Published:Updated:

`மம்தாவை இயக்கும் மோடி' - மோதலைத் தொடங்கிய திரிணாமுல் காங்., காங்கிரஸ் - பலன் பாஜக-வுக்கா?!

மம்தா - ராகுல்
News
மம்தா - ராகுல்

`மம்தாவை இயக்குவது மோடிதான். அவர்தான் பா.ஜ.க-வின் ஆக்சிஜன்' எனக் குற்றம்சாட்டியிருக்கிறது காங்கிரஸ். மம்தா, காங்கிரஸ் மோதலால் பலன் யாருக்கு?

மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியை அறுவடை செய்த மம்தா, தேசிய அரசியலில் கால்பதிக்கும் நோக்கோடு பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்த பலமான கூட்டணியை உருவாக்கும் முடிவிலிருக்கும் மம்தா, அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரோடு கைகோத்திருக்கிறார். இந்த நிலையில், டிசம்பர் 1 மகாராஷ்டிராவுக்குச் சென்ற மம்தா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார். தேசிய அரசியலில் இது மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் Vs காங்கிரஸ்!

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் மம்தா. அப்போது, `ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இனி சரத் பவார் தலைமை வகிப்பாரா?' எனச் செய்தியாளர்கள் கேட்க, ``ஐக்கிய முற்போக்கு கூட்டணியா? அப்படி எதுவும் இப்போது இல்லை. வரலாற்றில்தான் அது இருக்கிறது'' என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியைத் தாக்கிப் பேசினார். மேலும், ``ஐ.மு.கூ இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது? தொடர்ந்து அரசியலில் செயல்படுவது அவசியம். அதை விடுத்து வெளிநாட்டிலிருந்தால் என்ன செய்ய முடியும்?'' என்று ராகுல் காந்தியையும் தாக்கிப் பேசினார். மம்தாவின் இந்தப் பேச்சு, நாடு முழுவதுமிருக்கும் காங்கிரஸ்காரர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

மம்தா - சோனியா
மம்தா - சோனியா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மம்தாவுக்கு பதிலடி கொடுத்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ``ஐ.மு.கூ என்றால் என்னவென்று மம்தா பானர்ஜிக்கு தெரியாதா? இது பைத்தியக்காரத்தனம். 2012-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ஆறு திரிணாமுல் அமைச்சர்கள் இருந்தார்கள். அப்போதிருந்த ஐ.மு.கூ அரசைக் கவிழ்க்க தனது ஆதரவை வாபஸ் பெற்றவர்தானே மம்தா! இருந்தும், அவரது கனவு பலிக்கவில்லை. மற்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவளித்தன. இப்போது வந்து ஐ.மு.கூ-வைத் தெரியாது என்கிறார்'' என்றார் காட்டமாக.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மேலும், ``மம்தாவுக்குப் பின்னாலிருந்து மோடிதான் இயக்குகிறார். பா.ஜ.க-வுக்கு ஆக்சிஜன்போலச் செயல்படுகிறார் மம்தா. அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் பா.ஜ.க-வை மகிழ்ச்சிப்படுத்துவதாகவே இருக்கின்றன'' என்று குற்றம்சாட்டியிருக்கிறார் ஆதிர் ரஞ்சன்.
இந்தியா முழுவதும் `மம்தா... மம்தா' என்று கூக்குரலிடுவதுபோல அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தியா என்பது வங்காளம் மட்டுமல்ல!
ஆதிர் ரஞ்சன் செளத்ரி, காங்கிரஸ் தலைவர்

ராகுல் காந்தியை மறைமுகமாகத் தாக்கிப் பேசியதைக் கண்டித்து, ``ராகுலை விமர்சித்துவிட்டு எந்தவொரு தனிக்கட்சியும் பா.ஜ.க-வை எதிர்த்துப் போராட முடியாது. ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பாக இருக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்'' என்றும் பேசியிருக்கிறார் ஆதிர் ரஞ்சன் செளத்ரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மம்தாவின் திட்டம் என்ன?

கடந்த சில மாதங்களாக, மம்தாவின் செயல்பாடுகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்குவதைப்போலவே இருக்கின்றன. முதலில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவர, சோனியாவையும் ராகுலையும் நேரில் சந்தித்த மம்தா, பின்னர் காங்கிரஸ் கட்சியையே வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டார். கடந்த மாதம் கோவா சென்ற மம்தா, ``பா.ஜ.க பலம்பெற்றதற்கு காரணமே காங்கிரஸ்தான்'' என்று குற்றம்சாட்டியிருந்தார்.

பிரசாந்த் கிஷோர் - மம்தா
பிரசாந்த் கிஷோர் - மம்தா

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரபூர்வ நாளிதழான `ஜெகோ பங்களா'வில், ``ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்கத் தவறிவிட்டார். மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுப்பதில் மம்தா வெற்றிபெற்றுவிட்டார்'' என்றெழுதியது பரபரப்பைக் கிளப்பியது. இப்படியான கருத்துகள் ஒருபுறம் இருக்க, பல மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியையும் மறுபுறம் செய்துவருகிறது திரிணாமுல். கோவா, பீகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களைத் தனது கட்சியின் பக்கம் ஈர்த்திருக்கிறார் மம்தா. சமீபத்தில், மேகாலயாவிலுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவியிருக்கின்றனர்.

மேகலாயா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முகுல் சங்மா, ``நாடு தழுவிய அளவில் திறமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸால் செயல்பட முடியவில்லை. அரசியல் வியூக வல்லநர் பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதலுடன் திரிணமூல் காங்கிரஸில் இணைந்திருக்கிறோம்'' என்றிருக்கிறார். மம்தாவின் முக்கிய நகர்வுகளுக்குப் பின்னால் பிரசாந்த் கிஷோர் இருப்பதைக் காட்டுகிறது முகுல் சங்மாவின் இந்தப் பேச்சு.

பிரசாந்த் கிஷோரும் சில காலம் முன்பு, ```பிரதமர் மோடி, பா.ஜ.க-வின் பலம் குறித்து ராகுல் உணரவேயில்லை. இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பா.ஜ.க சக்திவாய்ந்ததாக இருக்கும்'' என்று தன் பங்குக்கு காங்கிரஸைத் தாக்கினார். மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், `காங்கிரஸை பலவீனமாக்கி, நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை நிலை நிறுத்த வேண்டும்' என்பதே மம்தாவின் திட்டமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பலன் யாருக்கு?

திரிணாமுல் காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் மோதிக் கொள்வதால் பலன் யாருக்கு என்பது குறித்துப் பேசும் அரசியல் நோக்கர்கள், ``2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால்கூட, தன்னையே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென மம்தா திட்டமிடுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாகக்கூட காங்கிரஸுக்கும், மம்தாவுக்குமிடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம். இந்த மோதல் காரணமாக பல மாநிலங்களிலும் வலுவிழந்துவரும் காங்கிரஸ், மேலும் வலுவிழக்கும் நிலைமையே ஏற்படும். மம்தா, காங்கிரஸ் என இரு தரப்பும் பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கோடுதான் செயல்பட்டுவருகின்றன. அப்படியிருக்கையில், இந்தியா முழுவதும் கட்சி கட்டமைப்பு கொண்டிருக்கும் காங்கிரஸை, மம்தா பகைத்துக்கொள்வது சரியல்ல. காங்கிரஸ், திரிணாமுல் கட்சிகளுக்கிடையே நடக்கும் இந்த மோதல்கள் பா.ஜ.க-வுக்குத்தான் பலன் தரும்'' என்கிறார்கள்.