Published:Updated:

நேர்மையின் இலக்கணம்; சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர்- ஓமந்தூர் ராமசாமி நினைவுதினப் பகிர்வு!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 50-வது நினைவுநாள் கட்டுரை.

நேர்மையின் இலக்கணம்; சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர்- ஓமந்தூர் ராமசாமி நினைவுதினப் பகிர்வு!

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 50-வது நினைவுநாள் கட்டுரை.

Published:Updated:
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

சுதந்திரத்துக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. அன்றைய சென்னை மாகாணத்து முதலமைச்சரான பிரகாசம், பல தவறுகளுக்கு அடித்தளம் இடுபவராக இருந்தார். அவரை மாற்றுவதற்கு ராஜாஜியும் காமராஜரும் திட்டமிட்டார்கள். `அடுத்ததாக யாரைக் கொண்டுவரலாம்’ என்று யோசித்தார்கள். அப்போது அவர்கள் மனதில் உதித்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் சத்தியமூர்த்தியை வென்றவர் என்பதால், அவருக்கே அனைத்துத் தகுதிகளும் இருப்பதாக ராஜாஜியும் காமராஜரும் நினைத்தார்கள். ஓமந்தூராரிடம் இவர்கள் இது குறித்துப் பேசியதற்கு முதலமைச்சர் பதவியை மறுத்தார் ஓமந்தூரார். அதற்கு அவர் சொன்ன காரணம், ``இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது” என்பதுதான்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று மாதங்கள் கடந்தும் ஓமந்தூரார் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் கட்டாயப்படுத்தினார்கள். இறுதியாக, ``ரமண மகரிஷியிடம் கேட்கிறேன். அவர் ஒப்புதல் அளித்தால் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றார் ஓமந்தூரார். தீர்ப்பு ரமணரிடம் இருந்தது. அனைவரும் பல நாள்கள் அமைதியாக இருந்தார். திடீரென அனுமதி தந்தார் ரமணர். இப்படித்தான் முதல்வரானார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் இந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்?

தமிழகத்தில், அப்போதைய தென்னாற்காடு மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகிலிருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் 1-2-1895-ம் ஆண்டு பிறந்தவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார். இவர் தமிழக மக்களால் `ஓமந்தூரார்' என்று அழைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு காந்தியவாதியாக வாழ்ந்தார். சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராகப் பதவியேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். காமராஜர் ஆதரவுடன் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக ஓமந்தூரார் 1947-ம் ஆண்டு, மார்ச் 23 முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை பதவி வகித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.

`பாகிஸ்தானிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன’ என்று படேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன் பின்னர், அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.

`சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்’ என்ற சிந்தனைகொண்டவர். விவசாயிகள் மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்துக்காகச் சிந்தித்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓமந்தூராருக்கு முன்னர் சென்னை மாகாணத்தை ஆட்சிசெய்த ஒன்பது முதலமைச்சர்களும் அரச வம்சத்தையும், ஜமீன்தார் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் உயர்கல்வி பயின்றவர்கள். ஓமந்தூரார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 8-ம் வகுப்பு வரையே படித்தவர்.

ஓமந்தூரார் முதல்வர் பதவியில் இருந்தபோது கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்தவிதச் சிறு சலுகையையோ, வேலைவாய்ப்பையோ அவர் வழங்கியதில்லை. இரண்டாண்டுகள் மட்டுமே முதல்வர் பதவியிலிருந்த ஓமந்தூரார், மிகவும் நேர்மையான ஆட்சியை வழங்கினார்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

பட்டியலின மக்களுக்கு அந்தக் காலத்தில் தனித்துறை இல்லை. தொழிலாளர் நலத்துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அந்தத் துறையை `ஆதிதிராவிடர் நலத்துறை’ எனப் பெயர் மாற்றம் செய்து, தனித்துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஓர் ஆணையரை நியமித்தார். எனவே, அவர் இன்றைக்கும் `ஆதிதிராவிட நலத்துறையின் தந்தை’ என்றழைக்கப்படுகிறார்.

`அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதிதிராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான். ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கானத் தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்கவைத்த பெருமைக்குரியவர் அவரே.

ஓமந்தூரார் தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்ததை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும். அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க, 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானை தரிசிக்கவைத்ததோடு அவர் நிற்கவில்லை. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனை.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவியேற்றதும் பிறப்பித்த ஆணைகள் அனைத்தும் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடைபோட்டதுதான். ஆம், அதுவரை எந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள் இவை.

மிக மிக அவசியமான தருணங்களில் மட்டுமே ஓமந்தூரார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். தனிப்பட்ட பேட்டிகள், புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்கவே முடியாது. அதனாலேயே அவரின் புகைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இன்று நமக்குக் கிடைக்கின்றன.

முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், `என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும்?’ என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை, தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக்கொண்டார் அவர். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்.

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிரிட்டிஷ் இந்தியாவில், அந்தக் காலகட்டத்தில் மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்கள் அனைவரும் ஆங்கிலேய ஐ.சி.எஸ் அதிகாரிகளாகவே இருந்தனர். தான் பதவி ஏற்றவுடனேயே ஓமந்தூரார் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டார். அது என்ன தெரியுமா? ஐ.சி.எஸ் அந்தஸ்து இல்லாத ஏ.அழகிரிசாமி என்பவரைத் தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்துக்கொண்டதுதான்.

`சென்னை மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்களில் முதல் தமிழர்’ என்ற பெருமைக்குரியவர் ஏ.அழகிரிசாமி. பின்னாள்களில் அவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.

தமிழ்நாடு
தமிழ்நாடு

ஓமந்தூராரின் ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மிக முக்கியமான சட்டங்கள் - ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் போன்றவை.

ஓமந்தூராருக்கு முந்தைய பிரகாசம் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. பக்கத்து மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் இருந்ததால், அந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லாமல் இருந்தது. ஓமந்தூரார் முதலமைச்சரானதும் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 25 மாவட்டங்களைக்கொண்ட சென்னை மாகாணம் முழுவதிலும் ஒரே நாளில் கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.

முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓமந்தூரார். `மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ எனக்குத் தரக் கூடாது’ என்றும், `வெளிநாட்டிலிருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது’ என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி அவர்.

அவரின் நேர்மையான ஆட்சியால் பாதிப்படைந்த ஜமீன்தார்களும், மடாதிபதிகளும், சில அரசியல்வாதிகளும் இணைந்து அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கத் திட்டமிட்டனர். கட்சியின் நிர்ப்பந்தத்தால் பதவி விலக நேரிட்டபோது, அவர் சிறிதும் கவலைகொள்ளாமல் பதவியைத் தூக்கியெறிந்தார்.

பதவி விலகிய அன்று பிற்பகலிலேயே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையிலிருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான ஓமந்தூருக்குச் சென்றுவிட்டார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஓமந்தூரார் அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்தார். இதையடுத்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டு, வள்ளலார் வாழ்ந்த வடலூரில் வசிக்கத் தொடங்கினார்.

ஓமந்தூரார்
ஓமந்தூரார்

ஆன்மிகத்தில் ஈடுபட்டாலும் தனது மரபார்ந்த விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, தனது வியர்வை சிந்தும் உழைப்பால் வடலூர் பகுதியிலிருந்த தரிசு நிலங்களையெல்லாம் விளைநிலங்களாக மாற்றினார். இன்று அணையா ஜோதியாக வெளிச்சம் வீசும் வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை ஓமந்தூரார் ஏற்படுத்தினார்.

25-8-1970 அன்று தனது 75-வது வயதில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் காலமானார்.

நேர்மையான அரசியல் தலைவர்களைக் காண்பதை அரிதாகக் கருதும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்தாலும், வரலாற்றில் நேர்மை மாறாமல் வாழ்ந்த ஓமந்தூராரை எண்ணி மகிழ்வோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism