Published:Updated:

`உத்தரப்பிரதேசத்தில் தனித்துப் போட்டி' - காங்கிரஸ் கட்சியின் முடிவு பாஜக-வுக்கு சாதகமா?

உத்தரப்பிரதேசத்திலுள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துக் களம் காண முடிவுசெய்திருக்கிறது காங்கிரஸ். இது பாஜக-வுக்கு சாதகமாகிவிடுமா?

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் வலுவாக இருக்கும் கட்சிதான், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும். இதன் காரணமாகத் தேசிய கட்சிகளான பா.ஜ.க-வும், காங்கிரஸும் போட்டிப் போட்டுக்கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. கூடவே, உ.பி-யின் மாநிலக் கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் களத்திலிருப்பதால், அங்கு நான்கு முனைப் போட்டி நிலவிவருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ``காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பலரும், `எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம்' என்று என்னிடம் கூறிவருகின்றனர். அவர்களின் விருப்பத்துக்கு இணங்க எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்'' என்று அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் தலைமை
காங்கிரஸ் தலைமை
பிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்?

கடந்த சில தினங்களுக்கு முன்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தாலும் உ.பி-யில் பா.ஜ.க-வை வீழ்த்தமுடியாது'' என்றிருந்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில் பேசிய உ.பி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அஜய் குமார் லல்லு, ``உ.பி-யில் காங்கிரஸ்தான் மாற்றுக் கட்சி. வரும் தேர்தலில் பா.ஜ.க-வால் 30 இடங்களுக்கு மேல் தாண்ட முடியாது. காங்கிரஸ் பெரும்பான்மையோடு வெற்றிபெறும். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவதை மட்டுமே விரும்புகிறார். அவர், களத்தில் இறங்கி மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. இந்தத் தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளோடு நிச்சயம் கூட்டணி இல்லை. சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று கூறியிருந்தார்.

இதன் மூலம், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தவொரு பெரிய கட்சியோடும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பது உறுதியாகிறது. சிறிய கட்சிகளைச் சேர்த்துக்கொண்டாலும், பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் எனத் தெரிகிறது. அந்த வகையில், `காங்கிரஸ் கட்சித் தனித்துப் போட்டியிடுவதால், ஆளும் கட்சியான பா.ஜ.க-வுக்கு அது சாதகமாக மாறிவிடுமா?' என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ``பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் வன்முறை, கொரோனாவை சரியாகக் கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு என மக்களுக்கு உ.பி-யில் ஆளும் பா.ஜ.க அரசுமீது கடும் அதிருப்தி இருக்கிறது. இருந்தும், பெரிய எதிர்க்கட்சி ஏதும் இல்லாத காரணத்தால், அங்கு வலுவாக இருந்துவருகிறது பா.ஜ.க. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பா.ஜ.க-வுக்கு சாதகமாகவே அமையும். ஏற்கெனவே, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் சிறு சிறு கட்சிகளோடு மட்டுமே கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்கப்போவதாக அறிவித்திருக்கின்றன. மேலும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம், சந்திரசேகர் ஆசாத்தின் பீம் ஆர்மி, ராஷ்டிரிய லோக் தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாகக் களம் காண்கின்றன. இந்த நிலையில், காங்கிரஸும் தனித்துக் களம் கண்டால், அது பா.ஜ.க-வின் வெற்றியை எளிதாக்கிவிடும்'' என்கிறார்கள்.

உ.பி தேர்தல்
உ.பி தேர்தல்
`நவம்பர் 26 வரைதான் மத்திய அரசுக்கு அவகாசம்...' - தீவிரமடைகிறதா டெல்லி விவசாயிகள் போராட்டம்?

``காங்கிரஸைப் பொருத்தவரை கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதால், பெரிய கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் அது குழப்பத்தைப் பெரிதாக்கிவிடும் என்று நினைக்கிறது கட்சித் தலைமை. அதுமட்டுமல்லாமல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் நிர்வாகிகளோடு, மாநிலக் காங்கிரஸ் நிர்வாகிகள் நல்லுறவில் இல்லை. எனவே, அந்தக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தால், அது தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தி காங்கிரஸுக்குப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதன் காரணமாகத்தான் தேர்தலைத் தனித்துச் சந்திக்கக் கட்சி மேலிடம் முடிவெடுத்திருக்கிறது. மேலும், தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றி, உ.பி-யில் எதிர்க்கட்சியாகவாவது மாற வேண்டும் என்பதே கட்சி மேலிடத்தின் விருப்பமாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக தொகுதிகள் கொண்ட உ.பி-யில், தனித்துப் போட்டியிட்டு பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மாற்று நாங்கள் மட்டுமே என்பதை மக்கள் மத்தியில் நிரூபிக்கவும் வசதியாக இருக்குமெனக் கட்சித் தலைமை நினைக்கிறது'' என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு