Published:Updated:

கச்சத்தீவு: முதல்வரின் கோரிக்கை Vs அண்ணாமலையின் விமர்சனம்! - பற்றியெரியும் விவாதத்தின் பின்னணி என்ன?

ஸ்டாலின் - மோடி

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தி.மு.க-பா.ஜ.க இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது... இதன் பின்னணி என்ன?!

கச்சத்தீவு: முதல்வரின் கோரிக்கை Vs அண்ணாமலையின் விமர்சனம்! - பற்றியெரியும் விவாதத்தின் பின்னணி என்ன?

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தி.மு.க-பா.ஜ.க இடையே கருத்து மோதல் வெடித்திருக்கிறது... இதன் பின்னணி என்ன?!

Published:Updated:
ஸ்டாலின் - மோடி

``கட்சத்தீவை மீட்க உரிய நடவடிக்க எடுக்க வேண்டும்'' என அண்மையில் சென்னையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். உடனடியாக அதற்கு எதிர்வினையாற்றிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று சொல்வதற்குத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையிருக்கிறது. ஆனால், ஸ்டாலின் குடும்பத்துக்கு உரிமையில்லை'' எனக் காட்டமாகக் கருத்துத் தெரிவிக்க... இந்த விவகாரம் பற்றி எறியத் தொடங்கியிருக்கிறது.

மோடி - ஸ்டாலின்
மோடி - ஸ்டாலின்

ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்கவேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

குறிப்பாக கச்சத்தீவு குறித்துப் பேசிய முதல்வர், ``தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பர்ய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், முதல்வரின் இந்தக் கோரிக்கையை மிகக் காட்டமாக விமர்சித்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``இந்திரா காந்தியின் ஆட்சியில் 1974-ம் ஆண்டில் திட்டம்போட்டு கலைஞர் கருணாநிதி கச்சத்தீவைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அதற்குப் பின்னால் 1976-ம் ஆண்டில் இவர்கள் போட்ட ஒப்பந்தத்தை மீறி முழுமையாகக் கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்துவிட்டு... மேடையில் என்ன தைரியத்தில் ஸ்டாலின் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கிறார்'' எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ``பிரதமரை மேடையில் அமர வைத்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பேச்சு ஒரு அரசியல் நாடகம்'' என்றும் அண்ணாமலை விமர்சித்தார். அதனைத் தொடர்ந்து கச்சத்தீவு குறித்து மிகப்பெரிய கருத்துமோதல் தி.மு.க, பா.ஜ.க தொண்டர்களிடையே உருவாகியுள்ளது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த நிலையில், நாட்டின் பிரதமரிடம், மாநில முதல்வர் கோரிக்கை வைப்பதில் என்ன தவறு?... அதிலென்ன அரசியல் இருக்கிறது என தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``இது சரியான நேரம் என்று சொல்கிற மு.க.ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட நேரத்தில் தி.மு.க செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு, இப்போது மீட்கவேண்டும் என்று சொல்வது அரசியல் சந்தர்ப்பவாதமே. கச்சத்தீவைப் பொறுத்தவரை, பா.ஜ.க இன்று, நேற்றல்ல... தி.மு.க-வும், காங்கிரஸும் அதை இலங்கைக்குத் தாரைவார்த்த நேரத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறது. அதனால், இந்த விவகாரத்தை நாங்கள் கச்சிதமாக எதிர்கொள்வோம். 2004-லிருந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கெடுத்தபோது இதைச் செய்ய மறுத்தது ஏன் என்பதற்கு முதலில் தி.மு.க-வினர் பதில் சொல்லவேண்டும். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசி, அதற்கான நிரந்தரத் தீர்வுக்கான முன்னெடுப்புகளைச் செய்துவரும் நேரத்தில், இவர்கள் இப்படி கோரிக்கை வைக்கவேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் எங்கள் கருத்து'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கருத்துகள் குறித்து, தி.மு.க-வின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தியிடம் பேசினோம்.

``இன்றைய காலகட்டத்தில் இந்தியாவை நம்பித்தான் இலங்கை இருக்கிறது. நம் நாட்டிலிருந்து ஏராளமான உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கணக்கில்கொண்டு, ஒரு மனிதாபிமான் அடிப்படையில் இரு தரப்பு மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, கச்சத்தீவை மீட்பதற்கான வழியைச் செய்யலாம் என்பதால்தான் முதல்வர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். கச்சத்தீவை காங்கிரஸ் கொடுத்துவிட்டது என அண்ணாமலை சொல்கிறார். அது அப்படியே இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் அவர் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில், ஆர்டிக்கிள் 4-இன் படி, மாநிலத்தின் ஒரு பகுதியை, மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே ஒன்றிய அரசு கொடுக்கலாம் என்கிற விதியைப் பயன்படுத்திதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத, எம்.ஜி.ஆர் ஆதரித்த எமெர்ஜென்சி காலகட்டத்தில்தான் அதற்கான முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் போட்டவுடனேயே, நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடிய கட்சி தி.மு.க.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

எந்தவொரு இடத்திலாவது கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது சரிதான் என நாங்கள் பேசியிருந்தால் அதை அண்ணாமலை காண்பிக்கட்டும். கூட்டணியில் இருந்தபோதும் அதை வலியுறுத்தாமல் இருந்தோமா என்பதற்கும் அவர் பதில் சொல்லவேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இதுவரை எந்தவொரு தேசிய மாநாட்டிலாவது பா.ஜ.க-வின் தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கச்சத்தீவைக் கொடுத்தது சரியல்ல என்று பேசியதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்கவேண்டும். பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்குவந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, இதுவரை எத்தனை ஆயிரம் கோடி இலங்கைக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கச்சத்தீவைக் கொடுத்துவிடுங்கள் என இலங்கை அரசுக்கு முன்வைத்த ஒரேயொரு கோரிக்கையை அவர்கள் காட்டட்டும். 2014 பா.ஜ.க சார்பில் நடைபெற்ற கடல்தாமரை மாநாட்டில் கச்சத்தீவை மீட்டுவிடுவோம் என்று பேசிய சுஷ்மா சுவராஜ், அதை ஏன் நாடாளுமன்றத்தில் பேசவில்லை. ஆர்டிக்கிள் 4- ஐப் பயன்படுத்தி மாநில அரசைக் கேட்காமல் கொடுக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் மாறியதில்லை. அண்ணாமலையைப் பொறுத்தவரை அரசியலும் தெரியவில்லை, அரசியலைமைப்புச் சட்டமும் தெரியவில்லை இன்னும் அவர் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism