Published:Updated:

கொரோனா பணிக்குச் சேர்க்கப்பட்ட செவிலியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

கொரோனா பேரிடர் சமயத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டவர்களை பணிநீக்கம் செய்கிறதா அரசு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``கருணையின் வடிவமாகவே செவிலியரைக் காண்கிறேன். அன்பு செலுத்து; அதை வெளிப்படுத்து. இந்த இரண்டும் இணைந்ததுதான் உங்களின் வாழ்க்கை. கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் செவிலியர்கள் அனைவரையும் மனதார, நெஞ்சார வாழ்த்துகிறேன்."

- செவிலியர்கள் தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கூறிய வார்த்தைகள் இவை. `அதே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில்தான் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்’ எனக் குமுறுகிறார்கள் செவிலியர்கள். அதோடு, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் அவர்கள் தங்குவதற்கும்கூட சரியான எந்த வசதியும் செய்யப்படவில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதல் அலையின் தாக்கத்தைவிட, இரண்டாம் அலையின் தாக்கம் மொத்த மாநிலத்தையும் நிலைகுலையவைத்தது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 36,000-க்கும் அதிகமாகச் சென்றது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிகழ்வையெல்லாம் நாம் கண்டோம். ``தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பதால், போர்க்கால அடிப்படையில் தடுப்புப் பணிகளை விரிவுபடுத்தியிருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகம் தேவை. அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு கொரோனா தடுப்புப் பணிக்காக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மருத்துவத்துறை அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, மருத்துவத்துறை சார்பிலும், மாவட்ட அளவிலும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அந்தந்தப் பகுதிக்கு ஏற்றாற்போல் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. இப்படி பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாதம் 12,000 முதல் 14,000 ரூபாய்வரை சம்பளம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான செவிலியர்களும் தனியார் மருத்துவமனைகளில் தாங்கள் பார்த்த பணியிலிருந்து விலகி இந்தப் பணியில் சேர்ந்தனர். காரணம், அரசு வேலை என்பதால், பணி நிரந்தரமாக இருக்கும் என்பதால்தான்.

செவிலியர்
செவிலியர்

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறையவே, கடந்த இரண்டு மாதங்களாக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 63 பேர், மதுரை தோப்பூர் மருத்துவமனையில் கொரோனா பணியிலிருந்த செவிலியர்கள் 25 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 15 செவிலியர்கள் உட்பட 27 பேர், தருமபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா பணியில் கடந்த ஓர் ஆண்டாக பணியாற்றிய 20-க்கும் மேற்பட்டோர் என்று தமிழகம் முழுவதும் கொரோனா பணிக்காகத் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுச்செயலாளர், நே.சுபினுடன் பேசினோம். ``கொரோனா முதல் அலை சமயத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்திருக்கிறது அரசு. கொரோனா பணிக்காக AD-HOC முறையில் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணியை அரசு நீட்டிப்பு செய்திருக்கிறது. ஏற்கெனவே ஒப்பந்த முறையில் 12,000 செவிலியர்கள் பணியிலிருந்த நிலையில் 1,212 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்திருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கை 356-ல் குறிப்பிட்டிருப்பதுபோல அனைத்துச் செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றார்.

நே.சுபின்
நே.சுபின்

மேலும், ``ஏற்கெனவே ஒப்பந்தப் பணியில் இருக்கும் செவிலியர்கள் இரண்டு வருடங்களில் பணி நிரந்தம் செய்யப்படுவார்கள் என்று 2015-ம் ஆண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட நிலையில், ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதேபோல தற்போது இந்தச் செவிலியர்கள் அனைவருக்குமே குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டுவருகிறது. அவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் கொரோனா பணி செய்யும் தற்காலிக செவிலியர்களுக்குச் சரியான தங்கும் இடமும் உணவும் கிடைப்பதில்லை என்ற புகார்கள் வருகின்றன. அந்தச் செவிலியர்கள் அனைவருக்குமே தங்கும் இடம், உணவு கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். தற்காலிக செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தற்போது சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரியும் ஒருவரிடம் பேசினோம். தற்போது பணியில் இருப்பதால் பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு பேசினார். ``நான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அரசு வேலை என்பதால் இங்கு பணிக்குச் சேர்ந்தேன். கொரோனா பணிக்காக எங்களைப் பணியமர்த்தினார்கள். கொரோனா வார்டில், மற்றவர்களைக் காட்டிலும் எங்களுக்குத்தான் அதிக பணி வழங்கப்படும். மாதச் சம்பளம் 14,000 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. கொரோனா நேரத்தில் தங்க இடம், உணவு எல்லாம் வழங்கப்பட்டன. தற்போது இரண்டுமே கிடையாது. வெளியில் தங்கிக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனைத் தரப்பில் கூறிவிட்டனர்" என்றார்.

கொரோனா சிகிச்சை பிரிவு
கொரோனா சிகிச்சை பிரிவு
மாதிரிப் படம்

தொடர்ந்து பேசியவர், ``நான் தூத்துக்குடியிலிருந்து இங்கு வந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். வாங்கும் சம்பளமே மிகவும் குறைவு. இதில் வெளியில் தங்கிக்கொள்வது என்றால் வாங்கும் சம்பளம் அனைத்தும் இதற்கே சரியாகப் போகும். அதோடு, செவிலியர் கொரோனா பணி என்றால் விடுதியிலும், வாடகைக்கு வீடும் கொடுக்கத் தயங்குகிறார்கள். இந்த கொரோனா காலத்தில் எவ்வளவோ ஆபத்துகளைத் தாண்டிப் பணியாற்றுகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட செய்துகொடுக்கவில்லை என்றால் என்ன நியாயம்? இதற்கு ஒரு நல்ல தீர்வை அரசுதான் சொல்ல வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதேபோல, கொரோனா பேரிடரின்போது அவசரநிலையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தொகுப்பூதிய பணியாளர்களாகக் கருத வேண்டும்" என்று வேதனையுடன் பேசினார்.

`உயிரைப் பணயம்வெச்சு பார்த்துகிட்டாங்க!' - செவிலியர்கள் பாதங்களில் பூ தூவிய வழக்கறிஞர்

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``தமிழகத்தில் செவிலியர்களுக்குப் பணி நியமனம் வழங்கும்போது, தற்போது கொரோனா பணியில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே ஒப்பந்தம் முடிந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதைப் பொறுத்தவரை, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களின் பெயர் பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது" என்றார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

மேலும், ``இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். செவிலியர்கள் தங்கும் இடத்தைப் பொறுத்தவரை, கொரோனா பேரிடர் காலங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அரசு சார்பில் இடம் ஏற்பாடு செய்துதரப்பட்டது. தற்போது நிலைமை சரியாகிக்கொண்டிருக்கிறது. எனவே தங்கும் இடங்களை அவர்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்குப் பணி நியமனத்தில் கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும்" என்று கூறினார்.

கொரோனா வைரஸ் உருமாற்றம்: ஏன் இந்த வைரஸ் மட்டும் நமக்கு சவாலாக இருக்கிறது?

தற்காலிக செவிலியர்கள் பணிநீக்கம் ஒருபுறமிருக்க, தற்போது கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தங்குவதற்கும், உணவு வசதியையும் அரசு கண்டிப்பாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு