Published:Updated:

`ஏழு நாள்களும் கோயில்களைத் திறக்கக் கோரிக்கை' - பா.ஜ.க-வின் போராட்டம் எடுபடுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோயில்களளைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்
கோயில்களளைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தடைவிதித்துள்ளது தமிழ்நாடு அரசு. தடையை நீக்கி எல்லா நாள்களும் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து பா.ஜ.க அறிவித்துள்ள போராட்டம் எடுபடுமா?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவரும் சூழலில், பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாள்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க அது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாது என்பதால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் பதிலளிக்கப்படுகிறது. ஆனால், மதரீதியில் தி.மு.க அரசுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சிதான் இந்தத் தடைக்குக் காரணம் என பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டிவருகின்றனர். ``தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துக் கோயில்களையும் மூடுவதால் மக்கள், வணிகர்கள் என லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகக் கோயில்களைத் திறக்கவேண்டும். இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக வரும் அக்டோபர் 7-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு முன்பாக நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன். இதைத் தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அருகே பா.ஜ.க சிறுபான்மையினர் அணித் தலைவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிக்கைவிட்டிருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை - சேகர் பாபு
அண்ணாமலை - சேகர் பாபு

``தமிழ்நாட்டில் போராடுவதற்கு எந்தக் காரணமும் இல்லாததால், திமுக அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டம் நடத்துகிறார்கள். இது தேவையற்றது” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசியிருக்கிறார். பா.ஜ.க அறிவித்துள்ள போராட்டம் மக்கள் மத்தியில் எடுபடுமா இல்லையா என அரசியல் தலைவர்களிடம் கேட்டோம்…

"வார இறுதி நாள்களிலும் கோயிலைத் திறக்கவேண்டும்!"- சுவாமிமலையில் முருகப் பக்தர்கள் போராட்டம்!

பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

``இந்துக் கோயில்களை மட்டுமல்லாமல் மசூதிகள், கிறித்துவ தேவாலயங்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மூடிவைக்க உத்தரவிட்டிருப்பது ஆன்மிக உணர்வுகளுக்கு எதிரான தி.மு.க அரசின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. வார இறுதி நாள்களில் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற மக்களின் எண்ணத்துக்கு தி.மு.க அரசு ஏன் தடை போடுகிறது எனப் புரியவில்லை. கொரோனா பெருந்தொற்று அதிகமிருந்த காலத்தில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டபோது எந்தக் கேள்வியும், யாரும் கேட்கவில்லை. சினிமா தியேட்டர்கள், தனியார், அரசு நிறுவனங்கள், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள், ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்கூட திறக்கப்படவிருக்கின்றன. தொழிற்சாலைகள் இயங்குகின்றன, டாஸ்மாக் பார்களைத் திறக்கலாமா என அரசுத் தரப்பில் ஆலோசித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தேர்தல்கள் நடத்துகிறீர்கள். இந்துக் கோயில்கள் சிறப்பாக இயங்கி மக்கள் ஆன்மிகத்தின் வழியில் செல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? இப்படி அனைத்துக்கும் தளர்வுகள் அளித்து, திறக்க அனுமதித்துள்ள நிலையில் கோயில்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்? தி.மு.க-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வேண்டுமானால் வழிபாட்டுத் தலங்கள் பிடிக்காத இடமாக இருக்கலாம். ஆனால், இந்தப் பெருந்தொற்றிலிருந்து மீண்ட மக்கள் மன நிம்மதிக்காகக் கோயில்களுக்குச் சென்று வழிபட விரும்புவார்கள் இல்லையா... அதற்கு முட்டுக்கட்டை போடலாமா? இந்தக் கேள்விகளை முன்வைத்து பா.ஜ.க போராடவிருக்கிறது.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

மதரீதியில் இல்லாமல் மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டம் நடத்தவிருக்கிறோம். அனைத்துத் துறைகளைப்போலவும் தளர்வுகள் தந்து, அனைத்து நாள்களிலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயில்களைத் திறப்பது என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையும்கூட. பல லட்சம் விவசாயிகளின் விளைச்சல் இதனால் பாதிக்கப்படுகிறது. கோயில்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் எத்தனை பொருளாதார நெருக்கடிகளை எளிய மக்கள் சந்திக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியுமா? இதையெல்லாம் அரசுக்கு உணர்த்த காளிகாம்பாள் கோயிலில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொன்.ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரத்தில் ஹெச்.ராஜா, திருச்செந்தூரில் நயினார் நாகேந்திரன், பழநியில் வானதி சீனிவாசன், ஸ்ரீரங்கத்தில் பேரா.இராம ஸ்ரீனிவாசன், தஞ்சாவூர் கருப்பு முருகானந்தம், தடா பெரியசாமி, சிதம்பரத்தி்ல் ஏ.ஜி.சம்பத், வி.பி.துரைசாமி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கே.பி.ராமலிங்கம் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

குணசீலம்
குணசீலம்

மக்களுக்கான போராட்டம் என்பதால் ஆயிரக்கணக்கில் அவர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரசு நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படியும் தளர்வுகள் தரவில்லையென்றால் அரசுக்கு மத நம்பிக்கை மீது காழ்ப்புணர்ச்சி இருப்பது உறுதியாகிவிடும்.”

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

``தமிழ்நாட்டில் மட்டுமா இந்தத் தடைகள் இருக்கின்றன? விநாயகர் சதுர்த்தியின்போதும் இதே மாதிரிதான் சொன்னார்கள். ஆனால், பா.ஜ.க-வின் சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்திலும் விநாயகர் சதுர்த்திக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எந்தக் கேள்வியும் யாரும் கேட்கவில்லை. மத்திய சுகாதாரத்துறை, உள்துறையின் அறிவுறுத்தலின்பேரில்தான் இந்தத் தடைகள், தளர்வுகளெல்லாம் அறிவிக்கப்படுகின்றன. அப்படியானால் இவர்கள் யாருக்கு எதிராகப் போராட வேண்டும்? தனிப்பட்ட மதத்துக்கு அனுமதி கொடுத்து இந்துகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்காமலிருந்தால் இவர்கள் போராடலாம். யாருக்குமே அனுமதியில்லை எனும்போது இதை ஏன் அரசியலாக்குகிறார்கள்? பொதுமக்களின் நலன்தான் முக்கியமே தவிர, மதரீதியிலான எதிர்ப்பு என்பதில்லை. டாஸ்மாக்கையும் பள்ளிக்ளையும் திறந்திருக்கிறீர்களே எனக் கேட்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன்... மத்திய அரசின் ஆலோசனையின்படித்தான் தமிழக அரசு கொரோனா தளர்வுகளை அறிவித்துவருகிறது. கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை எப்படிக் காப்பாற்றினோம் என்பது தெரியும். அவர்களுக்குத் தெரியும்... தமிழ்நாடு முதல்வர் எது செய்தாலும் நம் நலனுக்குத்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான் மக்கள் இது தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தமிழ்நாடு அரசுமீது எந்தக் குற்றமும் இவர்களால் சுமத்த முடியவில்லை. இவர்களுக்குக் கொள்கையும் கோட்பாடும் இல்லை என்பதால், ஏதாவது ஒன்றைத் தொற்றிக்கொண்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். வேல் யாத்திரை சென்றார்கள். அதை மக்கள் கண்டுகொண்டார்களா? பா.ஜ.க-வின் நோக்கம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இவர்கள் மக்கள் மத்தியில் மலினப்பட்டுப்போவார்கள்.

மழைக்காலமும் தொடங்கிவிட்டது. இப்போது கோயிலைத் திறந்தால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மக்களே `எங்களுக்கு வேண்டாம்’ எனச் சொல்லும் நீட் தேர்வுக்காகப் போராட மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைக் கேட்டுப் போராட மாட்டார்கள். ஆனால், கோயில்களில் வியாபாரம் நடக்காமல் இருப்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். ஒன்றிய அரசிடம் சொல்லி அம்பானி, அதானியை விட்டுவிட்டு எளிய மக்கள் வாழ்வியலுக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தச் சொல்லலாமே... இன்றைக்கு இருக்கும் சூழலில் தமிழ்நாட்டு மக்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி, கல்லூரிகளுக்கு விருப்பப்பட்டவர்கள் 50 சதவிகிதம் மட்டும் வந்தால் போதும். இந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துவிடலாம். டாஸ்மாக்கில் காவல்துறையை வைத்து கட்டுப்படுத்திவிடலாம். பக்தர்களை அப்படி அடக்கிவிட முடியுமா? இதையெல்லாம் யோசிக்காமல் போராட்டம் என்று அறிவித்திருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆய்வில் அமைச்சர் சேகர்பாபு
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆய்வில் அமைச்சர் சேகர்பாபு

பா.ஜ.க-வை நம்பி அவர்களின் கட்சிக்காரர்களே போராட்டத்துக்குச் செல்ல மாட்டார்கள். விநாயகர் சதுர்த்திக்கு லட்சம் போஸ்ட் கார்டு அனுப்புவோம் என்றார்கள் அல்லவா... நான் கேட்டேன். `மொத்தமாக ஆயிரம் கார்டுகள்கூட தலைவருக்கு வரவில்லை’ என்றார்கள். முழுக்க முழுக்க மதம் சார்ந்து இவர்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தை மக்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு