Published:Updated:

சண்டிகரில் முத்திரை பதித்த ஆம் ஆத்மி... பஞ்சாப் தேர்தலில் வாகை சூடுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!

அரவிந்த் கெஜ்ரிவால்
News
அரவிந்த் கெஜ்ரிவால்

சண்டிகர் மாநகராட்சியில், பா.ஜ.க., காங்கிரஸை ஓரங்கட்டி தனது முதல் தேர்தலிலேயே அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி. மாற்றத்துக்குத் தயாராகிவிட்டதா பஞ்சாப்?

மம்தா, கெஜ்ரிவால் என இருவரும் தங்களது கட்சியைத் தேசியக் கட்சியாக மாற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டுவருகிறார்கள். இதன் காரணமாக, மற்ற மாநிலங்களில் கால்பதிக்கும் முயற்சிகளில் இரண்டு பேருமே மும்முரம் காட்டிவருகின்றனர். இந்த நிலையில், சண்டிகரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸை ஓரங்கட்டி, அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பஞ்சாப், ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்துவருகிறது சண்டிகர். பஞ்சாபில் காங்கிரஸும், ஹரியானாவில் பா.ஜ.க-வும் ஆட்சி செய்துவருகின்றன. அப்படியிருக்கையில், இந்த இரண்டு கட்சிகளைவிடவும் அதிக வார்டுகளைக் கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி. சண்டிகர் மாநகராட்சியிலுள்ள 35 வார்டுகளில், 14 வார்டுகளை ஆம் ஆத்மியும், 12 வார்டுகளை பா.ஜ.க-வும், 8 வார்டுகளை காங்கிரஸும் கைப்பற்றியிருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சண்டிகரில், தாங்கள் சந்தித்த முதல் மாநகராட்சித் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்திருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த அந்தக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ``பஞ்சாப் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைத்தான் சண்டிகர் மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஊழல் அரசியலை நிராகரித்து, ஊழலற்ற ஆம் ஆத்மியை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்'' என்றிருக்கிறார்.

பஞ்சாப் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது!
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ ராகவ் சத்தா, ``இது வெறும் டிரெய்லர்தான். மெயின் பிக்ச்சரை பஞ்சாப் தேர்தலில் பார்க்கலாம். சண்டிகர் மக்களின் மனநிலைதான் பஞ்சாப் மக்களின் மனநிலையும்கூட'' என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்!

சண்டிகரைப் பொறுத்தவரை எப்போதும், காங்கிரஸ், பா.ஜ.க இடையேதான் போட்டி நிலவும். ஆனால், இதுவரை சீனில் இல்லாத ஆம் ஆத்மி, இந்த முறை அதிக இடங்களில் வென்றிருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். `இந்த வெற்றியை மக்கள் முன் நிறுத்தி, நாங்கள்தான் மாற்று' என ஆம் ஆத்மி கட்சியினரும் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

முந்தைய தேர்தலின்போது, சண்டிகர் மாநகராட்சியில் 26 வார்டுகள்தான் இருந்தன. இவற்றில் 20 இடங்களில் வென்று சண்டிகர் மாநகராட்சியை எளிதாகக் கைப்பற்றியது பா.ஜ.க. அகாலி தளம் கட்சிக்கு தற்போதைய தேர்தலைப்போலவே, அப்போதும் ஓர் இடம்தான் கிடைத்தது. காங்கிரஸ் நான்கு இடங்களில் வெற்றிகண்டது. வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததன் விளைவாக, சண்டிகரில் பா.ஜ.க பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டாலும் விவசாயிகள், பா.ஜ.க-மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பஞ்சாபில், ஆம் ஆத்மிக்குக் கைகொடுக்குமா சண்டிகர் வெற்றி?

``சண்டிகரில், தனது முதல் தேர்தலிலேயே 40 சதவிகித இடங்களைப் பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி. அதேநேரத்தில், 43 சதவிகித இடங்களை இழந்திருக்கிறது பா.ஜ.க. இது நிச்சயம் பஞ்சாபில், ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வளர்ச்சியையே காட்டுகிறது. `ஆம் ஆத்மி பஞ்சாபில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும்' என்பதையே சமீபத்திய கருத்துக்கணிப்புகள் பலவும் சொல்கின்றன. மத அவமதிப்பு விவகாரம், நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு, உட்கட்சிப்பூசல் என ஆளும் காங்கிரஸ்மீது தொடர்ந்து அதிருப்தி ஏற்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துகொண்டேயிருக்கின்றன. இதுவும் ஆம் ஆத்மிக்கு ப்ளஸ்ஸாக அமைந்திருக்கிறது.

மேலும், அண்மையில் பஞ்சாப் விவசாயிகள் அடங்கிய 22 விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து புது அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியிருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்தில், இவர்கள் ஆம் ஆத்மியுடன் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஆம் ஆத்மி கட்சி அவர்களோடு கைகோத்தால், அது அந்தக் கட்சிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தச் சூழலில், சண்டிகரில் ஆம் ஆத்மி பெற்றிருக்கும் வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி ஆம் ஆத்மி தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என தற்போது வரை முடிவெடுக்காமல் இருக்கும் மக்கள் மத்தியில், இந்த வெற்றியை முன்னிறுத்தி, `நாங்கள்தான் மாற்று' என்று ஆம் ஆத்மி முன்வைக்கும் பிரசாரங்கள் எடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. எனவே, நிச்சயம் இந்த வெற்றி பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு உதவியாக இருக்கும். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குக் கைகொடுக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.