Election bannerElection banner
Published:Updated:

குமரி: பத்மநாபபுரம் தொகுதியைக் கேட்கும் அர்ஜுன் சம்பத்... அதிமுக இழுபறிக்கு மூன்று காரணங்கள்!

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

``பத்மநாபபுரம் தொகுதி தமிழகத்தில் பா.ஜ.க முதலில் கால்பதித்த தொகுதிதான். ஆனாலும் பா.ஜ.க போட்டியிடுவதற்கு முன்பே இந்து இயக்கங்கள் சார்பில் வை.பாலச்சந்தர் என்பவர் 1984-ல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்" என்கிறார் அர்ஜுன் சம்பத்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் தொகுதியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதில் இழுபறி நீடிபதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள்.

அங்கு ஓ.பி.எஸ்-ஸும், இ.பி.எஸ்-ஸும் தங்கள் ஆதரவாளரை வேட்பாளராகப் போட வேண்டும் என முயல்வதால் ஏற்படும் பிரச்னை என்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

`அதே சமயம், நீலகிரித் தொகுதியை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பத்மநாபபுரத்தை எங்களுக்கு ஒதுக்குங்கள்’ என பா.ஜ.க தரப்பு அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுப்பது மற்றொரு காரணம் என்கிறார்கள்.

ஆனால் இந்த இழுபறிகளுக்கு இடையில் புகுந்து தனக்கு சீட் வேண்டும் என அ.தி.மு.க தலைமைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரஷர் கொடுப்பது மூன்றாவது காரணம் எனப் புதுத்தகவல் கிளம்பியிருக்கிறது. பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட அர்ஜுன் சம்பத் முயல்வதாகவும், அதற்காக அ.தி.மு.க தலைமையிடம் பேசுவதாகவும் தொகுதி முழுக்கப் பேச்சு ஒடுகிறது.

பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை
ஃபைல் படம்

இது பற்றி அர்ஜுன் சம்பத்திடமே பேசினோம். ``நாங்கள் ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம். அ.தி.மு.க கூட்டணியில் இந்து மக்கள் கட்சிக்கு ஐந்து சீட்டுகள் கேட்டிருந்தோம். ஆனால் எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனவே, ஒரு சீட்டாவது கொடுங்கள். அதுவும் பத்மநாபபுரம் தொகுதியைக் கொடுங்கள் என அ.தி.மு.க தலைமையிடம் கேட்டிருக்கிறேன். அங்கு அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடவும் நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

பத்மநாபபுரம் தொகுதி தமிழகத்தில் பா.ஜ.க முதலில் கால்பதித்த தொகுதிதான். ஆனாலும் பா.ஜ.க போட்டியிடுவதற்கு முன்பே இந்து இயக்கங்கள் சார்பில் வை.பாலச்சந்தர் என்பவர் 1984-ல் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள 40 சதவிகித இந்துக்களில் 25 சதவிகிதம் இருக்கும் கிருஷ்ண வகைச் சமுதாய மக்களும், இந்து நாடார் மக்களும் என்மீது எப்போதும் அன்புகொண்டவர்கள்.

ஓ.பி.எஸ் - எடப்பாடி
ஓ.பி.எஸ் - எடப்பாடி

எனவேதான் நான் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க தலைமையில் சீட் கேட்கிறேன்" என்றார். பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று மதியத்துக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பா.ஜ.க-வுக்கு போகுமா, அர்ஜுன் சம்பத்துக்குப் போகுமா அல்லது அ.தி.மு.க போட்டியிடுமா என்ற குழப்பத்துக்கு முடிவு தெரிந்துவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு