Published:Updated:

பலமிழந்த காங்கிரஸ்; நெருக்கடியில் பாஜக; கால்பதிக்கும் மம்தா! - கோவா தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

2017 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் 17 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருந்த காங்கிரஸில், தற்போது வெறும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர்... கோவா தேர்தல் களம் எப்படியிருக்கிறது?

பலமிழந்த காங்கிரஸ்; நெருக்கடியில் பாஜக; கால்பதிக்கும் மம்தா! - கோவா தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

2017 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் 17 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருந்த காங்கிரஸில், தற்போது வெறும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர்... கோவா தேர்தல் களம் எப்படியிருக்கிறது?

Published:Updated:
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

இந்தியாவில், அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலை மையமிட்டு பா.ஜ.க-வும், காங்கிரஸும் செயல்பட்டுவருவதால், அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் கோவா ஆளுநரும், தற்போதைய மேகாலயா ஆளுநருமான சத்ய பால் மாலிக், கோவா பா.ஜ.க அரசுமீது ஊழல் குற்றம்சுமத்திய பிறகு, கோவா தேர்தல் களமும் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கோவா தேர்தல் பணிகளில் முழு வீச்சில் களமிறங்கியிருப்பதால், மேலும் பரபரப்படைந்திருக்கிறது கோவா தேர்தல் களம்.

மம்தா - மோடி
மம்தா - மோடி

கோவாவில் ஆளும் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக மம்தாவைத் தவிர ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய முக்கியத் தலைவர்களும் அங்கு பரபரப்புரையை தொடங்கியிருக்கின்றனர். கோவா தேர்தல் கள நிலவரம் பற்றிப் பார்ப்பதற்கு முன்பாக கோவா மாநிலத்திலுள்ள முக்கியப் பிரச்னைகளைப் பார்த்துவிடலாம்.

கோவாவின் பிரதான பிரச்னைகள்!

2015-ல், கோவாவில் செயல்பட்டுவரும் 88 இரும்பு, மங்கனீசு சுரங்கங்களின் உரிமங்களை 20 ஆண்டுகளுக்குப் புதுப்பித்தது மாநில பா.ஜ.க அரசு. சுரங்கங்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் கோவா அரசுக் குத்தகைக்கு ஒதுக்கியிருப்பதாகச் சொல்லி, அங்கிருக்கும் 88 சுரங்கங்களுக்கும் 2018-ம் ஆண்டு தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மாநிலத்தின் மொத்த ஜி.டி.பி-யில் 30 சதவிகிதம் இந்தச் சுரங்கத் தொழிலால் கிடைப்பதுதான். அதற்குத் தடை விதிக்கப்பட்ட காரணத்தால் கோவாவின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்தது.

கோவா
கோவா

தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாகச் சுற்றுலாத் தொழிலும் முடங்கியதால், பெரும் பாதிப்புக்குள்ளானது கோவா. சுரங்கம், சுற்றுலாத் தொழிலில் பெருமளவு ஈடுபட்டுவந்த கோவா மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியானது. இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. தற்போது சுற்றுலாப் பயணிகள் மெல்ல மெல்ல வர ஆரம்பித்திருப்பதால், ஓரளவு உயிர்பெற்றிருக்கிறது சுற்றுலாத்துறை. ஆனால், சுரங்கங்கள் இன்னும் திறக்கப்படாதது, பா.ஜ.க அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

நெருக்கடியில் பா.ஜ.க!

2017 சட்டமன்றத் தேர்தலில், கோவாவிலுள்ள 40 தொகுதிகளில், 17 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றிகண்டிருந்தது காங்கிரஸ். பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், 13 தொகுதிகளை வென்ற பா.ஜ.க, சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள், மாநில கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை வளைத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக கோவாவில் ஆட்சியமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் உள்ளிட்ட ஒன்பது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தங்களை பா.ஜ.க-வில் இணைத்துக் கொண்டதை அடுத்து சட்டமன்றத்தில் பா.ஜ.க-வின் பலம் உயர்ந்தது

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
Twitter

சுரங்கம் மூடல், கொரோனாவை சரியாகக் கையாளவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டு, வேலைவாய்ப்பின்மை என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது ஆளும் பா.ஜ.க அரசு. இது போதாதென்று, கோவாவின் முன்னாள் ஆளுநரான சத்ய பால் மாலிக், பா.ஜ.க அரசுமீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார். ``கொரோனா பேரிடர் சமயத்தில், கோவா பா.ஜ.க அரசு செய்த எல்லா நடவடிக்கைகளிலும் ஊழல் அதிகரித்திருந்தது. பல திட்டங்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் செயல்படுத்தப்பட்டன. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நான் கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து மேகாலயாவுக்கு இடம் மாற்றப்பட்டேன்'' என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார் சத்ய பால் மாலிக். இதையடுத்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் `உடனடியாக இதற்குப் பொறுப்பேற்று முதல்வர் பிரமோத் சாவந்த் பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்ததிவருகின்றனர்.

ஆட்சிக்கு எதிராக இருக்கும் மக்களின் மனநிலையை மாற்ற, பெரும்பாலான புதிய முகங்களை வேட்பாளர்களாக அறிவிக்கும் திட்டத்திலிருக்கிறது பா.ஜ.க மேலிடம். அடுத்து வரும் நாள்களில் கோவாவில் பல்வேறு நலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தும் முடிவிலிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

பலமிழந்த காங்கிரஸ்!

கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் 17 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருந்தது காங்கிரஸ். ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கு வெறும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். `மற்ற கட்சிகளுக்குச் சென்றுவிட்ட எம்.எல்.ஏ-க்களை மீண்டும் கட்சியில் சேர்க்கமாட்டோம். புதிய முகங்களோடு இந்தத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம்' என்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி, கோவா தேர்தலுக்காகக் கூட்டணிக் கதவுகளையும் திறந்துவைத்திருக்கிறது.

2022 தேர்தலையொட்டி மாநிலத் தேர்தல் பார்வையாளராகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டிருக்கிறார். ``போன தேர்தலில் குறுக்குவழியில் எம்.எல்.ஏ-க்களை வளைத்து ஆளுநரின் உதவியோடு பா.ஜ.க ஆட்சியமைத்துவிட்டது. ஆனால், இந்த முறை பெரும்பான்மையோடு வெற்றிபெற வேண்டும்'' என்று கட்சி மேலிடம் மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ராகுல் காந்தி, கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பிரசாரத்தைக் கோவாவில் தொடங்கியிருக்கிறார். கோவாவின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகியது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எதிர்க்கட்சியாகத் துடிக்கும் ஆம் ஆத்மி!

கடந்த 2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடம்கூட வெல்லாத ஆம் ஆத்மி, இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியாக மாறிவிட வேண்டுமென்று உழைத்துக் கொண்டிருக்கிறது. கோவாவிலுள்ள வேலை வாய்ப்பின்மையை மையப்படுத்தித் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ``தனியார், அரசு சார்ந்த வேலைவாய்ப்புகளில், 80 சதவிகித வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கே அளிக்கப்படும். சுரங்கம், சுற்றுலா தொழிலில் ஈடுபட்டு, இப்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.5,000 வழங்கப்படும். வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும்'' என்று கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறது.

கால்பதிக்க நினைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திரிணாமுல் காங்கிரஸைத் தேசியக் கட்சியாக்கிவிட வேண்டுமென்ற முனைப்பில் மற்ற மாநிலங்களிலும் கால்பதிக்கும் முடிவிலிருக்கிறார் மம்தா. கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மம்தா, ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரங்களை முன்வைத்து வாக்கு சேகரித்தார். ``பா.ஜ.க பலமாக மாறியதற்குக் காங்கிரஸ்தான் காரணம்'' என்று காங்கிரஸையும் வெளுத்து வாங்கினார். கோவா முழுவதும் மம்தா பானர்ஜியின் பேனர்களும், போஸ்டர்களும் நிறைந்திருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன.

மேலும், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், சுகாதா ராய், பாபுல் சுப்ரியோ உள்ளிட்டோரும் கோவாவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளோடு கோவாவில் களமிறங்கியிருக்கும் மம்தா, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட பிரபலங்களைக் கட்சியில் சேர்த்துவருகிறார். காங்கிரஸிலிருந்து வெளியேறிய தலைவர்களையும் கட்சியில் இணைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

Mamata Banerjee
Mamata Banerjee
AP Photo/Bikas Das

கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ (Luizinho Faleiro), காங்கிரஸிலிருந்து விலகி மம்தாவோடு கைகோர்த்திருக்கிறார். மாநிலக் கட்சிகளையும் தங்களோடு இணைத்துக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. ``பா.ஜ.க ஆளும் கோவாவில், காங்கிரஸைவிட அதிக இடங்களில் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுவருகிறார் மம்தா. அப்படி காங்கிரஸை முந்திவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்'' என மம்தா நினைப்பதாகச் சொல்லப்படுகிறது.

முந்துவது யார்?

``கோவாவை ஆளும் பா.ஜ.க அரசு, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவந்தாலும், அங்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாதது அந்தக் கட்சிக்கு ப்ளஸ். மூத்த தலைவர்களை இழந்த காங்கிரஸ், மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தாலும் வெற்றிபெறுவது கடினம். காரணம், ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் என்பதுதான். அதேபோல சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் வாக்குகளைப் பிரிக்கும். தலா மூன்று எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருக்கும் மாநிலக் கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியும், கோவா ஃபார்வட் கட்சியும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, உள்ளூர் செல்வாக்கு பெற்ற தலைவர்களைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.கதான் தேர்தல் ரேஸில் முந்தி நிற்கிறது. சமீபத்திய ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பும் பா.ஜ.க-வுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவே சொல்லியிருக்கிறது. இருந்தும், தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலிருப்பதால் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.