Published:Updated:

தேர்தல்களுக்குத் தயாராகும் காங்கிரஸ்... `தலையாய' பிரச்னையை முதலில் தீர்க்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

டெல்லியில், வரும் அக்டோபர் 16-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் என்னென்ன பிரச்னைகள் பிரதானமாக விவாதிக்கப்படும்?

இந்தியாவின் பழைமைவாய்ந்த அரசியல் கட்சியான காங்கிரஸ், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. ஆட்சியிலிருந்த மாநிலங்கள் பலவும் காங்கிரஸின் கையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன. ஆட்சி செய்யும் சில மாநிலங்களில்கூட உட்கட்சிப்பூசலால் திண்டாடிவருகிறது காங்கிரஸ். இவை போதாதென்று, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கும் நிரந்தரத் தலைமை இல்லை என்பதும் அந்தக் கட்சிக்குத் தலைவலியாக இருந்துவருகிறது.

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா
காங்கிரஸ், மம்தா தேசிய அரசியலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் வல்லமை யாரிடம் இருக்கிறது? - ஓர் அலசல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், ``கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யாருமில்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நாங்கள் ஜி-23 குழுவைச் (காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியோடு இருப்பவர்களின் குழு) சேர்ந்தவர்கள். என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு இருக்க மாட்டோம். பிரச்னைகள் குறித்துக் கேள்வியெழுப்புவோம்'' என்று கூறியிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்படத் தொடங்கியது. கட்சி மேலிடத்துக்கு ஆதரவாகத் தொண்டர்கள் பலரும் கபில் சிபல் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். கபில் சிபலுக்கு ஆதரவான குரல்களும் கட்சிக்குள் எழுந்தன.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 16-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடத்தப்படும் எனக் கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. டெல்லியிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது, சமகால அரசியல் சூழல் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்
ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்

இதற்கிடையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்கிற செய்தி கடந்த சில மாதங்களாகச் சொல்லப்பட்டுவந்தது. ஆனால், கடந்த வாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்னைகள் குறித்து விமர்சித்து ட்வீட் செய்திருந்தார் பிரசாந்த் கிஷோர். அந்த ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் என்று குறிப்பிடாமல் 'பழைமைவாய்ந்த பெரிய கட்சி' எனக் குறிப்பிட்டிருந்தார் அவர். ``லக்கிம்பூர் கேரி சம்பவத்தை வைத்து பழைமைவாய்ந்த பெரிய கட்சியை மீட்டெடுத்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. பழைமைவாய்ந்த கட்சியின் ஆழமான பிரச்னைகளுக்கும், பலவீனமான கட்டமைப்புகளுக்கும் உடனடித் தீர்வுகளே இல்லை'' என்று பதிவிட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

இதையடுத்து, ``கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்ய பிரசாந்த் கிஷோரை காங்கிரஸுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தது கட்சி மேலிடம். ஆனால், அவர் சொன்ன சில நிபந்தனைகளுக்குக் கட்சி மேலிடம் ஒத்து வரவில்லை. அந்த அதிருப்தியைத்தான் இப்போது ட்விட்டர் பதிவில் வெளிக்காட்டியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்'' என்று செய்திகள் சொல்லப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீண்டு வருமா காங்கிரஸ்?

``இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நல்ல கட்டமைப்பு கொண்டிருந்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். ஆனால், தற்போது பல மாநிலங்களிலும் கட்சிக் கட்டமைப்புகள் வலுவிழந்துவிட்டன என்பதுதான் உண்மை. இதற்கு, சரியான தலைமை இல்லாததும், உட்கட்சிப்பூசல்களுமே காரணம். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அப்போதே ராகுல் காந்தியின் இந்த முடிவு பெரும் விமர்சனத்துக்குள்ளானது. `தேர்தல் தோல்வியில் தலைவரே துவண்டுபோனால், தொண்டர்களின் மனநிலை எப்படியிருக்கும்?' என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் இல்லாததே பெரும் பின்னடைவாக இருக்கிறது.

காங்கிரஸ் கொடி
காங்கிரஸ் கொடி
`குயின்ஸ் லேண்ட் பஞ்சாயத்து' -
முட்டி மோதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ; கறார் காட்டிய அமைச்சர் சேகர் பாபு

கடந்த 10 ஆண்டுகளில் கட்சித் தாவல், உட்கட்சிப்பூசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரச்னைகளை எதிர்கொண்டுவருகிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில்தான், 2024 நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்திவருகிறது காங்கிரஸ். ஆனால், கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளை முதலில் சரிசெய்தால் மட்டுமே காங்கிரஸால் தேர்தலில் வெற்றிபெறுவது பற்றி சிந்திக்கவே முடியும். இதை மனதில்கொண்டுதான் காரிய கமிட்டியைக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி.

இந்தக் கூட்டத்தில், அதிருப்தியிலிருக்கும் ஜி-23 தலைவர்களைச் சமரசம் செய்வதையும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதையும்தான் பிரதான பிரச்னைகளாக எடுத்துப் பேச, காங்கிரஸ் மேலிடம் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இன்னும் சில நாள்களுக்குள்ளாக இந்தப் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வுகாண வேண்டும். அதோடு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள். அப்படி உற்சாகத்தோடு வேலை செய்தால் மட்டுமே, பல மாநிலங்களில் பலமாக இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும்'' என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு