Published:Updated:

சந்தனக் கடத்தல் வீரப்பன் முதல் அயோத்திகுப்பம் வீரமணி வரை!-யாரிந்த `ஸ்பெஷல் அசைன்மென்ட்’ வெள்ளத்துரை?

வெள்ளத்துரை
News
வெள்ளத்துரை

தமிழக போலீஸுக்குச் சவாலாக சில பிரச்னைகள் அவ்வப்போது கிளம்பும். அந்த நேரத்தில், அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்து வெள்ளத்துரையை அங்கே நியமிப்பார்கள். இப்போது வெள்ளத்துரைக்கான அசைன்மென்ட் என்ன?!

சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் கொடிகட்டிப்பறப்பதாக போலீஸாருக்குப் புகார்கள் குவிந்தவண்ணமாக இருந்துவருகின்றன. இந்தக் குற்றச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருக்கும் ரௌடிகளை ஒடுக்குவதற்காக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டிருக்கிறது. அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்ட்டர், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் வெள்ளத்துரை பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 7-ம் தேதியன்று இந்தப் புதிய பொறுப்பில் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். காஞ்சிபுரத்துக்கு வந்தவர் ரௌடிகள் லிஸ்ட்டை அலசி ஆராய்ந்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

யார் இந்த வெள்ளத்துரை?

`காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி-யான வெள்ளத்துரையின் ஆக்‌ஷன் தொடங்கிவிட்டது. அவரும், மாவட்ட எஸ்.பி சுதாகரும் கைகோத்து ரௌடிகளின் அட்ராசிட்டியை ஒழித்துக்கட்ட களம் இறங்கியிருக்கிறார்கள்’ என்கிறார்கள் விவரமறிந்த சிலர். காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் பிரபல வெளிநாட்டு நிறுவனங்கள் பல இயங்குகின்றன. `ஆட்டோ மொபைல் தொழில் ஹப்’ என்று சொல்லும் அளவுக்கு ஒரகடம் ஏரியா மாறிவிட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களிடம் இங்கிருக்கும் வசதிகளைச் சொல்லி, கேன்வாஸ் செய்து பலவித சலுகைகளை வழங்கி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசின் தொழில்துறை படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

வெள்ளத்துரை
வெள்ளத்துரை

அந்த வகையில் ஏற்கெனவே வந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசிடம் அண்மையில் ஒரு கோரிக்கை வைத்தனர். `எங்களால் தொழில் செய்ய முடியவில்லை... ரௌடிகளின் தலையீடு அதிகமாகிவிட்டது' என்று முறையிட்டனர். புதிதாக வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் ஆரம்பிக்க வருகிறவர்கள், ஏற்கெனவே இங்கே தொழில் செய்கிற நிறுவன அதிபர்களிடம், நடப்பு எப்படி என்று விசாரிப்பார்கள். அப்படி விசாரிக்கும்போது, இங்கே ரௌடியிசம் அதிகம் என்று சொல்லிவிட்டால், அவர்கள் தமிழகம் பக்கமே வர மாட்டார்கள். வேறு மாநிலத்துக்குப் போய்விடுவார்கள். அப்படிப்போனால், தமிழக அரசுக்குத்தான் பின்னடைவு! அதை யோசித்துத்தான், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ்.பி-யாகப் பணியாற்றிவந்த வெள்ளத்துரையை அங்கிருந்து மாற்றி, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி-யாக நியமனம் செய்திருக்கிறது தமிழக அரசு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னை மாநகராட்சியை ஒட்டி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வருகின்றன. இந்தப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருள்கள் விற்பனை உச்சத்தில் இருக்கின்றன. அதேபோல, யார் தாதா என்கிற போட்டியில் கோஷ்டிகளிடையே நடக்கும் கொலைகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. இந்தப் பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் கும்பல் இயங்கிவருகிறது. சில பல்கலைக்கழக மாணவர் விடுதிகளையே இந்த ரௌடிக் கும்பல் ஆக்கிரமித்து புகலிடமாக வைத்திருப்பதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்தவண்ணமாக இருந்துவந்தன.

குறிப்பாக, படப்பையை அடைமொழியாகக்கொண்ட இரண்டு எழுத்து ரௌடி, அதே அடைமொழியைக்கொண்ட மூன்று எழுத்து ரௌடி ஆகியோர் இந்தக் குற்றச் சம்பவங்களில் கொடிகட்டிப் பறக்கின்றனர். கடந்த வருடம் ரௌடி சூர்யா என்பவர் தேசியக்கட்சி ஒன்றில் இணைந்தார். அந்த ரௌடி மீதான பயம் காரணமாக, அவர் மனைவி, உள்ளாட்சி அமைப்பு ஒன்றின் பொறுப்புக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி ஏற்பதற்கு முன்னதாக போலீஸார் அவரைக் கைதும் செய்தது வேறு விஷயம். இப்படி முதலில் ரௌடயிசம், அடுத்து கோடீஸ்வரர் எனப் பணம் கொட்ட ஆரம்பித்ததும், அதைவைத்து அரசியலில் குதித்துப் பதவி வாங்கிய பலரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர். இவர்கள்தான் வெள்ளத்துரையின் அடுத்த டார்கெட்டாம்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

தன் 25 வருட சர்வீஸில் 12 என்கவுன்ட்டர்கள் நடத்தியவர் வெள்ளத்துரை. தமிழக போலீஸுக்கு சவாலாகச் சில பிரச்னைகள் அவ்வப்போது கிளம்பும். அந்த நேரத்தில், அந்தப் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்து வெள்ளத்துரையை அங்கே நியமிப்பார்கள். அவரை 'டிரபிள் ஷூட்டர்' என்று காவல்துறை வட்டாரத்தில் அழைப்பார்கள். கடந்த காலங்களில் இந்த ரூட்டில்தான் வெள்ளத்துரையை தமிழக போலீஸ் மேலிடம் பயன்படுத்திவந்திருக்கிறது. அந்த வகையில்தான், தற்போது காஞ்சிபுரத்துக்கு வெள்ளைத்துரை மாற்றப்பட்டிருக்கிறார்!

முதல் சம்பவம்!

ஆரம்பகாலத்தில், கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றியவர் வெள்ளத்துரை. பின்னர், அந்த வேலை பிடிக்காமல் விட்டு விலகினார். ஐந்து வருடங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் எஸ்.ஐ பணிக்கு அறிவிப்பு வெளியானது. அதைப் பார்த்து இன்டர்வியூவுக்குப் போய் தேர்வானார். வெள்ளத்துரை! தமிழக போலீஸில் எஸ்.ஐ-யாக 1997-ல் காலடி எடுத்துவைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் எஸ்.ஐ-யாக முதன்முதலில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, திருச்சிக்கு மாறுதல் ஆனார். 1998-ல் பாலக்கரை காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றியபோது, பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளியான கோ.சி.ஜான் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்பிலிருந்தார். அவர் போலீஸ் எஸ்கார்ட்டில் இருந்தபோது போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பி ஒட முயன்றபோது தற்காப்புக்காக வெள்ளத்துரை சுட்டதில் அதே இடத்தில் இறந்தார். இதுதான் வெள்ளத்துரையின் முதல் என்கவுன்ட்டர்.

என்கவுன்ட்டர்
என்கவுன்ட்டர்

அயோத்திகுப்பம் வீரமணி என்கவுன்ட்டர்!

2003-ல் சென்னையைக் கலக்கிவந்தவர் அயோத்திகுப்பம் வீரமணி. அவரைக் கைதுசெய்ய வெள்ளத்துரை டீம் சென்றபோது, அவர் இவர்களை திருப்பித் தாக்கியதால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வீரப்பன் என்கவுன்ட்டர்!

2004-ல் வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப்பகுதிக்குள் போய் அவரை ஆம்புலன்ஸ் வேனில் அழைத்துவருவதுதான் வெள்ளத்துரைக்கு இடப்பட்ட பணி. அப்படி ஒருவேளை, வீரப்பன் வரவில்லையென்றால், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றியும் தெளிவாக அப்போதைய அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் சொல்லியனுப்பினாராம். ஆனால், வீரப்பன் ஏதும் முரண்டுபிடிக்கவில்லை. வெள்ளத்துரை அழைத்ததும், உடனே வந்து வேனில் ஏறினாராம். `டிபன் இருக்கிறது. சாப்பிடுங்கள்' என்றபோது, `வேண்டாம். பசியில்லை. பிறகு சாப்பிடுகிறோம்' என்று தவிர்த்தாராம் வீரப்பன். ஒரு கட்டத்தில், ஆம்புலன்ஸ் வேனிலிருந்து வெள்ளத்துரையும், டிரைவர் சரவணனும் இறங்கி ஒட... அந்த இடத்தில் பதுங்கியிருந்த அதிரடிப்படையினர் வேனைச் சல்லடையாக துளைத்தனர். இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக இரட்டிப்பு பதவி உயர்வு வெள்ளத்துரைக்கு தரப்பட்டது. அப்படித்தான், தற்போது கூடுதல் எஸ்.பி-யாகப் பதவியில் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை என்கவுன்ட்டர்!

2010-ல் மதுரையில் போலீஸ்காரர் ஒருவரின் மகனும், இன்னொரு நபரும் இணைந்து வீடு புகுந்து கொள்ளையடித்துவந்தனர். அவர்கள்மீது 80-க்கும் அதிகமான வழக்குகள் இருந்தன. அவர்களைப் பிடிக்கும் முயற்சியில் தப்பிக்க முயல, வெள்ளத்துரை டீம் என்கவுன்ட்டர் செய்தது.

சிவகங்கை சம்பவம்!

2012-ம் வருடம், அக்டோபர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் எஸ்.ஐ ஆல்வின் சுதனை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றனர் மூன்று ரௌடிகள். அதற்கு அடுத்த மாதம், இரண்டு ரௌடிகள் ஒரு தடவையும், மூன்றாவது ரௌடி வேறு ஒரு சந்தர்ப்பத்தின்போதும் வெள்ளத்துரையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

இப்படி நீள்கிறது வெள்ளத்துரையின் என்கவுன்ட்டர் பட்டியல்..!

என்கவுன்ட்டர்
என்கவுன்ட்டர்

``என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் எடுத்திருக்கிறீர்கள். மனித உரிமையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பான போலீஸ் அதிகாரி அல்லவா நீங்கள்?” என்ற கேள்வியை வெள்ளத்துரை முன் வைத்தோம்.

அதற்கு அவர், ``மதுரையில் இரண்டு பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் தெரியுமா? கொள்ளையடிப்பது தொழில். அதனுடன் வீட்டிலுள்ள பெண்களை அவர்களது குடும்பத்தினரை மிரட்டி கட்டிப்போட்டு பாலியல் வன்முறை செய்துவிட்டுப்போனார்கள். இந்த விஷயம் புகாரில் இடம்பெறவில்லை. எங்களது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமா? போலீஸ் விசாரணையின்போது சரிவர ஒத்துழைக்கவில்லை. தப்பி ஓட முயன்றனர். போலீஸாரைத் தாக்க முற்பட்டபோதுதான், என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்கள்.

வெள்ளத்துரை
வெள்ளத்துரை

எங்களை சினிமாவில் வரும் போலீஸ் என்று நினைத்துவிடாதீர்கள். மனிதநேயம் உள்ள நிஜ போலீஸ். என்கவுன்ட்டர் என்பதை நாங்கள் திட்டமிட்டு எப்போதும் செய்வதில்லை. ரௌடிகள் எங்களைத் திருப்பித் தாக்கும்போது எங்கள் உயிரைக் காத்துக்கொள்ள... அதாவது, தற்காப்புக்காக அந்தச் சூழ்நிலையில் முடிவெடுத்து சுடவேண்டிவருகிறது. வயக்காட்டில் நெல் பயிருடன் களைகளும் ஊடுருவி வளர்க்கின்றன அல்லவா? அந்தக் களையை நாம் பறித்தால்தான், நெற்பயிர் செழித்து வளரும். அதுபோலத்தான் சமுதாயத்திலும்! உதாரணத்துக்கு, ஒரு ரௌடி 15 பேர்களைக் கொன்றவன். அவன் ஒருவன் போலீஸிடம் எதிர்ப்பைக் காட்டும்போது பலமுறை எச்சரிக்கை செய்து வேறு வழியில்லாமல்தான் சுட நேரிடுகிறது. அந்த ரௌடி ஒழிகிறான். அதேநேரம், அந்த ரௌடியால் நிர்கதியான 15 குடும்பங்களின் நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இதே ரௌடி, உயிரோடு இருந்திருந்தால் மேலும் பல பேரைக் கொன்றிருப்பான் அல்லவா? காவல்துறையை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் பார்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்" என்றார்.