Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்; களத்தில் மிரட்டப்படுகிறார்களா எதிர்க்கட்சி வேட்பாளர்கள்?

சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏலத்தில் விடப்படுவதாகவும், பல இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில், ஆளுங்கட்சியினர் தங்கள் வேட்பாளரை மிரட்டுவதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர் எதிர்க்கட்சியினர். மேலும், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ளாமல், நியாயமாகத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் குரல் எழுப்பிவருகின்றனர்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதோடு காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 23-ம் தேதி கடைசி நாளாகவும், வேட்புமனுவைத் திரும்பப்பெற 25-ம் தேதி கடைசி நாளாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் நடைபெறவுள்ள பல இடங்களில், எதிர்க்கட்சி வேட்பாளர்களை, ஆளுங்கட்சியினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற நிர்பந்தித்ததாக புகார்கள் எழுந்தன. தொடர்ந்து வேட்பாளர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கமல்
கமல்

'உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி அராஜகம் ஆரம்பம்' என்கிற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியானது. அதில் `சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திலுள்ள வார்டு எண் 9-ல் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், உள்ளூரிலுள்ள தி.மு.க முக்கியப் பிரமுகர் விடுத்த கடும் மிரட்டல் காரணமாகவே, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தனது வேட்புமனுவை (24-09-2021) வாபஸ் பெற்றுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்தவரும், ஆட்டோ தொழிலாளியுமான ம.நீ.ம வேட்பாளர், ஆளுங்கட்சியினரின் மிரட்டலுக்கு எதிராகப் புகார் கொடுத்தால் தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் வருமோ என்ற அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்.

இது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்கு. சட்டத்தின் ஆட்சிதான் இங்கே நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு வலுக்கிறது. ஏற்கெனவே சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏலத்தில்விடப்படுவதாகவும் பல இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. எளிய மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவேண்டிய ஆளுங்கட்சியானது, தனது ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சீமான்
சீமான்

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ``எங்கள் கட்சி வேட்பாளர்கள் ஒருசிலரை வேட்புமனு வாபஸ் பெறும் நாள் முடியும்வரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தோம். அப்படிப் பாதுகாக்கப்பட்ட தம்பி ஒருவனின் பெற்றோரை மிரட்டி, அவன் கடையில் யாரும் பொருள்கள் வாங்கக் கூடாது என ஊர் மக்களையும் மிரட்டியிருக்கிறார்கள்'' எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார். அ.தி.மு.க சார்பிலும் இது போன்ற குற்றச்சாட்டுகள் பல இடங்களில் முன்வைக்கப்படுகின்றன.

ஆளுங்கட்சியின் மீது வைக்கப்பட்டும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா இல்லை அரசியல்ரீதியாக இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்.

``எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்பட்டது உண்மை. தற்போதும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறார்கள். காலம் காலமாக இரண்டு கட்சிகளும் இதைத்தான் செய்து வருகின்றன. மாநிலத் தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக்கி தங்களுக்கான காரியங்களை ஆளும் தரப்பில் இருப்பவர்கள் சாதித்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, உள்ளூரில் செல்வாக்குடைய முக்கியப் பிரமுகர்கள், எதிர்த்து நிற்கும் மற்ற கட்சிகளின் எளிய வேட்பாளர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தி, அவர்களின் மூலமே வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில்தான் முன்பு இது போன்ற அராஜகங்களைச் செய்வார்கள். ஆனால், இந்தமுறை, ஒன்றிய, மாவட்டக் கவுன்சிலர் இடங்களில் போட்டியிடுபவர்களுக்கும் இது போன்ற நெருக்கடிகள் தரப்படுகின்றன. மிகவும் போராட்டமாகத்தான் தேர்தல் களம் இருக்கிறது'' என்கிறார் அவர்.

பாக்கியராசன், முரளி அப்பாஸ் -உள்ளாட்சித் தேர்தல்
பாக்கியராசன், முரளி அப்பாஸ் -உள்ளாட்சித் தேர்தல்

ஆனால், ``ஆளுங்கட்சி மட்டுமல்ல, அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் எங்கள் வேட்பாளர்களுக்கு நெருக்கடிகள் தருகிறார்கள்'' என்கிறார் நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன். அவர் பேசும்போது,

``எங்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலிருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சியில் சசிரேகா என்கிற பெண் வேட்பாளராக நிற்கிறார். அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போதுதான் ஊர் திரும்பியிருக்கிறார். அவரை, ``எங்கேயோ இருந்துவிட்டு இங்கு வந்து தேர்தலில் நிற்கிறாயா, மரியாதையா வாபஸ் வாங்கிக்கொள்'' எனக் கடுமையாக மிரட்டியிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்திலும் பல இடங்களில் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 27 மாவட்டங்களுக்கு நடந்த தேர்தலைவிட, தற்போது அதிகமாக அழுத்தம் தரப்படுகிறது. காவல் நிலையத்தில் இது குறித்துப் புகாரும் அளித்திருக்கிறோம். ஆனால், சரியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை'' என்கிறார் அவர்.

உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு

அ.திமு.க-வின் மீதான குற்றச்சாட்டு குறித்து, அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``ஒவ்வொரு வார்டிலும் நூறு பேருக்கு மேல் அ.தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். அதிகமான பெண் உறுப்பினர்களைக்கொண்ட இயக்கமும் அ.தி.மு.க-தான். அதனால், யாரையும் மிரட்டி வாக்கு வாங்கவேண்டிய அவசியம் எங்கள் கட்சிக்குக் கிடையாது. அதேவேளையில், ஆளுங்கட்சிக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனால், மக்கள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை. அதனால் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சத்தில், அதிகாரிகளைக் கையில்வைத்துக்கொண்டு, ஆளுங்கட்சியினர் தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுவதாகத் தெரிகிறது. அதை முறியடிப்பதற்கு அதிமுக கடுமையான முயற்சிகளைச் செய்துவருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாந்ததுபோல மக்கள் இந்தமுறை ஏமாற மாட்டார்கள்'' என்கிறார் அவர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ் 

உள்ளாட்சித் தேர்தல்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - செல்வராஜ் உள்ளாட்சித் தேர்தல்

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டைன்டன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``தோல்வி பயத்தின் உச்சம்தான் இது போன்ற குற்றச்சட்டுகள். தேவையில்லாமல் ஆளுங்கட்சியைக் குறை சொல்லிவருகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் அவர்களின் பார்வைக்கு வந்த புகார்களின் மீது முறையான நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஒருசிலர், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, அவர்களாகவே விருப்பப்பட்டு எங்கள் கட்சியில் சேர்ந்துவருகிறார்கள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகிறார்கள். காவல்துறையில் புகாரளித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதற்கான ஆதாரத்தை எதிர்க்கட்சியினர் வெளியிட வேண்டும். பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் கருத்து சொல்லக் கூடாது. தேர்தல் நடைபெறும் எங்கும் இவர்கள் சொல்வதைப் போன்ற விஷயங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. தி.மு.க-வின் வெற்றி உறுதியாகிவிட்டது, தங்கள் தோல்விக்கு மக்கள் மத்தியில் சொல்லக் காரணங்களைத் தேடி, அவற்றைத் தேர்தலுக்கு முன்பே பரப்பிவருகிறார்கள் அவ்வளவுதான்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு