Published:Updated:

`இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்களா?' - ப.சிதம்பரம் சாடலும் மிஷனரி முடக்க விவகாரமும்

மம்தா - அன்னை தெரசா - ப.சிதம்பரம்

``நாட்டில் ஏழைகளிலும் ஏழையான மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்ய முடியாமல் முடங்கியுள்ளது மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி. இது ஏழைகளின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதல்!'' என்கிறார் மம்தா பானர்ஜி.

Published:Updated:

`இந்துத்துவா படைகளின் புதிய இலக்கு கிறிஸ்தவர்களா?' - ப.சிதம்பரம் சாடலும் மிஷனரி முடக்க விவகாரமும்

``நாட்டில் ஏழைகளிலும் ஏழையான மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்ய முடியாமல் முடங்கியுள்ளது மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி. இது ஏழைகளின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதல்!'' என்கிறார் மம்தா பானர்ஜி.

மம்தா - அன்னை தெரசா - ப.சிதம்பரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடு முழுக்க அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட மதரீதியிலான தாக்குதல் மற்றும் வெறுப்பு பிரசாரங்கள் பதற்றத்தை ஏற்படுத்திவரும் சூழலில், 'முஸ்லிம்களுக்குப் பின் இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியுள்ளார்கள்' என்று ப.சிதம்பரமும் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பிவருகிறது.

அண்மையில், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் ஒரு மிஷனரி பள்ளியின் அருகே, சான்டா கிளாஸின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ஸாமில் இரண்டு வலதுசாரி இளைஞர்கள், அங்கிருந்த ஒரு சர்ச்சில் புகுந்து, பிரார்த்தனைக்கு இடையூறு ஏற்படுத்தி, அங்கிருந்த இந்துக்களை வெளியேறச் சொல்லியிருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை எரிப்பு
கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை எரிப்பு

ஹரியானாவில், கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தை, வலதுசாரி கும்பலைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அதே ஹரியானாவில், அம்பாலா மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிகாலையில், புனித ரெடீமர் சர்ச்சில் உள்ள இயேசு சிலையை இரண்டு பேர் உடைத்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவிவரும் சூழலில், கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்ட மனநிலை, சமூகரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்தும் சூழலாக உருமாறிவருகிறது.

இதற்கிடையே, 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி (Missionaries of Charity) வெளிநாடுகளிடமிருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, அரசியல்ரீதியான தாக்குதல்' என விமர்சிக்கப்பட்டுவருகிறது. நாடு முழுக்க ஏழைகளுக்கு உதவுவதற்காக அன்னை தெரசாவால், ஆரம்பிக்கப்பட்ட 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி' கொல்கொத்தாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவருகிறது. இந்த அறக்கட்டளையின் கிளைகள் மூலமாக நாடு முழுக்க 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துவரும் இந்த நலப்பணிகளுக்கு, வெளிநாடுகளிலிருந்து கிடைத்துவரும் நன்கொடைகளையே நம்பியிருக்கிறது மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி. ஆனால், வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகளைப் பெறுவதற்கான இந்திய அனுமதியை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்து அறக்கட்டளைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

அன்னை தெரசா
அன்னை தெரசா

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. சில வாரங்களுக்கு முன்புதான் 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பினர் கட்டாய மதமாற்றம் செய்வதாக குஜராத் மாநிலத்தில், வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது.

இந்த நிலையில், அடுத்த தாக்குதலாக அறக்கட்டளைக்கான வெளிநாட்டு நன்கொடைகளையே முடக்கும்விதத்தில் மத்திய அரசு செயல்பட்டிருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், ' மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் வங்கிக் கணக்குகள் எவற்றையும் மத்திய அரசு முடக்கவில்லை. அறக்கட்டளையின் லைசென்ஸைப் புதுப்பிப்பதில் மட்டும் சில சிக்கல்கள் உள்ளன' என மத்திய அரசுத் தரப்பிலிருந்து விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி-யின் லைசென்ஸ் புதுப்பிப்பிக்கப்படாத சூழலில், அந்த நிறுவனம் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற முடியாது. கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தையொட்டி மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், நாட்டில் ஏழைகளிலும் ஏழையான மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்ய முடியாமல் முடங்கியுள்ளது அறக்கட்டளை. இது ஏழைகளின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதல்!'' எனக் குமுறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கக் கோரும்போது, அதை அங்கீகரிக்காமல் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுக்க உள்ள ஏழை எளியவர்களுக்காகச் சேவை புரிந்துவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்.

ப.சிதம்பரம் - மம்தா பானர்ஜி
ப.சிதம்பரம் - மம்தா பானர்ஜி

இந்த விவகாரத்தில், கிறிஸ்தவத் தொண்டுப் பணிக்கு எதிராக முன்முடிவுடன்கூடிய பாகுபாட்டுடன் மத்திய அரசு நடந்துகொண்டிருப்பது தெளிவாகிறது. இந்த வகையில், முதலில் குறிவைக்கப்பட்டிருந்தவர்கள் முஸ்லிம்கள். இப்போது இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்தவர்கள் மாறியிருக்கிறார்கள்' என மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியின் அங்கீகாரத்தை மத்திய பா.ஜ.க அரசு புதுப்பிக்காததன் பின்னணி என்ன, 'இந்துத்துவா படையின் இலக்காக கிறிஸ்துவர்கள் மாறியுள்ளார்கள்' என்ற ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு பா.ஜ.க-வின் விளக்கம் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள பா.ஜ.க-வின் சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிமிடம் பேசியபோது, ''இந்திய தேசத்திலுள்ள அனைவரையும் அரவணைத்து, அவர்களது நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் உறுதுணையுடனேயே இந்த தேசத்தை வல்லரசாக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் தாரக மந்திரம். ஆனால், உத்தரப்பிரதேசத் தேர்தலை முன்வைத்து அரசியல்ரீதியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மீது தொடர்ந்து சுமத்திவருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.

உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர், 'இந்த நாட்டிலுள்ள எல்லோருமே பண்பாட்டினால் இந்துக்கள்' என்றார். இதை அப்போது எதிர்த்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், இன்று ராஜஸ்தானில் பேசுகிற ராகுல் காந்தி, 'இது இந்து நாடு' என்று இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகப் பேசுகிறார். கூடவே, 'இந்து வேறு இந்துத்துவா வேறு' என்றும் விளக்கமும் சொல்கிறார். உச்ச நீதிமன்றமே, 'இந்துத்துவா என்பது மதமல்ல... அது ஒரு வாழ்வியல் முறை' என்று சொல்லிவிட்டது. ஆக, இந்துத்துவா என்பது தேசிய கலாசாரத்தைக் குறிக்கும் சொல்தான் என்பதுகூட தெரியாதவர்களாகத்தான் ராகுல் காந்தியும் அவரின் கட்சியினரும் இருக்கின்றனர்.

`அறக்கட்டளை’ என்ற பெயரில், தேசத்துக்கு எதிரான வேலைகளை எந்த மதத்தினர் செய்துவந்தாலும் மத்திய பா.ஜ.க அரசு அவர்களின் செயல்பாட்டை முடக்கும். மற்றபடி மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்துவருபவர்களை ஒருபோதும் முடக்க மாட்டோம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், மேற்கு வங்க அரசியலில், பா.ஜ.க-வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மம்தா பானர்ஜிதான் இப்படியொரு பொய்யான பிரசாரத்தை ஆரம்பித்துவைத்தார்.

வேலூர் இப்ராஹிம்
வேலூர் இப்ராஹிம்

அறக்கட்டளையைப் புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களை ஒப்படைத்தால், தானாகவே லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுவிடும். மற்றபடி இதற்காக மத்திய அரசை யாரும் நாடவேண்டிய தேவையில்லை. இந்தவகையில், மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியை யாரும் முடக்கிவைக்கவில்லை என்பதை மத்திய அரசு ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்திவிட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனமும்கூட, 'நாங்களாகத்தான் எங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறோம்' என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், இவை எதையுமே தெரிந்துகொள்ளாமல், மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து விஷத்தைக் கக்கிவருகின்றனர்.

ஆசைவார்த்தை அல்லது பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றம். குஜராத்தில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் உள்ளது. அந்தவகையில், குஜராத்தில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லக் கூடாது. அதேபோல், அண்மையில் இந்துக்கள் என்ற பெயரில், ஒருசிலர் ஆர்வக்கோளாறால் ஆங்காங்கே செய்த அநாகரிகச் செயல்களை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக இந்துத்துவாவை குறை சொல்வதும் ஏற்புடையது அல்ல. எப்படி ஓர் இஸ்லாமியர் செய்த தவற்றுக்காக, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாகச் சித்திரித்துப் பேசுவது தவறோ அதேபோல்தான் இந்த விஷயத்தையும் பார்க்க வேண்டும். அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவோர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பா.ஜ.க அதை எதிர்க்கும்'' என்கிறார் விளக்கமாக.