Published:Updated:

கைவிடப்படும் கைக்குழந்தைகள் அதிகரிப்பு: என்ன ஆனது தொட்டில் குழந்தை திட்டம்?!

தொட்டில் குழந்தை திட்டம்

சமீபகாலமாக, சாலைகளிலும் தெருக்களிலும் வீசிச் செல்லப்படும் கைக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டிலுள்ள தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

கைவிடப்படும் கைக்குழந்தைகள் அதிகரிப்பு: என்ன ஆனது தொட்டில் குழந்தை திட்டம்?!

சமீபகாலமாக, சாலைகளிலும் தெருக்களிலும் வீசிச் செல்லப்படும் கைக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டிலுள்ள தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

Published:Updated:
தொட்டில் குழந்தை திட்டம்

சாலையில் வீசப்படும் குழந்தைகள்:

நேற்று முன்தினம் (18.06.2022) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேலிப்பட்டி பகுதியில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதர் அருகே அழுதுகொண்டிருந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்தனர். அந்தக் குழந்தையின் அருகில் யாரும் இல்லாததையடுத்து அந்தப் பகுதி வாசிகள் இது குறித்த தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாலையில் வீசப்பட்ட குழந்தை
சாலையில் வீசப்பட்ட குழந்தை

இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு அருகிலுள்ள உசிலம்பட்டி பகுதியில் சாலையில் ஒரு ரத்தக்கறையுடன் இருந்த துணியை நாய்கள் கடித்துக்கொண்டிருந்தன. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் இது குறித்து உசிலம்பட்டி பகுதி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், அந்தத் துணியை எடுத்துப் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்துக் குதறியிருப்பது தெரியவந்தது. சிதைந்த நிலையிலிருந்த குழந்தையை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொட்டில் குழந்தை திட்டம்:

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பச்சிளம் குழந்தைகளைத் தெருக்களில் வீசிச் செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், சமீபகாலமாக, தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி போன்ற மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை அதிகரித்துக் காணப்பட்டது ஓர் ஆய்வில் தெரியவந்தது. குடும்ப வறுமை காரணமாகவும், பெண் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாதவர்களும் தங்களுடைய குழந்தையைக் கொலை செய்வதும், சாலைகளில் வீசிச் செல்லும் அவலமும் அதிகரித்தன. பெண் சிசுக் கொலையை முற்றிலும் தடுக்கும் நோக்கத்தோடு, கடந்த 1992-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா `தொட்டில் குழந்தை’ திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

தொட்டில் குழந்தை திட்டம்
தொட்டில் குழந்தை திட்டம்

முதலில் சேலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம், படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் காப்பகங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. தங்கள் குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர் அந்தக் குழந்தையை இந்தத் தொட்டிலில் வைத்துச் செல்லலாம். அந்தக் குழந்தை முறைப்படி, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்குத் தத்து கொடுக்கப்படும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. தற்போது இந்த திட்டம் பெயரளவில் மட்டுமே செயல்பட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன ஆனது இந்தத் திட்டம்?

இந்தத் திட்டம் இப்போது எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து சமூகநலத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``திட்டம் ஆரம்பித்தது முதல் கடந்த ஆண்டுவரை 5,600-க்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 1,200-க்கும் அதிகமான ஆண் குழந்தைகளும், 4,000-க்கும் அதிகமான பெண் குழந்தைகளும் அடக்க. ஒவ்வோர் அரசு மருத்துவமனையிலும் இந்தத் திட்டம் இன்றுவரை நடைமுறையில்தான் இருக்கிறது. இந்தத் திட்டத்துக்காக ஒவ்வோர் ஆண்டும் அரசு சார்பில் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மீட்கப்படும் குழந்தைகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை போன்ற இடங்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவருகிறார்கள்" என்றார்.

தொட்டில் குழந்தை திட்டம்
தொட்டில் குழந்தை திட்டம்

தொடர்ந்து பேசியவர், ``அந்தக் குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகையை அந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு வழங்கிவருகிறது. தொட்டில் குழந்தை திட்டம் குறித்த விழிப்புணர்வும் தொடர்ந்து மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. வறுமை காரணமாகவோ அல்லது வேறு எந்தக் காரணமாகவோ இருந்தாலும், குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அந்தக் குழந்தையைத் தொட்டிலில் வைத்துவிட்டுச் செல்லலாம். குழந்தை இல்லாமல் ஏங்கும் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெற்றோருக்கு அந்தக் குழந்தை தத்துக்கொடுக்கப்படும். இருந்தபோதிலும், குழந்தைகளைத் தொட்டில்களில் விட்டுச் செல்லாமல் சாலைகளில் வீசிச் செல்லும் கொடூரமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை முற்றிலும் தடுக்க அரசு சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று பேசினார்.

அரசுத் தரப்பில் அனைத்து மருத்துவமனைகளிலும் தொட்டில் குழந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது என்று சொன்னாலும், அந்தத் தொட்டில் எங்கே இருக்கிறது என்பதைத் தேடினால்கூட கிடைக்காத நிலையில்தான் இருக்கிறது. அரசு சார்பில் இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதே பல சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. விரைந்து நடவடிக்கை எடுக்குமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism