Published:Updated:

உ.பி தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் அகிலேஷ் யாதவ்... யோகிக்காக பா.ஜ.க-வின் பிளான் என்ன?!

அகிலேஷ் யாதவ்
News
அகிலேஷ் யாதவ் ( Twitter/@yadavakhilesh )

கூட்டணி, சுற்றுப்பயணம், நல்லுறவு என உ.பி தேர்தல் களத்தில் வேகமாக முன்னேறிவருகிறார் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்... அவரை எதிர்கொள்ள பா.ஜ.க-விடம் இருக்கும் திட்டம் என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசார உரைகளால் தகித்துக்கொண்டிருக்கிறது உத்தரப்பிரதேச தேர்தல் களம். அங்கு, பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது. இதில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உ.பி முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுவதாகவும், நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியிலும் அகிலேஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. பிரசாரப் பேச்சுகளிலெல்லாம், ஆளும் பா.ஜ.க-வை எதிர்த்து பல்வேறு கேள்விகளையெழுப்பி, அவர்களுக்குக் குடைச்சல் கொடுத்துவருகிறார் அவர்.

2017-ல் 70 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. கடந்த ஐந்து ஆண்டுகளில், உ.பி-யில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பேனர் வைப்பதிலும், விளம்பரங்களிலும் நேரம் செலவிடும் பா.ஜ.க., தேர்தல் வாக்குறுதிகளை மறந்தேபோய்விட்டதுபோல!
அகிலேஷ் யாதவ்

கூட்டணி பலத்தை அதிகரிக்கும் அகிலேஷ்!

`பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து நீக்கிவிட வேண்டும்' என்ற எண்ணத்தோடு செயல்பட்டுவரும் சமாஜ்வாடி, கூட்டணி விவகாரத்திலும் வேகம்காட்டிவருகிறது. பெரிய கட்சிகளோடு கூட்டணிவைப்பதைத் தவிர்த்துவரும் அகிலேஷ், அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்காக இருக்கும் சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்துவருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகனும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சிங் செளத்ரி, அகிலேஷ் யாதவோடு கூட்டணிக் கரம் கோத்திருக்கிறார். மேற்கு உ.பி-யில் வலுவாக இருக்கும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 36 சீட்கள் ஒதுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்னா தளம், அப்னா தளம் (சோனேலால்), ஜன்வாடி கட்சி, மகான் தளம் உள்ளிட்ட சிறிய கட்சிகளோடும் கூட்டணி சேரவிருக்கிறது சமாஜ்வாடி. இவை போக கடந்த முறை பா.ஜ.க கூட்டணியிலிருந்து எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வென்ற சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கூட்டணியில் இணைந்திருக்கிறது. 8-10 தொகுதிகளில், இந்தக் கட்சி போட்டியிடுமெனத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார் அகிலேஷ்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
Twitter/@yadavakhilesh

இதற்கெல்லாம் மேலாக, தனது உறவினரான ஷிவ்பால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியோடும் கூட்டணி அமைத்திருக்கிறார் அகிலேஷ். கடந்த 2018-ல் சமாஜ்வாடி கட்சியிலிருந்து பல நூறு பேரோடு பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்தார் ஷிவ்பால். தற்போது அவரோடு, அகிலேஷ் மீண்டும் கைகோத்திருப்பது சமாஜ்வாடிக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. கூட்டணிகளைத் தாண்டி மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஆதரவையும் பெற்றிருக்கிறார் அகிலேஷ் யாதவ். விவசாய அமைப்புகளோடும் நல்லுறவை ஏற்படுத்திவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க-வின் திட்டம் என்ன?

உ.பி-யில் நாளுக்கு நாள் வலுபெற்றுவரும் அகிலேஷ் யாதவையும், சமாஜ்வாடியையும் சமாளிக்க ஆளும் பா.ஜ.க அரசிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்த விவாதங்கள் தற்போது கிளம்பியிருக்கின்றன. ``ஆளும் பா.ஜ.க அரசு மீதும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் பெரும்பாலான உ.பி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் எனத் தொடர்ந்து யோகி அரசுக்கு அடிமேல் அடி விழுந்த வண்ணம் இருக்கிறது. போதாகுறைக்கு, அகிலேஷ் யாதவும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவருகிறார். இருந்தும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி, சிவசேனா, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து நிற்பது பா.ஜ.க-வுக்கு ப்ளஸ்ஸாக அமைந்திருக்கிறது.

அதேநேரத்தில், அகிலேஷ் நாளுக்கு நாள் சிறு சிறு கட்சிகளோடு கூட்டணி அமைத்துவருவது, பா.ஜ.க-வுக்குத் தலைவலியாக அமைந்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டிவரும் பணிகளைக் கைகாட்டி, நாட்டுக்கு ராம ராஜ்ஜியம்தான் தேவை என்று பிரசாரம் செய்துவருகிறது பா.ஜ.க. காசியில் விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டதும், அங்கு பிரதமர் வந்து கங்கையில் நீராடினார். இதை உ.பி மக்களிடம் படம்போட்டுக் காட்டி, இந்துக்களின் வாக்குகளைக் கவர முயன்றுவருகிறது அந்தக் கட்சி. மேலும், மதுராவில் கிருஷ்ணர் கோயில் என்ற புது அஸ்திரத்தையும் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், இந்த முறை உ.பி-யைக் கைப்பற்ற மத அரசியல் மட்டும் போதாது என்பதை உணர்ந்து, கோடிக்கணக்கிலான திட்டங்களை அந்த மாநிலத்தில் தொடங்கிவைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு. ஆனால், கடந்த முறை அளித்த வாக்குறுதிகளே நிறைவேற்றப்படாததால் இந்தத் திட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமித் ஷா- யோகி - மோடி
அமித் ஷா- யோகி - மோடி

இந்த நிலையில், உ.பி-யின் முக்கியப் பகுதிகளில் ஆறு யாத்திரைகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க தலைமை. அதில், மக்களை நேரில் சந்தித்து பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கவிருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோக, கடந்த முறை தோல்வியுற்ற இடங்களில் இருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்து, அங்குள்ள வாக்காளர்களைக் கவர்வதற்கான திட்டத்தையும் பா.ஜ.க வைத்திருக்கிறது. அதேபோல கடந்த முறை வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களின் ரிப்போர்ட்டுகளை தயார் செய்து, அதில் யார் யாருக்கெல்லாம் தொகுதியில் நல்ல பெயரில்லையோ அவர்களை மாற்றவும் பா.ஜ.க தலைமை முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் தேதி நெருங்கும்போது இன்னும் பல அதிரடித் திட்டங்களை பா.ஜ.க அறிமுகம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. அது என்னென்ன திட்டங்கள்... அது மக்களிடம் எப்படி எடுபடும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.