திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாள்கள் பயணமாக வந்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை கொடைக்கானலுக்கு மனைவியுடன் வந்த அவர், பாம்பார்புரம் சாலை வழியாக ஏரி சாலைப் பகுதியில் வாகனத்தில் வந்தார். நேற்று கொடைக்கானல் அப்சர்வேட்டரி தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ரோஜா பூங்கா மற்றும் அப்சர்வேட்டரி வான் இயற்பியல் ஆய்வு மையத்தைப் பார்வையிட்டார். அப்போது பூங்கா பராமரிப்பு பணியாளர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து, அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பழங்குடியினர் பாரம்பர்ய இசையுடன் நடனமாடி வரவேற்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் வரவேற்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பழங்குடியினர் குடிலுக்குள் சென்று அவர்களுடன் உரையாடினார்.

இதைத்தொடர்ந்து வளாகத்திலுள்ள அன்னை தெரசா சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு பல்கலைக்கழக நிர்வாகிகள், பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதற்கிடையே, பாரம்பர்ய இசைக்கருவிகளை இசைத்து நடனமாடி வரவேற்பளித்த குழுவினருடன் கலந்துரையாடினார். இது குறித்து நம்மிடம் பேசிய பழங்குடியினத்தைச் சேர்ந்த லிலாவதி, ``ஆளுநர் கொடைக்கானல் வாழ் பழங்குடிகள் பற்றியும் அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டார். கொடைக்கானலிலுள்ள 17 பஞ்சாயத்துக்களில் 5,000 பளியர் இன மக்களும், 5,000 புழையர் இன மக்களும் வசிப்பதாகத் தெரிவித்தேன்.

`எல்லோரும் பாரம்பர்ய உணவு முறைகளைப் பின்பற்றுகிறீர்களா?’ எனக் கேட்டார். பாரம்பர்ய சிறுதானிய உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிட்டு வந்த எங்களின் உணவு முறை மாறிவிட்டது. அதற்கு முக்கியக் காரணம் நிலப் பிரச்னையால் விவசாயம் செய்ய முடியாததுதான். எனவே, எங்களுக்கு 2006 வனஉரிமைச் சட்டப்படி கிடைக்க வேண்டிய நில உரிமை உள்ளிட்ட சலுகைகளை முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றேன்.
பழங்குடியினர் அதிகமாக குழந்தைத் திருமணம் செய்துகொள்வது குறித்து கேள்வியெழுப்பினார். படிப்பு இல்லாத காரணத்தால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைத் திருமணம் நடந்தது எனவும், தற்போது குழந்தைகள் படிக்கத் தொடங்கிவிட்டதால் குழந்தைத் திருமணம் நடப்பது இல்லை என்றோம்.

பழங்குடியினர் கல்வி குறித்தும் ஏகலைவா பள்ளிகள் உள்ளனவா என்றும் கேட்டார். பழங்குடிகள் அதிகமுள்ள சில பகுதிகளில் அரசுத் தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் இல்லை என்றோம். அனைத்தையும் கவனத்தில் கொண்டிருப்பதாகவும், கடைசியாக என் மகன் ராஜேஸிடம் எங்களின் கோரிக்கைகள் குறித்துப் பேச நேரில் வந்து சந்திக்குமாறு கூறிவிட்டுச் சென்றார்” என்றார்.