Published:Updated:

செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு அரசு ஸ்கோர் செய்தது எங்கே?!

செஸ் ஒலிம்பியாட் - திமுக

நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்த்த சில செயல்பாடுகளைப் பற்றி அலசுகிறது இந்த கட்டுரை..!

செஸ் ஒலிம்பியாட்: தமிழ்நாடு அரசு ஸ்கோர் செய்தது எங்கே?!

நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் கவனம் ஈர்த்த சில செயல்பாடுகளைப் பற்றி அலசுகிறது இந்த கட்டுரை..!

Published:Updated:
செஸ் ஒலிம்பியாட் - திமுக

செஸ் ஒலிம்பியாட்:

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28-ம் தேதி தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான போட்டி என்பதால் தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்திருக்கின்றன.

செஸ் ஒலிம்பியாட் - தொடக்கவிழா
செஸ் ஒலிம்பியாட் - தொடக்கவிழா

இந்த விழாவுக்காகப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை அழகுபடுத்தப்பட்டது. சென்னை விமான நிலையம் அருகே பசுமைப் பூங்கா அமைத்தல், `வணக்கம் சென்னை’ பதாகை, கிழக்கு கடற்கரை சாலையை அழகுபடுத்தும் பணி, தடுப்புச்சுவர் பழுதுபார்த்தால், வண்ணம் பூசுதல் எனப் பல்வேறு பணிகள் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்து முடிக்கப்பட்டிருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டி ஏற்பாடுகள்:

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள், `போட்டிகளில் விளையாட நாங்கள் எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். ஆனால், இங்கு அளிக்கப்பட்டது போன்ற சிறப்பான ஏற்பாடுகளையும், வரவேற்பையும் பார்த்தது கிடையாது' என்று கூறியுள்ளனர். பிரதமர் மோடியும், `மிகக் குறுகியகாலத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது' என்று பாராட்டிப் பேசியிருந்தார்.

பாடல் காட்சி
பாடல் காட்சி

ஒரு சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து முடிக்க 18 மாதங்களாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு கிட்டத்தட்ட மூன்றே மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உருவாக்கப்பட்ட பாடல் பெரும் வரவேற்பைப் பெறவில்லை எனக் கூறப்பட்டாலும், கறுப்பு, வெள்ளை உடைகளில் செஸ் ஆடுவது போன்று உருவாக்கப்பட்டிருந்த பாடல், காட்சிப்படுத்தப்பட்டிருந்தவிதம் பெரும் கவனம் பெற்றது.

விளம்பரப் படம்:

விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைக்க, பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதில் பிரதமர் படம் இல்லாததற்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்தனர். பாஜக-வைச் சேர்ந்த சிலர், பிரதமரின் புகைப்படத்தை ஒட்டிய சம்பவமும் நடந்தது. மாநில அரசு நிதியில் நடத்தும் போட்டியில் பிரதமரின் படம் எதற்கு என்று திமுக-வினர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

பாஜக போஸ்டர்
பாஜக போஸ்டர்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் வாகனங்கள் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும்விதத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. உலகம் முழுவதிலிருந்தும் வந்த பல்வேறு நாட்டினரிடமும் தமிழர்களின் கலாசாரத்தை எடுத்துச் சென்றது அனைவரின் தரப்பிலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

மேடையில் முன்னாள் முதல்வர்களின் படம்:

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவுவிழா மேடையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளின் படங்கள் இடம்பெற்றிருந்தன. பெரியார் படத்துடன் சமூகநீதி குறித்து காணொளி ஒளிபரப்பப்பட்டது. மேலும், தமிழ்நாடு முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் குறிப்புடன் ஒளிபரப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

மேடையில் முன்னாள் முதல்வர்களின் படம்
மேடையில் முன்னாள் முதல்வர்களின் படம்

அதேவேளையில், முன்னாள் முதல்வர்கள் பட்டியலில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். போன்றவர்களின் படங்களைத் திட்டமிட்டு திமுக புறக்கணித்திருக்கிறது என்று கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. என்ன விவரம் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``மறைந்த முன்னாள் முதல்வர்கள் குறித்த குறிப்புகளே படத்துடன் ஒளிபரப்பப்பட்டது. அரசு அதிமுக-வைப் புறக்கணிக்க வேண்டும் நினைத்திருந்தால், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் எப்படி இடம்பெற்றிருக்கும் என்பதைக் குற்றம் சொல்பவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்கள். தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தன என்பதுதான் வந்திருந்த அனைத்து விளையாட்டு வீரர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது. அதேபோல, இந்த விளையாட்டுப் போட்டியில் கிடைத்த இடங்களிலெல்லாம் திமுக அரசியல்ரீதியாக வெளுத்து வாங்கியது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.