Published:Updated:

`இனியும் இந்த ஏழைத்தாயை ஏமாற்றவேண்டாம்!’ - கண்ணீர்விட்டு அழுத அற்புதம்மாள்

`உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மீறி நாங்கள் எந்த நீதிமன்றத்துக்கு செல்லமுடியும்; என் மகனுக்காக 28 ஆண்டுக்காலமாக போராடிவருகிறேன்.’

அமித்ஷாவிடம் மனு அளித்த அற்புதம்மாள், திருமாவளவன்
அமித்ஷாவிடம் மனு அளித்த அற்புதம்மாள், திருமாவளவன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க கோரி பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். அப்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி மனு ஒன்றையும் அளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி-க்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அமித்ஷா
அமித்ஷா
ANI

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், ``உச்சநீதிமன்றம் ஆளுநர் ஒப்புதலுடன் விடுதலை செய்யலாம் என்று அறிவுறுத்தியது. விடுதலையாகிவிடுவார்கள் என நம்பினேன். ஆனால், அப்பவும் விடுதலையாகவில்லை. 10 மாதங்கள் கடந்த பின்பும் ஆளுநர் கையொப்பம் இடவில்லை. அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், உள்துறை அமைச்சகத்தைச் சந்திக்கலாம் என முடிவெடுத்தோம்.

அப்போதுதான், தம்பி திருமாவளவனிடம் கூறினேன். `நான் ஏற்பாடு செய்றேன்மா’ எனக் கூறினர். அதனடிப்படையில்தான் நான் இங்கு கிளம்பிவந்துள்ளேன். 28 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பின்பும், என் மகன் வாழ்க்கை சிறையிலே கழிகிறது. விடுதலை என்று அறிவிக்கப்பட்ட ஒரு வழக்கில், சிறையிலிருக்கும் சிறையாளிகள் இவர்களாகத்தான் இருப்பார்கள். நான் கட்சி சார்பற்று எல்லாரையும் சந்திக்கிறேன்.

பெற்றோருடன் பேரறிவாளன்
பெற்றோருடன் பேரறிவாளன்

`என் மகனுக்கு விடுதலை கிடைக்கணும். அவனுக்கு ஒரு வாழ்க்கை வேணும்’ என்று ஒரு அம்மாவா நான் போராடுறேன். அந்த வகையில் இந்த முயற்சியும் மேற்கொண்டுள்ளேன். அமித் ஷா எங்களை வரவேற்றார். நன்றாகத்தான் பேசினார். எங்கள் தரப்பு நியாயத்தைக் கோரிக்கையாக கொடுத்திருக்கிறோம். தியாகராஜனைப் பற்றியெல்லாம் நாங்கள் அதில் கூறி, விளக்கிச் சொல்லியிருக்கிறோம்.

இங்கே வந்த தகவல் ஆளுநருக்கும் போகும் என்று சொல்கிறார்கள். ஆளுநர் ஒரு கையொப்பமிட்டால் எல்லோருக்கும் விடுதலை கிடைக்கும். இனிமேலும் இந்த ஏழைத்தாயை யாரும் ஏமாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் நான் வைக்கிறேன். இனி நீதிமன்ற படி ஏறாதீங்க, எல்லா வழக்கும் முடிஞ்சுடுச்சு, ஆளுநர் கையொப்பமிட்டால் விடுதலை என்று கூறிவிட்டது.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

அப்படியிருக்கும்போது உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மீறி நாங்கள் எந்த நீதிமன்றத்துக்குச் செல்லமுடியும். கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்று அமித் ஷா கூறினார். அடுத்த மாதம் நான் மீண்டும் தமிழக முதல்வரை சந்திப்பேன்” என்று பேசிய பின்னர் கண்ணீர்விட்டு அழுதார்.