Published:Updated:

`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்!' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்?

பட்னாவிஸ் - அஜித் பவார்
பட்னாவிஸ் - அஜித் பவார்

தனக்காக பதவியை துறந்த அஜித்தை பதவியின் உச்சாணி கொம்பில் உட்கார வைத்து அழகுபார்த்தார் சரத்பவார். மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகுதான் அவருக்கு ஏறுமுகம்.

அஜித் பவார்... இந்த ஒற்றை பெயர் இன்று காலை முதல் மகாராஷ்ட்ராவை தாண்டி தேசிய அரசியலில் புயலாக பேசப்பட்டு வருகிறது. தனது கட்சியின் எதிரியாக செயல்பட்டுவந்த பாஜக-வுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் அரியணையில் அமர்ந்து ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் இந்த அஜித் பவார். வழக்குகளை காரணம் காட்டி அஜித்தை பா.ஜ.க, தங்கள் வலைக்குள் கொண்டுவந்துவிட்டதாக சரத் பவார், சிவசேனா குற்றம் சாட்டி கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மையா என்பதை அறிவதற்கு முன்பு அவரின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அஜித் பவார்
அஜித் பவார்
twitter

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் அனந்த்ராவின் மகன்தான் அஜித் பவார். கட்சியினர் மத்தியில் அஜித் `தாதா' பவார் (தாதா - மராத்தியில் மூத்த சகோதரர்) என அழைக்கப்படும் அஜித் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாகத் தந்தை இறந்ததால், படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, தன் குடும்பத்தைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். பாலிவுட் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக அனந்த்ராவ் பணிபுரிந்தாலும், தந்தையின் வழியில் திரைத்துறையை தேர்ந்தெடுக்காத அஜித் பரம்பரை தொழிலான கூட்டுறவு சர்க்கரை ஆலை மீது கவனம் செலுத்தத் தொடங்கினர்.

`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்!- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி

இதே காலகட்டத்தில்தான் சரத்பவார் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புள்ளியாக உருவாகி கொண்டிருந்தார். இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட அஜித் பவார், சரத்பவாரின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கினார். ஆம்... அப்போதுதான் அரசியல் என்ட்ரி கொடுத்தார் அஜித் பவார். மகாராஷ்டிராவின் மிக முக்கிய விவசாயமான கரும்பு உற்பத்தியில் கொடிகட்டி பறந்தது பவார் குடும்பம். அந்த தொழிலையொட்டியே அவருக்கு முதல் பதவி தேடிவந்தது. 1982-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தவர் அதே ஆண்டே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவராக நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அந்த பதவியில் நீட்டித்தார்.

சரத் பவார் - அஜித் பவார்
சரத் பவார் - அஜித் பவார்
twitter

அப்பதவியில் இருக்கும்போதே நாடாளுமன்றத் தேர்தல் வர பவார் குடும்பத்தின் கோட்டையான பாரமதி தொகுதியில் வென்று டெல்லி சென்றார். முதல்முறை மக்கள் பிரதிநிதி அந்தஸ்து கிடைத்தாலும் அது நீண்ட நாளுக்கு நீட்டிக்கவில்லை. அப்போதைய நரசிம்மராவ் அமைச்சரவையில் சரத்பவார் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட, அரசியலில் தன்னை அழைத்துவந்த சித்தப்பாவுக்காக அப்போது எம்பி பதவியை துறந்தார் அஜித் பவார். அப்போது டெல்லி அரசியலுக்கு முழுக்கு போட்ட அஜித் பவார் அதன்பிறகு மாநில அரசியலிலேயே முழு கவனம் செலுத்தினார். தனக்காக பதவியை துறந்த அஜித்தை பதவியின் உச்சாணி கொம்பில் உட்கார வைத்து அழகுபார்த்தார் சரத்பவார்.

`எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!’- பரபரக்கும் மகாராஷ்டிரா அரசியல் பற்றி சரத் பவார்

மாநில அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகுதான் அவருக்கு ஏறுமுகம். தொடர்ந்து பாரமதி தொகுதியில் ஐந்துமுறை வென்ற அஜித் பவாருக்கு ஒவ்வொரு முறையும் அமைச்சர் பதவி தேடிவந்தது. சுதாகர் ராவ் ஆட்சியில் விவசாயம் மற்றும் மின்சார துறை அமைச்சர், சரத்பவார் அமைச்சரவையில் மண் பாதுகாப்பு, திட்டம், மின்சாரத் துறை அமைச்சர், விலாஸ்ராவ் தேஷ்முக் அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர், பின்னர் அசோக் சவானின் அரசில் நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், 2004-ல் புனே மாவட்ட கார்டியன் மினிஸ்டர் என ஏரளமான பதவிகளை அலங்கரித்தார்.

சரத் பவார் - அஜித் பவார் - சுப்ரியா சுலே
சரத் பவார் - அஜித் பவார் - சுப்ரியா சுலே
twitter

அரசாங்க பதவிகளில் இப்படி என்றால் கட்சியிலும் தனித்துவ செயல்பாட்டால் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்துக்கொண்டிருந்தார் அஜித் பவார். சரத்பவார் தனியாகக் கட்சி தொடங்கிய பிறகு அவருக்கு மிகவும் நெருக்கமாகி அவரின் ஆலோசகராக, வலது கையாக மாறினார் அஜித்பவார். சரத் பவாரால் என்.சி.பி உருவானதிலிருந்து அவருக்குப் பிறகு யார் கட்சியைக் கைப்பற்றுவார் என்ற ஊகங்கள் எப்போதும் இருந்தன. இந்த காலகட்டங்களில் சரத் பவாரும் டெல்லி அரசியலில் கோலோச்சுவதில் ஆர்வம்காட்ட அது அஜித் பவாருக்கு வசதியாகவே போனது.

`ஒரு விஷயம்.. ராஜ்பவன் வரை வாருங்கள் என்றார், ஆனால்..!’- வருந்தும் சரத்பவார்

ஒருகட்டத்தில் என்சிபியின் அடுத்த தலைவர் என தொண்டர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கினார். தன்னை எப்போதும் சரத் பவாரின் அரசியல் வாரிசு என நினைத்து செயல்பட்டு வந்த அஜித் பவாருக்கு 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் திடீர் ட்விஸ்டை தந்தது என்கின்றன மகாராஷ்டிரா ஊடகங்கள். சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் வருகைதான் அந்த ட்விஸ்ட். எந்த குடும்ப அரசியல் மூலம் பதவி என்னும் சிம்மாசனத்தில் அமர்ந்தாரோ அதே குடும்ப அரசியலால் அஜித் பவார் சிக்கலையும் எதிர்கொண்டார் என்கின்றனர் என்.சி.பி தொண்டர்கள்.

சரத் பவார் - சுப்ரியா சுலே
சரத் பவார் - சுப்ரியா சுலே
twitter

என்.சி.பியின் தனிக்காட்டு ராஜாவாக யாரும் எட்ட முடியாத உயரத்தில் அஜித் பவார் இருந்தபோதே தனது மகள் சுப்ரியா சுலேவே அரசியலில் களமிறங்கினார் சரத்பவார். சரத் பவாரின் அரசியல் வாரிசு தன்னை நினைத்துக்கொண்டிருந்தவருக்கு சுப்ரியாவின் அரசியல் வருகை சற்று கலக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. அதற்கேற்ப சுப்ரியாவின் அரசியல் செயல்பாடுகளும் இருக்க ஒரு சில வருடங்களில் என்.சிபி-யின் டெல்லி முகமாக மாறினார் சுப்ரியா. இருப்பினும் இந்த யூகங்களை இருவருமே மறுத்தாலும் இந்த புகைச்சல் வெகுநாள்களாக பேசப்பட்டுவந்தது.

` `1995' ஃபார்முலா; காங்கிரஸின் மறைமுக ஹெல்ப்!'- பா.ஜ.கவுக்கு செக் வைக்கும் பவார்

இந்த சோதனைக்கு முடிவு தெரிவதற்குள் 2017ல் அடுத்த சோதனையை சந்தித்தார். அதுவும் போனமுறையை போல பவார் குடும்பத்தின் வாரிசு மூலமாகவே நடந்தது. பவார் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையும் சரத்பவாரின் பேரனுமான ரோஹித் பவாரும் இந்த வருடத்தில் அரசியலுக்கு வந்தார். பிசினஸ்மேன் என அறியப்பட்டாலும் நல்ல பேச்சாளராக வலம்வந்தார் ரோஹித். அதனால் கட்சியினர் மத்தியில் விரைவாகவே ரீச் ஆனார். நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.சி.பி-யின் நட்சத்திர பேச்சாளர் என்கிற பொறுப்போடு தேர்தல் வேலைப்பார்த்த ரோஹித், இப்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ.

அஜித் பவார் - சுப்ரியா சுலே
அஜித் பவார் - சுப்ரியா சுலே
twitter

இப்படி ரோஹித், சுப்ரியாவின் செயல்பாடுகள் சரத்பவாரை ஈர்க்க ஒருகட்டத்தில்,`இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்று யோசிக்கிறேன்' எனப் பேசினார். அவரின் இந்தப் பேச்சு அஜித் பவாருக்கு அதிர்ச்சியை கொடுக்கத் தவறவில்லை என்கின்றனர். ரோஹித்தின் அரசியல் வருகையை தடுக்க முடியாத சரத்பவார் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பிய அஜித் பவாரின் மகன் பார்த்தை தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அஜித் பவாரின் அழுத்தத்தை அடுத்தே பார்த்துக்கு தேர்தலில் போட்டியிட சரத்பவார் சீட் கொடுத்தார் என்கிறார்கள் கட்சியினர். ஆனால் அஜித் பவாரின் மகன் பார்த் அந்த தேர்தலில் தோற்றது தனிக்கதை!

Vikatan

கானல் நீராகி போன சி.எம் போஸ்ட்!

என்.சி.பி-க்குள் விரைவாக முடிவெடுப்பதில் பெயர் பெற்றவர் அஜித் பவார். இது கட்சியின் மற்றத் தலைவர்களிடையே `ஒரு நல்ல நிர்வாகி' என்ற பிம்பத்தை பெற்றுத் தந்தது. பல நேரங்களில் சாமர்த்தியமான செயல்பாடுகளால் கட்சியில் முக்கிய நிர்வாகியாக வலம்வந்தார். அதேநேரத்தில் பல்வேறு முக்கியத் துறைகளின் அமைச்சர், 2012ல் துணை முதல்வர் பதவி வகித்தாலும் அஜித் பவார் முதல்வர் பதவியை எதிர்நோக்கி இருந்தார் என்கின்றன ஊடகங்கள். 2003 - 2014 காலகட்டங்களில் என்.சி.பி. ஆதரவு உடன் காங்கிரஸ் ஆட்சியை வழிநடத்தி வந்தபோது தேசிய அரசியலில் முழு கவனத்தை திசைதிருப்பி இருந்தார் சரத்பவார். அப்போது என்.சி.பி. இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்தும் முதல்வர் பதவி மீது தனது கவனத்தைத் திசை திருப்பத் தொடங்கினார்.

சரத் பவார் - ரோஹித் பவார்
சரத் பவார் - ரோஹித் பவார்
twitter

2004-லிலேயே அதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டதாகவும் ஆனால் அது நடக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 2004-ல் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தும் முதல்வர் நாற்காலியை அன்றைக்கு காங்கிரஸுக்கு தாரைவார்த்ததை அப்போதே எதிர்த்தார் அஜித் பவார். 2009-ல் என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தபோது `துணை முதல்வராக நியமிக்கப்படவில்லை' என்பது குறித்து சரத்பவாரிடம் நேரிலேயே வருத்தத்தை தெரிவித்தார் என்றும் இன்றளவும் அக்கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி தந்த என்.சி.பி; அமைதியாகக் காய் நகர்த்திய பா.ஜ.க!- மகாராஷ்டிரா முதல்வரானார் பட்னாவிஸ்

என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தபோதும் அந்த முயற்சியை தொடர்ந்தாகவும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் காங்கிரஸை விட தொகுதிகள் அதிகமாக பெற்றபோதும் துணை முதல்வர் பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக பேசப்படுகிறது. அதன்காரணமாகவே நேற்றைய கடைசி கூட்டணி கூட்டம் வரையிலும் அவர் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அஜித் பவார்
அஜித் பவார்
twitter

இதற்கிடையே பிருத்விராஜ் சவான் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது நதிநீர் ஊழல், அணை கட்டுவதில் முறைகேடு எனப் பல்வேறு சிக்கலில் சிக்கித் தவித்தார் அஜித் பவார். இன்றளவும் தொடரும் இந்த வழக்குகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் கானல் நீராகிப்போன முதல்வர் நாற்காலியால் கவலையில் இருந்த அஜித்பவார் அரசியல் குறிக்கோள்களை அடைவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருந்தார் எனக் கூறியுள்ளனர் அவரின் விசுவாசிகள். இந்த நோக்கங்களை மையப்படுத்தியே தற்போது மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் திருப்பத்துக்குப் பா.ஜ.க இவரைப் பகடைக் காயாய் பயன்படுத்திக்கொண்டுள்ளதாக பேசப்படுகிறது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவாரை அதிரடியாக நீக்கியுள்ளார் சரத்பவார். மும்பையில் தற்போது நடந்த சரத்பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அஜித்பவாரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் புதிய சட்டமன்றக் குழுத் தலைவராக ஜெயந்த் பாட்டீல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு