Published:Updated:

` இதென்ன பீட்ஸா டெலிவரியா?!' - அடுத்தடுத்த மசோதா தாக்கலால் கொதித்த திரிணாமுல் எம்.பி!

மலையரசு

மசோதாக்களை நிறைவேற்றியதில் கடந்த 15 வருடங்களில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். அதற்குக் காரணமும் இருக்கின்றது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( twitter )

இரண்டாவது முறை ஆட்சி... 303 உறுப்பினர்கள்.... எனப் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் பா.ஜ.க 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. எந்தமுறையும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்தமுறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டியது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா
twitter

ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாத மசோதாக்களை எல்லாம் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. இதைக் கடந்த 15 வருடங்களில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். அதற்கு காரணமும் இருக்கின்றது.

2004 முதல் 2014 வரை... அதாவது 14-வது லோக் சபா முதல் 16-வது லோக் சபாவின் முதல் (பட்ஜெட்) கூட்டத் தொடரை எடுத்துக் கொள்வோம். 2004-ல் நடந்த 14-வது லோக் சபாவில் முதல் கூட்டத்தொடரில் 6 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. அடுத்து 2004-ல் நடந்த 15-வது லோக் சபாவில் எட்டும், 2014-ல் நடந்த 16-வது லோக் சபாவில் 12 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மோடி
மோடி
twitter

ஆனால் தற்போது தொடங்கியுள்ள இந்தக் கூட்டத்தொடரில் ஆர்.டி.ஐ சட்டத் திருத்தம், முத்தலாக், சுங்கச்சாவடி, என்.ஐ.ஏ என இதுவரை 20-க்கும் அதிகமான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 14. இன்னும் 10 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26-ம் தேதியே முடிவடைய இருந்த நிலையில் அதை ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

``முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைகிறது!'' - மோடி

நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்துக்கும் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழாமல் இல்லை. `மசோதாக்களை உரிய ஆய்வு செய்த பிறகே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறி எதிர்த்தாலும், `அந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு மத்திய அரசு இப்படிச் செய்து வருகிறது' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், `நாடாளுமன்றம் அனைத்து மசோதாக்களையும் ஆராய வேண்டும். ஆனால் தற்போது நடைபெற்றுவரும் அமர்வு அதை அழித்து வருகின்றது.

டெரிக் ஓ பிரையன்
டெரிக் ஓ பிரையன்
twitter

நாம் பீட்சா டெலிவரி செய்கிறோமோ அல்லது சட்டத்தை நிறைவேற்றுகிறோமா?" எனக் கேள்வி எழுப்பியதுடன் கூடவே தனது ட்விட்டரில் கடந்த ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து ஒரு விளக்கப் படத்தையும் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரையன், இதே கருத்தைக் கூறினார். அதில், `எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு செயல்படுகிறது. மசோதாக்களை நாடாளுமன்றம் ஆராய வேண்டும். ஒரு மசோதாவை ஆராய்வதற்கான நேரம் தேவை. நாம் டி -20 போட்டியில் விளையாடவில்லை' எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.