Published:Updated:

பசு - `தேசிய விலங்கு' - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன?

பசு மாடு
பசு மாடு

``இந்திய மக்களின் வாழ்வியலோடு கலந்திருக்கும் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” என்ற அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை எவ்வாறு அணுகுவது... அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உத்தரப்பிரதேச அரசின் பசுவதைச் சட்டத்தின் கீழ் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் என்பவர், கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாவித்தின் ஜாமீன் மனு, நீதிபதி சேகர் யாதவ் அமர்வில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சேகர் யாதவ் அதை நிராகரித்து 12 பக்கங்களில் உத்தரவு பிறப்பித்தார். அதன் உள்ளடக்கம்...

``வேதங்கள், மகாபாரதம் ஆகியவற்றில் பசு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மக்களின் கலாசாரத்தில் ஒன்றிணைந்த பகுதியாகப் பசு இருக்கிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள சூழலைப் பார்க்கும்போது, பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்து அதைப் பாதுகாப்பது என்பதை இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாகக் கொண்டுவர வேண்டும். நாட்டின் கலாசாரமும் நம்பிக்கைகளும் பலவீனமடைந்தால் தேசம் பலவீனமடையும் என்பது தெரியும். எனவே, பசுவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவர வேண்டும், பசுவுக்குக் கொடுமை செய்வோரைக் கடுமையாகத் தண்டிக்கும் பிரிவுகளையும் சேர்க்க வேண்டும். கொல்வதற்கான உரிமையைவிட வாழும் உரிமை மேலானது.

பசு
பசு

மாட்டிறைச்சி உண்பதை ஒருபோதும் அடிப்படை உரிமையாக எடுக்க முடியாது. மனுதாரர் செய்த குற்றம் முதன்முறையல்ல, இதற்கு முன்பும் பசுவதை செய்து சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்திருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்கினால், மீண்டும் வெளியே வந்து அதே குற்றத்தைச் செய்வார்.

அரசுக்கு எதிரான அதிரடிப் போக்குகள் - கெத்துகாட்டத் தொடங்கிவிட்டாரா ராகுல் காந்தி?

பசுவின் முக்கியத்துவம் குறித்து இந்துக்கள் புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், வரலாற்றில் இஸ்லாமிய ஆட்சியாளர்களும் அதையே கடைப்பிடித்து, இந்தியாவின் கலாசாரத்தில் பசுவின் பங்கை உணர்ந்திருந்தனர். பேரரசர் பாபர், ஹுமாயூன், அக்பர் போன்றோர் தங்களின் பண்டிகைகளில் பசுவதை செய்வதைத் தடைசெய்தனர். மைசூரை ஆண்ட ஹைதர் அலியும் பசுவதை செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றினார். அடிப்படை உரிமைகள் என்பது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமல்ல, பசுவை வணங்குபவர்கள், அதைச் சார்ந்துள்ள பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கும் பொருந்தும். நாடு முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன. பசுக்களைப் பாதுகாப்பது குறித்துப் பேசியவர்கள் இன்று அதன் எதிரிகளாக மாறியிருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதி சேகர் குமார் யாதவ்
நீதிபதி சேகர் குமார் யாதவ்

தேசிய விலங்காகப் பசுவை அறிவிக்க வேண்டும் என்ற அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லஷ்மி ராமச்சந்திரன்

``விலங்குகளைவைத்து அரசியல் செய்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. எங்களை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என எந்த விலங்கு வந்து இவர்களிடம் கேட்டது? ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் மதரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆதாயம் தேடும் மலிவான அரசியலைச் செய்வதுதான் பா.ஜ.க-வின் யுத்தியே. விரைவில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. அதற்குப் பசு மாட்டைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அந்தப் பிரச்னைகளிலிருந்தெல்லாம் கவனத்தைத் திருப்ப முயல்கிறார்கள். பெரும்பான்மையோரை ஒன்று சேர்த்து தலித், இஸ்லாம் இன மக்களுக்கு எதிராக நிறுத்த மதம் ஒரு சிறந்த கருவியாக அவர்களுக்கு இருக்கிறது. அதனால், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்பதன் மூலம் மதத்தைக் கையில் எடுக்கிறார்கள். தங்களின் தவறுகள்மீது ஊடகங்கள், மக்களின் கவனம் சென்றுவிடாமல் இது போன்று ஏதாவது ஒன்றைக் கிளப்பிவிட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

லஷ்மி ராமச்சந்திரன்
லஷ்மி ராமச்சந்திரன்

பசுவை, தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. நீதிமன்றங்களை விமர்சிக்கக் கூடாது என்றாலும், பெரும்பாலான நேரங்களில் ஆளும் அரசின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாகவே நீதிமன்றங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதுவும் இது அலகாபாத் நீதிமன்றம் எனும்போது கேட்கவே தேவையில்லை. இது இப்போதைக்குத் தேவையில்லாத வாதம். நாம் கவனம் செலுத்த இதைவிட முக்கியப் பிரச்னைகள் நிறைய இருக்கின்றன.”

பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

``உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, `நாங்கள் வெற்றிபெற்றால் ஒவ்வோர் ஊரிலும் `கோ சாலைகள் அமைப்போம்’ என்பதுதான். பசுவை தெய்வமாக வணங்குவது இந்துக்களின் வழக்கம். தமிழ்நாட்டிலேயே பல தலைவர்கள் பசுவை தெய்வமாக வழிபடுவதைப் பார்த்திருப்போம். புதிதாக வீடு கட்டினாலோ, ஏதாவது தொழில் தொடங்கினாலோ பசுவை முதலில் அழைத்துவருவது நமது வழக்கமாக இருக்கிறது. பசுமாடு உள்ளே சென்று, அதன் கால்தடம் பட்ட பிறகு ஐஸ்வர்யம் வந்ததாக நினைத்துக்கொண்டு பின்னர் நாம் அங்கே குடியேறுவதையோ, தொழிலைத் தொடங்குவதையோதான் நாம் பழக்கமாகப் பின்பற்றிவருகிறோம். ஆகவே பசுவை அரசியல் சார்பான முத்திரையாகப் பார்ப்பதை என்றைக்கு நாம்விடப் போகிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. பசுவைப் போற்ற வேண்டும், அதை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனப் பசுவுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நீதிபதி சொல்லியிருப்பாரே தவிர அதற்கு அரசியல் சாயம் பூசுவது தேவையில்லாதது. ஏற்கெனவே தேசிய விலங்காக இருக்கும் புலியை மாற்ற வேண்டும் என்று எங்குமே அதில் குறிப்பிடப்படவில்லை. பசுவை வணங்குவது, போற்றுவது இந்துக்களின் கலாசாரம், பண்பாடு. இதனால் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

மனித வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் பசு இரண்டறக் கலந்திருக்கிறது. ஒரு பசுமாடு இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும். காலையில் எழுந்ததும் பசுவைக் குளிப்பாட்டி வணங்குவதைப் பார்க்க முடியும். நீதிமன்றம் தனது கருத்தைச் சொல்லியிருக்கிறது. அதில் அரசியல் காரணம் தேடுவது தேவையில்லாத வேலை.”

அடுத்த கட்டுரைக்கு