Published:Updated:

சாதிவாரியாகப் பிரித்து, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார்களா மாணவர்கள்?! விளக்கம் கேட்ட இணை ஆணையர்

சென்னையிலுள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில், மாணவர்களை சாதிவாரியாகப் பிரித்து பள்ளிக்கு வரவழைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையிலுள்ள மாநகராட்சி அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்கள் சாதிவாரியாகப் பிரிக்கப்பட்டு, பள்ளிக்கு வரவழைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நேற்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி
பள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள்! - தமிழக அரசின் கடமைகள் என்னென்ன?

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கக்கூடிய பள்ளிகளில் தினசரி வகுப்புகளும், அதிகமாக இருக்கக்கூடிய பள்ளிகளில் சுழற்சி அடிப்படையில் ஒரு நாள்விட்டு, ஒரு நாள் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை முன்னதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில், சென்னை எம்.ஜி.ஆர் நகரிலுள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால் சுழற்சி அடிப்படையில் மாணவர்களை அழைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்காகப் பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவுதான் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

எம்.ஜி.ஆர் நகரிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சாதி அடிப்படையில் வருகைப் பதிவேட்டை தயாரித்ததாகவும், பின்னர், அதனடிப்டையில் சாதிவாரியாக மாணவர்களைப் பிரித்து பள்ளிக்கு வரவழைத்ததாகவும் குற்றசாட்டு எழுந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் புதன், சனி ஆகிய கிழமைகளில் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், அந்தப் பிரிவிலேயே இன்னொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கு செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரலாம் எனவும் பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் அகரவரிசைப்படியே மாணவர்களின் பெயர்கள் பதிவேட்டில் வரிசைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்தப் பள்ளியில் மட்டும் கடந்த பல ஆண்டுகளாகவே பதிவேட்டில் சாதிவாரியாக மாணவர்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை

இது போன்று, மாணவர்களை சாதிரீதியாகப் பிரித்து, குறிப்பிட்ட நாள்களில் வகுப்புக்கு வர வேண்டும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாநகராட்சி இணை ஆணையர் டி.சினேகா, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் எழுத்துபூர்வமான விளக்கம் கேட்டு உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும் இது குறித்து பேசிய டி. சினேகா, `` எல்லாப் பள்ளிகளிலும், அகரவரிசைப்படியே வருகைப் பதிவேடுகள் இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் வரிசைப்படுத்தி பெயர்களை எழுதுவது ஒருபோதும் நடைமுறையில் இல்லை! இதைச் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வோம். மேலும், மாணவர்களின் பெற்றோர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தி, மாணவர்கள் பிரிக்கப்பட்ட பேட்ச்-களும் மாற்றப்படும்!" எனவும் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு