Published:Updated:

தேர்தல் சட்டத் திருத்த மசோதா: `ஒரே நாடு ஒரே தேர்தல்' நோக்கத்துக்காக அவசரம் காட்டுகிறதா மோடி அரசு?!

ஒரே நாடு ஒரே தேர்தல்
News
ஒரே நாடு ஒரே தேர்தல்

பா.ஜ.க வலியுறுத்தும் `ஒரே நாடு ஒரே தேர்தல்' - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்... நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?

2016-ம் ஆண்டு முதலே `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற முழக்கத்தை முன்வைத்துவருகிறார் பிரதமர் மோடி. இதற்கான சில திட்ட வடிவங்களை 2017-ம் ஆண்டு வகுத்துக் கொடுத்தது நிதி ஆயோக். 2018-ம் ஆண்டு, `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தது சட்ட ஆணையம். மேலும், அதற்காகச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருக்கும் என்றும் கருத்து தெரிவித்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் மோடியும், பா.ஜ.க-வும் அவ்வப்போது இந்தத் திட்டம் குறித்து கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 2019-ம் ஆண்டுக்கான பா.ஜ.க தேர்தல் அறிக்கையிலும், `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் இடம்பெற்றிருந்தது. 2020-ம் ஆண்டில், இந்தத் திட்டத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வரவேற்பு தெரிவித்திருந்தது.

கடந்த நவம்பர் மாத இறுதியில், `இந்தத் திட்டம் காலகட்டத்துக்கான தேவை' என்று பேசியிருந்தார் பிரதமர் மோடி. இந்த நிலையில் தற்போது, ஆதார் எண்ணோடு, வாக்காளர் அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

 மோடி
மோடி

`ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் என்ன?

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தவிர, ஆண்டுதோறும் இந்தியாவின் மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலோ, சட்டசபைத் தேர்தலோ நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். அப்படியல்லாமல், நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டசபைத் தேர்தல்கள், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல்களையும் சேர்த்து நடத்துவது என்ற கோரிக்கையைத்தான் `ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற பெயர் கொண்டு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது மத்திய அரசு.

1967-ம் ஆண்டு வரை இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்களும், மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்களும் (ஒருசில மாநிலங்களைத் தவிர) ஒன்றாகத்தான் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதன் பிறகு, சில மாநிலங்களில் ஆட்சிக்காலம் முடியும் முன்னரே ஆட்சிக்கலைப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் அதேபோல ஆட்சிக்கலைப்புகள் அரங்கேறின. ஆகையால், வெவ்வேறு ஆண்டுகளில் தேர்தல் நடைபெறும் சூழல் உருவானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ஒரே நாடு ஒரே தேர்தல்' - பா.ஜ.க அரசு சொல்லும் காரணங்கள்...

`இந்தத் திட்டம் ஏன் அவசியப்படுகிறது?' என்ற கேள்விக்கு மூன்று முக்கியக் காரணங்களைப் பதிலாக அடுக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. முதல் காரணம், தேர்தல் செலவுகள் குறையும் என்பது. அடுத்தது, அடிக்கடி தேர்தல்கள் வருவதைத் தவிர்ப்பதன் மூலம் ஆளும் கட்சிகள், மக்கள் நலன், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்பது. மூன்றாவது, ஐந்தாண்டுக்கு ஒரு முறைதான் தேர்தல் வரும் என்பதால், மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என்பது!

இந்தத் திட்டம் குறித்து அண்மையில் பேசிய பிரதமர் மோடி, ``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது வெறும் விவாதப் பொருள் அல்ல. அது இந்தக் காலகட்டத்துக்கான தேவை. மக்களவைத் தேர்தல், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் என அனைத்துக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் வேண்டும். தனித்தனி பட்டியல் என்பது நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் செயல்.

நாடு முழுவதும் ஏதேனும் ஒரு பகுதியில் அவ்வப்போது தேர்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. வளர்ச்சிப் பணிகளில் தேர்தல் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே!'' என்று கூறியிருந்தார்.

 கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

இந்த நிலையில்தான் நேற்று மக்களவையில், வாக்காளர் அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் மசோதாவைத் தக்கல் செய்திருக்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்த மசோதா, இன்று (டிச. 20) மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ​``இதுதான் `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு முதல் படி. 2024-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை அமல்படுத்தவே இன்றைக்கு இந்த மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு'' என்று சொல்லிக் கடும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது ஏன்?

இந்தத் திட்டத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமென்பதைத் தாண்டி, ஒரு முக்கியக் காரணத்தை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். ``ஒரே தேர்வு, ஒரே ரேஷன் அட்டை, ஒரே வரி, ஒரே தேர்தல்’ என வரிசையாக `ஒரே' என்ற பெயரில் திட்டங்களை அடுக்குகிறது பா.ஜ.க. இது அனைத்துக்கும் ஒரே அடிப்படைக் காரணம்தான். இந்தியாவில், `ஒரே நாடு ஒரே பண்பாடு' என்பதை நிறுவ நினைக்கிறது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் `ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம். அதைத்தான் அமல்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு.

பல்வேறு மொழிகள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், மதங்கள், கலாசாரங்கள் என்று வேற்றுமைகள்கொண்டதுதான் இந்தியா. இந்த அடிப்படை உண்மையை மறைக்க அல்லது மாற்ற பா.ஜ.க தொடர்ந்து முயல்கிறது. அதற்காகத்தான் இந்த `ஒரே' என்பது போன்ற திட்டங்கள்'' என்கின்றன எதிர்க்கட்சிகள்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மேலும், ``இந்தத் திட்டத்தின் மூலம் பல விதிகளைக் கொண்டுவந்து நாடு முழுவதும் பா.ஜ.க கொடியைப் பறக்கச்செய்வதும் மத்திய பா.ஜ.க அரசின் திட்டமாக இருக்கும். இன்னும் சில காலம் சென்றால், தேர்தலே இல்லை என்ற திட்டத்தையும் கொண்டுவருவார்கள் பா.ஜ.க-வினர். மாநில கூட்டாட்சித் தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது இந்தத் திட்டம்'' என்று கொதிக்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

மேலும் இதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்களாகச் சிலவற்றை அடுக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

* மாநில அளவிலும், தேசிய அளவிலும் இருக்கும் பிரச்னைகள் வெவ்வேறாக இருக்கும். அப்படியிருக்கையில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தினால், பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களிக்கலாம் என்று மக்கள் முடிவெடுப்பதில் பெருங்குழப்பம் ஏற்படும்.

* எதிர்பாராத வகையில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சிக் கலைக்கப்பட்டுவிட்டால், அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும் வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற வாய்ப்பிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானதாக இருக்கும். பொதுவாக ஆட்சி கவிழ்க்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள்ளாக அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற விதி தற்போதைய சட்டத்தில் இருக்கிறது. `ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை கொண்டுவரப்பட்டால், இந்தச் சட்டம் மாற்றியமைக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இது மக்களின் உரிமைக்கு எதிரானது.

ஒரே நாடு... ஒரே தேர்தல்! -
ஒரே நாடு... ஒரே தேர்தல்! -

* அதுபோல, பெரும்பான்மையில்லாமல் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்போது, சில காலத்தில் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான கட்டத்தில், நாடு முழுவதுமிருக்கும் மாநிலங்களில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான சூழல் உருவாகலாம்.

`ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையில், மேற்கண்ட நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். `இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் மத்திய அரசிடம் என்ன பதில்கள் இருக்கின்றன?' என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்கள் அவர்கள்!