Published:Updated:

`ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டும் இடுக்கி அணை திறக்கப்படாதது ஏன்?!' மக்கள் கேள்வி

`2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு, இடுக்கி உள்ளிட்ட முக்கிய அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்படாமல், மின்சார தயாரிப்புக்காகத் தேக்கிவைக்கப்பட்டதே காரணம்’ என ஆய்வில் கேரள நிபுணர்கள்குழு தெரிவித்தது.

அக்டோபர் முதல் வாரம் முதல் கேரளாவில் தொடர்மழை பெய்துவருகிறது. அதன் காரணமாக, இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன், நிலச்சரிவும் ஏற்பட்டது. கேரளாவில் உள்ள 44 அணைகள் முழுக்கொள்ளளவை எட்டவிருக்கின்றன. ஆசியாவின் பெரிய அணைகளில் ஒன்றான 2,403 அடிகொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 2,398 அடியை எட்டியது. அதனால் இடுக்கி அணையிலிருந்து அக்டோபர் 19-ம் தேதி 5-வது முறையாகத் தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் சில நாள்களில் நிறுத்தப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடி வரை நிலை நிறுத்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அணை வலுவிழந்திருப்பதாகவும், ரூல் கர்வ் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கேரளா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ரூல் கர்வ் முறைப்படி 139.50 அடி நீரை நவம்பர் 11-ம் தேதி வரை அணையில் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என நீதிமன்றமும் உத்தரவிட்டது.

முல்லைப்பெரியாறு
முல்லைப்பெரியாறு

நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்போவதாக அறிவித்தது. மேலும், முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வல்லக்கடவு, வண்டிப்பெரியார், சப்பாத்து, இடுக்கி ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கேரளா, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணை தமிழகப் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், 126 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது, கேரள அதிகாரிகளுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், தேக்கடிப் பகுதியில் முகாமிட்டு, அணையில் தண்ணீர் திறப்புக்குத் தீவிரம் காட்டிவந்தார். மேலும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி கேரளச் செய்தி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாகப் பேட்டியளித்துவந்தார்.

இந்த நிலையில், அக்டோபர் 29-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தகவல் தேனி மாவட்ட கலெக்டருக்குக்கூடத் தெரிவிக்கப்படவில்லை. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளோ 140 அடி வரும்போது விடுக்கப்படவேண்டிய எச்சரிக்கை அறிவிப்பை, 134 அடி வந்ததுமே கொடுத்திருக்கின்றனர். அதேவேளையில், அணை தொடர்பான தகவல்களையும் முறையாக அறிவிப்பதில்லை. எனவே, இதைப் பயன்படுத்திக்கொண்டுதான் கேரள அரசியல்வாதிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டுவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

இதற்கிடையே தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது. அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப்பொழிவு ஆகியவற்றை தமிழகம் கண்காணித்துவருகிறது. அணையிலிருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீர், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் பெற்று நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையைப் பின்பற்றியே அனுமதிக்கப்பட்டுள்ளது'' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இடுக்கி அணையின் முழுக்கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 4.68 அடி நீர் நிரம்ப தேவைப்படுகிறது. ஆனால், இடுக்கி அணையிலிருந்து நீர் திறக்கப்படாமல் தொடர்ச்சியாக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

2018-ல் கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு முல்லைப்பெரியாறு அணைதான் காரணம் எனக் கேரள நிபுணர்களால் கூறப்பட்டது. அதையடுத்து, வெள்ளம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, இடுக்கி உள்ளிட்ட முக்கிய அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்படாமல், மின்சார தயாரிப்புக்காகத் தேக்கிவைத்ததுதான் வெள்ளத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது. அதேபோல, இடுக்கி அணையில் தண்ணீரை வெளியேற்றாமல், அதிக மழைப்பொழிவு உள்ள நேரத்தில் திடீரென தண்ணீரைத் திறந்தால் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் அப்போதைய ஆய்வின் முடிவில் கூறப்பட்டது. அதை மனதில்வைத்தே தற்போது கேரளா செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கவிடக் கூடாது என்பதே கேரள அரசின் நோக்கமாக இருக்கும் நிலையில், பல்வேறு வகையில் அதற்காக முட்டுக்கட்டை போட்டுவருகிறது. தற்போது, முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கவேண்டிய அவசியமே இல்லை. அதேவேளையில், இடுக்கி அணையில் தண்ணீர் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அதனால், இடுக்கி மாவட்ட மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை கேரள எல்லையோர மக்கள் முன்வைக்கின்றனர்.

தண்ணீர்
தண்ணீர்
முல்லைப்பெரியாறு குறித்து பிருத்விராஜ் சமூக வலைதளங்களில் சர்ச்சைப் பதிவு; தாக்கம் என்ன?

முல்லைப்பெரியாறு அணை முதல் இடுக்கி அணை வரை கரையோரத்தில் சலவைத் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில், கேரள அரசியல்வாதிகள் ஊடகங்களில் அணைப் பாதுகாப்பு குறித்து வதந்திகள் பரப்பிக்கொண்டிருப்பது கரையோரத்தில் வசிக்கும் மக்களைப் பீதியடையச் செய்திருக்கிறது. `முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் குறிக்கோள்தான் இத்தனைக்கும் காரணமா?’ எனக் கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு