அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள்விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் நிர்வாகிகளும் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகிறார்கள். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று காலையிலிருந்தே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகிறார்கள்.
தமிழக பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் வந்து மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேசமயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்த விசிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருமாவளவன் வரும்போது விசிக, பாஜக கொடிவைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இந்த மோதலின்போது இரண்டு தரப்பினரும் மாறி மாறிக் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். இதில், பாஜக-வைச் சேர்ந்த ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
நிலைமை மோசமாக அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மோதலைக் கட்டுப்படுத்திய காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும், கலவரத்துக்குக் காரணமானவர்களின் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக கோயம்பேடு பகுதி மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் பாஜக, விசிக தரப்பினரிடையே வாக்குவாதங்கள், மோதல் சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.