Published:Updated:

திருச்சி: முதல்வர் விழாவில் பிரமாண்டம் காட்டிய திமுக-வினர்; முகம் சுளித்த சமூக ஆர்வலர்கள்!

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

அரசு விழாவை, அரசுக்குச் சொந்தமான மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம் அல்லது காஜாமலையிலுள்ள ஸ்டேடியம் போன்ற இடங்களில் நடத்தாமல், தாயனூரிலுள்ள தி.மு.க அமைச்சருக்குச் சொந்தமான தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

``தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆடம்பர செலவைக் குறைத்துக்கொள்ளுங்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாலும், நேற்று திருச்சியில் நடந்த அரசு விழா நிகழ்ச்சியை தடபுடலாக நடத்தி முடித்திருக்கிறார்கள் தி.மு.க-வினர். மறுபுறம் தொண்டர்களை அழைத்துவருவது, பணம் பிரித்துக்கொடுப்பதில் அடிதடி எனச் சில சண்டை சச்சரவுகளோடு கட்சியினர் விழாவை முடித்திருப்பது மாவட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

திருச்சி அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ரூ.153.22 கோடி மதிப்பீட்டில் 203 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்து, ரூ.604.1 கோடி மதிப்பிலான 532 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், பொன்முடி, ரகுபதி, சக்கரபாணி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திருச்சிக்கு முதல்வர் வருகை தந்தபோது நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்துவருகின்றனர்.

அரசு விழாவை அரசுக்குச் சொந்தமான மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம் அல்லது காஜாமலையிலுள்ள ஸ்டேடியம் போன்ற இடங்களில் நடத்தாமல், தாயனூரிலுள்ள தி.மு.க அமைச்சருக்குச் சொந்தமான தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தி.மு.க நிர்வாகிகள் வழிநெடுகிலும் முதல்வர், அமைச்சர்கள் செல்லும் கார்களுக்கு வீதிகளில் பூத்தூவி வரவேற்பு கொடுத்தனர்.

அதேபோல, முதல்வரை வரவேற்கும்விதமாக நடன நிகழ்ச்சிகளையும் தி.மு.க-வினர் ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வர் விழா என்பதால் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டுமென்று தி.மு.க-வினர் பணம் கொடுத்து வேன்களில் ஆட்களை அழைத்துவந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன், ``முதல்வர் கூட்டம் என்பதால் திமுக-வினர் மிகவும் பிரமாண்டமாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்கள். முதல்வரை வரவேற்க, பொது இடங்களில் மேடைகள் அமைத்து நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு வித்திட்டனர்.

சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன்
சமூக ஆர்வலர் அல்லூர் சீனிவாசன்

இதைத் தடுக்கவேண்டிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் எப்படி அனுமதி தந்தார்கள் என்று தெரியவில்லை. பஸ் போக்குவரத்தை மாற்றிவிட்டதால், மக்கள் மணப்பாறையிலிருந்து திருச்சி வருவதற்கு விராலிமலையைச் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, கூட்டத்துக்குப் பொதுமக்களை அழைத்துவருவதற்குப் பணம் தர மறுத்ததால் திருச்சி தி.மு.க-வில் ராம்குமார் தரப்புக்கும், வட்டச் செயலாளர்கள் ஜனா, சிவக்கண்ணன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்திருக்கிறது. இது போன்ற ஆடம்பர வரவேற்பை முதல்வர் விரும்பாத நிலையில், அந்தக் கட்சி நிர்வாகிகள் எல்லை மீறி நடந்துகொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின், கே.என்.நேரு
முதல்வர் ஸ்டாலின், கே.என்.நேரு

விழா மேடையில் பேசிய தலைவர்களில் எம்.பி ஜோதிமணி, திருநாவுக்கரசர் ஆகியோர் எந்த அளவுக்குப் புகழ வேண்டுமோ அந்த அளவுக்குப் புகழ்ந்துவிட்டு, திருச்சி மாவட்டத்திலுள்ள குறைகளையும் தெளிவாக எடுத்துக் கூறினர். திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவைத்துச் சிறப்பாகப் பேசினார் திருநாவுக்கரசர். மற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலரும் முதல்வரின் புகழ் பாடுவதிலேயே குறியாக இருந்தனர். ஸ்டாலின் தமிழகத்தைச் சிறப்பாக வழிநடத்துகிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பொருளாதார நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவேண்டிய முதல்வர், இது போன்ற ஆடம்பர விழாக்களைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சிக்குப் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டியது, பண விவகாரத்தில் கைகலப்பு, போக்குவரத்து இடையூறு, கொரோனா பரவலுக்கு மத்தியில் பிரமாண்ட விழா என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் முன்வைத்த குற்றசாட்டுகள் குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள்

கே.என்.நேருவின் ஆதரவாளரும், முசிறி தொகுதி எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி தியாகராஜனிடம் பேசினோம். ``இது ஆடம்பர நிகழ்ச்சி என்றால் அ.தி.மு.க-வினர் ஆட்சியிலிருந்தபோது அவர்கள் நடத்திய விழாக்களை என்னவென்று சொல்வீர்கள்? தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் மக்கள் தன்னெழுச்சியாக, தாமாக முன்வந்து கலந்துகொண்டனர். இந்த அரசு விழாவுக்குக் குறைந்தது 50,000 பேரைக் கூட்ட வேண்டும் என்று திட்டமிட்டு வேலைகளைச் செய்துவந்தோம். ஆனால் தளபதியார் கொரேனா பிரச்னையைக் காரணம் காட்டி, `கூட்டத்தைக் கூட்ட வேண்டாம். நமக்குத்தான் கெட்ட பெயர்’ என்று கறாரான உத்தரவைப் பிறப்பித்ததால், கூட்டத்தைக் குறைத்து சமூக இடைவெளியோடு விழாவை நடத்தியிருக்கிறோம். இதில் எந்தத் தவறும் இல்லையே... குறை சொல்பவர்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம்... அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்" என்றார்.