Published:Updated:

`சவால் விடுத்த அமித் ஷா... திட்டித் தீர்த்த தாக்கரே' - சிவசேனா Vs பாஜக மோதலில் மைலேஜ் யாருக்கு?!

சிவசேனா Vs பா.ஜ.க

சிவசேனா Vs பா.ஜ.க: இரண்டு கட்சிகளும் மீண்டும் தீவிர மோதலில் ஈடுபட்டிருப்பதற்கு உ.பி தேர்தல்தான் காரணமா?!

`சவால் விடுத்த அமித் ஷா... திட்டித் தீர்த்த தாக்கரே' - சிவசேனா Vs பாஜக மோதலில் மைலேஜ் யாருக்கு?!

சிவசேனா Vs பா.ஜ.க: இரண்டு கட்சிகளும் மீண்டும் தீவிர மோதலில் ஈடுபட்டிருப்பதற்கு உ.பி தேர்தல்தான் காரணமா?!

Published:Updated:
சிவசேனா Vs பா.ஜ.க

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஒரே கூட்டணியிலிருந்த சிவசேனாவும் பா.ஜ.க-வும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் கூட்டணியை முறித்துக்கொண்டன. அப்போதிலிருந்து இரண்டு கட்சிகளும் தொடர்ச்சியாக மோதிக்கொண்டுவந்தன. ஆனால், சிறிது காலம் அமைதியாக இருந்த இரண்டு கட்சிகளும், தற்போது மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருவது மகாராஷ்டிர அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

சிவசேனா - பா.ஜ.க கூட்டணி!

1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் சிவசேனாவும்-பா.ஜ.க-வும் முதன்முதலாகக் கூட்டணி அமைத்தன. 25 ஆண்டுகளாக இருந்த கூட்டணியில் 2014-ம் ஆண்டு முறிவு ஏற்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்தக் கூட்டணி முறிந்ததாகச் செய்திகள் சொல்லப்பட்டன. இரு கட்சிகளும் 2014 சட்டமன்றத் தேர்தலைத் தனித்தனியே எதிர்கொண்டன. பா.ஜ.க 122 இடங்களில் வெற்றிபெற்றது. சிவசேனா 63 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. தேர்தலுக்குப் பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து பா.ஜ.க-வும் சிவசேனாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

பாஜக - சிவசேனா கூட்டணி
பாஜக - சிவசேனா கூட்டணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்டணியில் நிரந்தர முறிவு!

பா.ஜ.க, சிவசேனா இடையே 2014-ம் ஆண்டு வரையிலும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவந்தன. இருந்தாலும், கூட்டணி ஆட்சியில் எந்தப் பிரிவும் ஏற்படவில்லை. 2019 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றிபெற்றது. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிகண்டன. வெற்றிக்குப் பின்னர் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், ``இரண்டரை வருடம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுத் தருவதாக நாங்கள் சொல்லவேயில்லை'' என்றார். `ஆட்சிப் பொறுப்பில் சம பங்கு என்று சொல்லிவிட்டு, இப்போது பேச்சை மாற்றுகிறார்கள்' என்று கொந்தளித்தனர் சிவசேனாவைச் சேர்ந்தவர்கள். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், பா.ஜ.க-வுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனா. அதுமட்டுமல்லாமல் தங்கள் கட்சியோடு கருத்தியல் முரண்பாடுகொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீண்டும் தொடங்கிய சண்டை!

இந்த நிலையில், தற்போது இரண்டு கட்சிகளும் மீண்டும் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``சிவசேனாவால் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?'' என்று உத்தவ் தாக்ரேவுக்கு சவால் வடுத்தார். இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே, பா.ஜ.க-வைச் சரமாரியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே

மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் பிறந்ததினத்தையொட்டி ஆன்லைன் வழியாக தொண்டர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ``பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம். ஒரு காலத்தில் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. நாம்தான் அவர்களை வளர்த்துவிட்டோம்.

சிவசேனா, தனது இந்துத்துவா கொள்கையைக் கைவிடவில்லை. பா.ஜ.க-வின் இந்துத்துவா என்பது வெறும் சந்தர்ப்பவாத இந்துத்துவா. அதை அதிகாரத்தைக் கைப்பற்ற மட்டுமே பயன்படுத்துகிறது. சிவசேனா, பா.ஜ.க-வை மட்டுமே வெளியேற்றியிருக்கிறது; இந்துத்துவா கொள்கையை அல்ல!'' என்று பேசியிருந்தார்.

ஆட்சியைப் பிடிப்பதற்காக மட்டுமே பா.ஜ.க மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணிக்காகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிவதுதான் பா.ஜ.க-வின் கொள்கை.
உத்தவ் தாக்கரே
சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ``மகாராஷ்டிராவில், பா.ஜ.க-வை அடிமட்டத்திலிருந்து மேலே கொண்டு சென்றது சிவசேனாதான். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வட இந்தியாவில் சிவசேனா அலை அடித்துக்கொண்டிருந்தது. அப்போது நாங்கள் வட இந்தியாவில் போட்டியிட்டிருந்தால் சிவசேனாவிலிருந்து ஒரு பிரதமரை இந்தியா பார்த்திருக்கும். ஆனால், பா.ஜ.க-வுக்காக போட்டியிடாமல் விட்டுக்கொடுத்தோம்'' என்று கூறியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க-வின் பதிலடி!

பா.ஜ.க தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், ``மும்பையில் பா.ஜ.க செயல்பட்டுவந்த நேரத்தில், சிவசேனா என்ற கட்சியே உதயமாகவில்லை என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எங்களுடன் கூட்டணியில் இருந்தபோது சிவசேனா நம்பர் 1 அல்லது நம்பர் 2 கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது நான்காவது இடத்தில் இருக்கிறது!

காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும் ராகுலும், பால் தாக்கரேவுக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் பதிவிடுவார்களா? ராமர் கோயில் இயக்கத்தின்போது நீங்கள் வெறும் வாயால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தீர்கள். நாங்கள் தோட்டாக்களையும் தடியடிகளையும் எதிர்கொண்டோம்'' என்று கூறியிருக்கிறார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ், உத்தவ் தாக்கரே
தேவேந்திர ஃபட்னாவிஸ், உத்தவ் தாக்கரே

மைலேஜ் யாருக்கு?

இந்த விவகாரம் குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள், ``பா.ஜ.க-வும் சிவசேனாவும் மீண்டும் காரசார வார்த்தைப் போரில் ஈடுபட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அமித் ஷா விடுத்த சவால் காரணமாக, பா.ஜ.க-வைக் கண்டபடி திட்டித் தீர்த்திருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதன் பின்னணியில் வேறு ஒரு காரணமும் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் உத்தரப்பிரதேசத்திலும், கோவாவிலும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது சிவசேனா. மகாராஷ்டிராவைத் தாண்டி மற்ற சில மாநிலங்களிலும் கால்பதிக்க நினைத்து, இந்த முடிவை எடுத்திருக்கிறார் உத்தவ் தாக்கரே. தற்போது பா.ஜ.க-வை எதிர்த்து பல்வேறு கருத்துகளைச் பேசியிருப்பதன் மூலம், உ.பி-யிலும் கோவாவிலும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை ஒரளவுக்கு சிவசேனாவின் பக்கம் திருப்ப முடியும் என அக்கட்சி நினைக்கிறது.

குறிப்பாக, உ.பி-யிலுள்ள வாக்காளர்களைக் கவர, ``நாங்கள் இந்துத்துவா கொள்கையைக் கைவிடவில்லை'' என்று உரக்கச் சொல்லியிருக்கிறார் உத்தவ் தாக்கரே. சஞ்சய் ராவத், பாபர் மசூதி இடிப்பு குறித்துப் பேசியிருப்பதும் உ.பி தேர்தலை மனதில்வைத்துத்தான். உ.பி-யில், சிவசேனாவின் மைலேஜ் ஏறிவிடக் கூடாது என்பதற்காகத்தான், ``ராமர் கோயில் இயக்கத்தின்போது நீங்கள் வெறும் வாயால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தீர்கள்'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ். இந்த விவகாரத்தில், சிவசேனாவின் மைலேஜ் அதிகரித்திருக்கிறதா என்பதை உ.பி., கோவா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தெரிந்துகொள்ள முடியும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism