Published:Updated:

மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்; இவர் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவந்த தமிழக கேடர் அமுதா ஐ.ஏ.எஸ் மீண்டும் தமிழக அரசுப் பணிக்குத் திரும்புகிறார்

மதுரையைப் பூர்வீகமாகக்கொண்டவர் அமுதா பெரியசாமி. இவரின் தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா மத்திய அரசு ஊழியர். இவருடைய அண்ணன் குமரன் ஐ.எஃப்.எஸ் அதிகாரி. 1994-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார். அதற்கு முந்தைய தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவருக்கு ஐ.பி.எஸ்-தான் கிடைத்திருந்தது. ஆனால், அடுத்த ஆண்டு மீண்டும் முயன்றார். இம்முறை, தமிழக அளவில் முதலிடத்திலும், இந்திய அளவில் பெண்களில் முதலாவதாகவும் ஐ.ஏ.எஸ்-ஆகத் தேர்ச்சி பெற்றார் அமுதா. அவரின் கணவர் ஷம்பு கல்லோலிகர் ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

கடந்த 1994-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்-ஆகத் தேர்ச்சி பெற்ற அமுதா கடலூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கினார். அங்கிருந்து, யூனிசெஃப் தேசிய திட்ட அதிகாரி, தருமபுரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் ஆணையத்தின் ஆணையர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை பெருவெள்ள பாதிப்புகளைச் சீர்செய்யும் சிறப்பு அதிகாரி, உணவுப் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியர், பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.

கடலூரில் துணை ஆட்சியராகப் பணியாற்றியபோது , செங்கல்பட்டு பகுதியில் மணல் கொள்ளையைத் தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான், ஒரு மணல் கொள்ளை கும்பலைத் தடுக்க முயன்றபோது, மணல் லாரி இடித்ததில் படுகாயமடைந்தார். எத்தனையோ மிரட்டல்களுக்கு இடையில், எதற்கும் அஞ்சாமல் பல நூறு லாரிகளைப் பறிமுதல் செய்திருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களிடமும், தனது சிறந்த நிர்வாகத்திறனால் பாராட்டைப் பெற்றவர் இவர். அமுதா தருமபுரி ஆட்சியராக இருந்த காலகட்டத்தில், அந்த மாவட்டத்தில் அதிகரித்திருந்த பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அங்குள்ள பெண்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தார்.

கருணாநிதியின் இறுதிச்சடங்கின்போது அமுதா ஐ.ஏ.எஸ்
கருணாநிதியின் இறுதிச்சடங்கின்போது அமுதா ஐ.ஏ.எஸ்

சென்னை பெருவெள்ளம் சமயத்தில் பாதிப்புகளைச் சீர்செய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அமுதா. நேரடியாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டார். மேலும், வெள்ளத்துக்குக் காரணமான பல்வேறு ஆக்கிரமிப்புகளைத் துணிந்து அப்புறப்படுத்தினார். இந்த அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றார். அரசியல்வாதிகள் முதல் அடியாட்கள்வரை எத்தனையோ மிரட்டல்கள், எத்தனையோ தடைகள்... அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது பணியைத் திறம்படச் செய்துகொண்டே இருந்தார் அமுதா. கருணாநிதி, ஜெயலலிதா, அப்துல் கலாம் போன்றவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அமுதாவிடம்தான் வழங்கப்பட்டது. அத்தனை நிகழ்வுகளையும் திறம்படச் செய்து முடித்தார் இவர்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவுப் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலராக இருந்த நேரத்தில், விதிமுறைகளை மீறிய பல்வேறு உணவகங்களுக்கு சீல் வைத்தார் அமுதா. தமிழகத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலம், முசோரியிலுள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவரின் பணியைக் கண்ட உயரதிகாரிகள், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றப் பரிந்துரை செய்திருந்தனர்.

அரசாணை
அரசாணை

கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக பணியில் சேர்ந்தார். தற்போது தமிழக அரசு கேட்டுக்கொண்டதன்பேரில், அவரின் பணிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, பிரதமர் அலுவலகம் அவரைப் பணியிலிருந்து விடுவித்திருக்கிறது. தற்போது மீண்டும் தமிழகம் திரும்பும் அமுதாவுக்கு, தமிழக அரசு மிக முக்கியப் பொறுப்பை வழங்கக் காத்திருக்கிறது என்று கூறுகின்றன கோட்டை வட்டாரங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு