Published:Updated:

`ஜாலியன் வாலாபாக் நினைவுக்கு வருகிறது; பற்ற வைத்து விடாதீர்கள்!’ - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

``இளைஞர்கள் ஆத்திரமடைந்தால் நாடும் மாநிலமும் அமைதியாக இருக்காது'' என உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

டெல்லி காவல்துறையினர் மாணவர்களிடம் நடந்துகொண்ட விதம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்துகிறது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்து போலீஸார் மீது கற்களைக் கொண்டு தாக்கினர். இதன்காரணமாகவே பல்கலைக்கழகத்துக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே இவ்வாறு செயல்பட்டோம் என காவல்துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசியுள்ள உத்தவ் தாக்கரே, ``டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸார் நுழைந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தியது, எனக்கு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்தியது. ஜாலியன் வாலாபாக் போன்ற சூழலை இங்கே உருவாக்கி மாணவர்களிடம் பயத்தை விதைக்கப் பார்க்கிறீர்களா?

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இளைஞர்கள் ஆத்திரமடைந்தால் நாடும் மாநிலமும் அமைதியாக இருக்காது. இளைஞர்கள்தான் நம்முடைய பலமே. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாம் இருப்போம். இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதைப் பற்ற வைத்து விடாதீர்கள் என பிரதமரிடம் மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.