரைச் சின்னத்தை மட்டும் தொகுதி மக்களிடம் நன்றாக ரீச் செய்யும்படி சொல்லியிருக்கிறார்களாம். அந்த வகையில்தான், அரவக்குறிச்சியில் மோடி, அமித் ஷா பெயர்களை இப்போது தவிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாறாக, வேட்பாளர் அண்ணாமலையையின் பெருமைகளைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவருகிறார்கள். கர்நாடகாவில் அவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோது, மக்களுக்குச் செய்த பணிகள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது.

அண்ணாமலை பிரசாரம்
அண்ணாமலை பிரசாரம்
நா.ராஜமுருகன்

அதேபோல், அண்ணாமலையை ஜெயிக்கவைப்பதற்காக, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிப் பணியவைக்க சிலர் முயன்றதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில், கரூரிலுள்ள சில நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர்கள் அனைவரும் செந்தில் பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்கள் என்றும் சொல்லப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தது, பா.ஜ.க-தான் என்கிறார்கள்.

`அண்ணாமலை ஜெயிக்கணும். அதற்காக, தி.மு.க சார்பில் அரவக்குறிச்சியில் பெரிதாக வேலை நடக்கக் கூடாது. இல்லைன்னா, தேர்தலுக்குப் பிறகு பல்வேறு வகையில் உங்களை முடக்குவோம்’ என்று மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இன்னொருபக்கம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்ன தாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவற்றில், பள்ளப்பட்டியில் மட்டும் 29,000 இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. அண்ணாமலைக்கும், பள்ளப்பட்டி ஜமாத்துக்கும் ஆரம்பத்திலேயே `பஞ்சாயத்து' ஆனது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்குகள் மாற்றுக் கூட்டணி வேட்பாளர்களுக்கு விழும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதைச் சரிக்கட்ட, அமித் ஷா வரும் 1-ம் தேதி பள்ளப்பட்டியில் வாக்குகள் சேகரிக்கவிருக்கிறார்" என்றார்கள்.

ஆனால், பா.ஜ.க தரப்பிலோ,

``அண்ணாமலையின் வெற்றி, கண்முன் நன்றாகத் தெரிகிறது. தி.மு.க-வினர்தான் தோல்வி பயத்தில் கண்டதையும் கிளப்பிவிடுகிறார்கள். இங்குள்ள இஸ்லாமியர்களையும் தூண்டிவிட்டு, எங்களுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள். ஆனால், இங்குள்ள இஸ்லாமியர்கள் பிரசாரத்தின்போது, அண்ணாமலைக்கு குர்ரானை வழங்குவது, வாழ்த்துவது, திரளாகத் திரண்டு வந்து ஆதரவு தருவது என்று எங்களை உற்சாகப்படுத்திவருகிறார்கள்.

கரூர்: `எட்டப்பன் வேலை பார்த்தவர் செந்தில் பாலாஜி!' - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

அதனால் பயந்துபோன தி.மு.க-வினர், பா.ஜ.க., செந்தில் பாலாஜியை மிரட்டுவதாகவும், அவரோடு நெருக்கமானவர்களின் நிறுவனங்களில் ரெய்டு நடத்துவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் அவர்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடட்டும், அண்ணாமலையின் வெற்றியை எதனாலும், யாராலும் தடுக்க முடியாது" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு