Published:Updated:

டார்கெட் திமுக: முக்கோண பாலிடிக்ஸில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

கவர்னர் ரவி, தமிழக பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை, மத்திய உளவுத்துறையில் உள்ள முக்கிய அதிகாரி...

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ``அமைச்சர் சேகர் பாபு பா.ஜ.க-வை எப்படிக் கையாள வேண்டும் என்று கூறியிருப்பதாக அறிகிறேன். நாங்கள் 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். டெல்லியில் மோடி இருக்கிறார். எங்களைத் தொட்டு பார்க்கட்டும். வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்போம். ஒரே ஒரு தொகுதியில் ராஜாவாக இருக்கும் சேகர் பாபுவும், செந்தில் பாலாஜியும் பா.ஜ.க-வைச் சீண்டிப் பார்க்க நினைக்கக் கூடாது. பா.ஜ.க 11 கோடி தொண்டர்களைக்கொண்ட கட்சி'' என்றிருக்கிறார்.

சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
சசிகலா - ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

அ.தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல், எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோஷ்டி, ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு கோஷ்டி. போதாத குறைக்கு சசிகலாவுக்கென்று தனி கோஷ்டி. இப்படி நடப்பு அரசியலிலிருந்து மெல்ல விலகிச் செல்கிறது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உட்கட்சிப்பூசலில் சிக்கித் தவிக்கிறது. அதனால், பி.ஜே.பி., தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திவருகிறது. அதற்கான அரசியல் சதுரங்க விளையாட்டை பி.ஜே.பி தமிழக தலைவர் அண்ணாமலை செய்துவருகிறார்.

தமிழகத்தில் மூடப்பட்ட கோயில்களைத் திறக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தொடர்புபடுத்தி மின்வாரிய ஊழல் விவகாரத்தைக் கிளப்பினார். அடுத்து, அமைச்சர் ராஜகண்ணப்பனின் போக்குவரத்துத்துறையில் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக அறிவித்தார். இப்படி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிவித்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்.

தமிழக பி.ஜே.பி-யின் முதல் அரசியல் எதிரி - இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. கோயில்களை அரசு நிர்வாகப்பிடியில் இருந்து விலக்க வேண்டும் என்பது பி.ஜே.பி-யின் கோஷம். இதை தி.மு.க ஏற்கவில்லை. தமிழக முதல்வருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, கோயில்கள் அரசு நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்கிற நோக்கில் தினப் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதினார். இது தமிழக பி.ஜே.பி-யினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்த சில நாள்களில், இந்து அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று கவர்னர் ரவி விசாரித்தார். அந்தத் துறையின் செயலாளர் சந்திரமோகன், இந்துஅறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆகியோரை ராஜ்பவனுக்கு அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார் கவர்னர் ரவி. ஆக, அமைச்சர் சேகர் பாபுவுக்கு மறைமுகமாகத் தரப்பட்ட அழுத்தம் என்றே தி.மு.க அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக அரசியல் விவகாரங்களை உற்று கவனிக்கும் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ``தமிழகத்தில் பி.ஜே.பி-யை பிரதான எதிர்க்கட்சியாக சித்திரிக்க வேகமாகக் காய்நகர்த்தல் நடக்கிறது. இந்த அசைன்மென்ட்டை மூன்று ஐ.பி.எஸ் வசம் ஒப்படைத்தார்கள். ஒருவர் கவர்னர் ரவி. இரண்டாவது தமிழக பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை. இந்த இருவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள். மூன்றாவது ஐ.பி.எஸ் அதிகாரி மத்திய உளவுத்துறையில் உள்ள முக்கியப் பிரமுகர். இந்த மூவரும்தான் முக்கோண பாலிடிக்ஸ் செய்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

தமிழக கவர்னராக ரவியை நியமித்ததற்கான காரணம், தமிழகத்தில் புதிய கோணத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். இது பிரதமர் மோடியின் திட்டம். மத்திய உளவுத்துறையின் முக்கியப் பதவிகளில் இருந்த அனுபவம் உளளவர் ரவி. அதேபோல், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு தமிழகத்திலுள்ள இளம் ஐ.பி.எஸ்-களுடன் நல்ல தொடர்பு உண்டு. தகவல் பரிமாற்றமும் உண்டு. ஆட்சியாளர்களின் ஒவ்வோர் அசைவையும் தனது சோர்ஸ்கள் மூலம் அண்ணாமலையால் தெரிந்துகொள்ள முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தார். இந்தத் தகவல் எப்படியோ தெரிந்து பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை, வேறு ஏதோ காரணம் சொல்லி கவர்னரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி, முதல்வர் சந்திப்பு நடப்பதற்கு முன்பே, இவர் போய் சந்தித்துவந்தார். இது மாதிரியான அதிரடிகளை அண்ணாமலை செய்துவருகிறார். இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருவரை தமிழகத்ததுக்கு தேர்வு செய்து அனுப்பியது பி.ஜே.பி மேலிடம். கவர்னர் ரவியும் பி.ஜே.பி தமிழக தலைவர் அண்ணாமலையும் தங்கள் பணியைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

"கையெழுத்து போட மாட்டேன்"
- முரண்டு பிடித்த பன்னீர்

மத்திய உளவுத்துறையில் உள்ள அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளின் நடவடிக்கையைப் பற்றித் தகவல்கள் சேகரிப்பதில் அனுபவசாலி. குறிப்பாக, ஆளும் தி.மு.க பற்றிய ஊழல் விவகாரங்களைத் தோண்டி எடுப்பதில் முனைப்பு காட்டிவருகிறார். இவரின் ஒவ்வொரு தகவலும் மத்திய அரசுக்கு பெரிய ப்ளஸ் பாயின்ட்டுகள். சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏதுவானாலும், கவர்னர் ரவி நேரடியாக மத்திய உளவுத்துறையின் அந்த ஐ.பி.எஸ்ஸிடம் அழைத்துப் பேசலாம். அதேபோல், அரசியல் நிலவரம் தொடர்பாக பி.ஜே.பி தலைவர் அண்ணாமலையையும் அடிக்கடி ராஜ்பவனுக்கு வரச் சொல்லி மரியாதை நிமித்தம் என்கிற பெயரில் சந்திக்க முடியும். இவர்களை எதிர்கொள்வது எப்படி என்று தி.மு.க முக்கியத் தலைவர்கள் தற்போது தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு