மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஒரு புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில், ``இரு சக்கர வாகனத்தில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ வேகத்தில்தான் செல்ல வேண்டும். ஒன்பது மாதம் முதல் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பைக்கில் அழைத்துச் செல்லும்போது, குழந்தைகளுக்கும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல, ``நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தனியாக அழைத்துச் செல்லும்போது, அழைத்துச் செல்பவர்களையும், அந்தக் குழந்தையையும் இணைக்கும் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருக்க வேண்டும். பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், நீடித்து உழைக்கக்கூடியவையாகவும், எடை குறைவானவையாகவும். பாதுகாப்பானவையாகவும் இருக்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கும்படி, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. பொதுமக்களிடமிருந்து வரும் கருத்துகள், ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவது சாத்தியமானதா?

இந்தத் திட்டம் குறித்து குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம். ``ஒன்பது மாதக் குழந்தைகூட தலைக்கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதலில் இந்த வரைவு எந்தக் கள ஆய்வு, புள்ளிவிவரம் அல்லது பரிந்துரையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை. பைக்கில் செல்லும்போது அந்தக் குழந்தையை வைத்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிந்திருந்து, அந்தக் குழந்தையும் தலைக்கவசம் அணிந்து வந்தால் அந்தக் குழந்தை அசௌகரியமாகத்தான் உணரும்" என்றார்.
மேலும், ``குழந்தைகள் சாலைகளில் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிப்படுத்தவேண்டியது மிகவும் அவசியம். அதேவேளையில், சாலைகள் சரியானதாக இருக்கின்றனவா, அந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, என்பதையெல்லாம் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு குழந்தைகளுக்குத் தலைக்கவசம் அணிவது குறித்துப் பேசுவது சரியாக இருக்கும். ஒன்பது மாதக் குழந்தையை இரு சக்கர வாகனத்தில் தனியாக அழைத்துச் செல்வது முதலில் பாதுகாப்பானதா என்று பார்க்க வேண்டும். மருத்துவரீதியாக, போக்குவரத்துரீதியாக குழந்தைக்கும் அழைத்துச் செல்பவர்களுக்கும் ஏற்படும் சிக்கல்கள் குறித்த விரிவான காரணங்களையெல்லாம் யோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்று பேசினார்.

மத்திய போக்குவரத்து அமைச்சகம் தற்போது கொண்டுவந்திருக்கும் இந்த வரைவு அறிக்கையில், ஒன்பது மாதக் குழந்தை முதல் நான்கு வயதுக் குழந்தை வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது 40 கி.மீ வேகத்தில்தான் வாகனத்தை இயக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே வேளையில், ஒன்பது மாதக் குழந்தைக்குத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சொல்லியிருப்பதும் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று என்றே பல்வேறு தரப்பினரும் கருத்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.