Published:Updated:

பிரதமர் வேட்பாளர்: `முன்னிறுத்தப்படுகிறாரா பாஜக ‘கூட்டாளி' நிதிஷ்?' - இது பீகார் அதகள அரசியல்!

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

“நாங்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், எங்கள் தலைவர் நிதிஷ் குமாருக்கும் பிரதமர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கின்றன” என ஐக்கிய ஜனதாள உறுப்பினர்கள் பேசி வருவதுதான் பீகார் அரசியலின் ஹாட் டாப்பிக். என்ன நடக்கிறது அங்கே?

2024-இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகின்றன தேசியக் கட்சிகள். 18 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், 3-வது கொரோனா அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதைக் கைவிடுதல், நாட்டின் பொருளாதார நிலைமை, அதிகரித்துவரும் வேலையின்மை, கொரோனா பெருந்தொற்றால் வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்வது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பாராளுமன்றத்தை முடக்குவது, சிற்றுண்டி விருந்து கொடுப்பது என மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் வழக்கத்தைவிட ஆக்டிவாக இருந்தது. அதேசமயம் பா.ஜ.க-வும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றி கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட நிதிநிலையைச் சரிசெய்யும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவையெல்லாம் மக்கள் நலன் சார்ந்து என சொல்லிக்கொண்டாலும் அவர்களின் அடி மனதில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல்தான் இவற்றையெல்லாம் செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பது தெரியாமல் இருக்காது.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

‘ஒரே நாடு, ஒரே தலைவர். எங்களை எதிர்க்க யாருமே இல்லை’ என்ற ரீதியில் இருந்த பா.ஜ.க-வுக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு ஷாக் கொடுக்க “நிதிஷ் குமாருக்கும் பிரதமர் ஆவதற்கு எல்லாத் தகுதியும் இருக்கு” என பா.ஜ.க கூட்டணியில் இருந்தே மற்றொரு ஷாக் கொடுக்கப்பட்டிருக்கிறது...

பீகார்: `பா.ஜ.க - நிதிஷ் குமார் கூட்டணி, சச்சின் - சேவாக் ஜோடியைப் போன்றது!' - ராஜ்நாத் சிங்

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி “நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அல்ல. இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகவும் நம்பகமான உறுப்பினராக ஐக்கிய ஜனதா தளம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அக்கூட்டணியின் தலைவராக இருக்கிறார். அதேநேரத்தில் நிதிஷ் குமார் பிரதமராவதற்கான அனைத்துத் தகுதிகளையும் உடைய ஒரு நபர் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை” எனக் கூறியிருக்கிறார். மேலும் “உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட அனைத்து முயற்சிகளையும் செய்வோம். அது நிறைவேறவில்லை என்றால் நாங்கள் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம் என அவர் பேசியிருப்பது பீகாரில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

கே.சி.தியாகி -  நிதிஷ் குமார்
கே.சி.தியாகி - நிதிஷ் குமார்
ANI

பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்தாலும் பெகாசஸ் விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். பா.ஜ.க-வுக்கு எதிராக அரசியல் செய்துவரும் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவைச் சந்தித்தார் நிதிஷ் குமார். ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறினாலும் பா.ஜ.க., ஐக்கிய ஜனதாளக் கூட்டணிக்குள் லேசான புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் என்ற சர்ச்சையை ஆரம்பத்தில் கிளப்பியவர் ஐக்கிய ஜனதா தள எம்.பி.-க்கள் குழுத் தலைவர் உபேந்திர குஷ்வாகாதான். “நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு ஏற்றவர். அதற்கான தகுதி, திறமைகள் அனைத்தும் அவருக்கு இருக்கின்றன” என குஷ்வாகா கூற “பிரதமர் ஆவதற்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். அதைத் திரட்ட தனியாக அந்தக் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்” என பா.ஜ.க தலைவர்கள் எதிர்க்குரல் எழுப்பினார்கள். “பெரும்பான்மையை ஏன் திரட்ட முடியாது? பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்பது இப்போது எங்களது நோக்கம் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரதமர் மோடியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யூகம் செய்தால் நாம் இதெல்லாம் நடக்காது, இதெல்லாம் நடக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது இல்லையா? நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்கிவிடலாம் என நாங்கள் யோசித்துவிட்டால் அதற்கான ஆதரவைத் திரட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதெல்லாம் எங்களுக்கு ஒரு விஷயமே இல்லை” எனப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஓம் பிரகாஷ் சவுதாலா
ஓம் பிரகாஷ் சவுதாலா
ANI

பிரதமர் வேட்பாளாராக நிதிஷ் குமாரின் பெயரை அடிபடுவது குறித்துக் கேட்டபோது “தனக்கு அதில் விருப்பமில்லை” என்றும் பதிலளித்தார். ஆனால், “விருப்பமில்லை என்றுதானே சொல்லியிருக்கிறார். வேண்டாம் எனச் சொல்லவில்லையே. அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம்” என அதகளம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் நிதிஷ் குமாரின் உறவுகள். “என்னடா நடக்குது இங்கே” என்பதுபோல பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தள் இடையேயான சண்டை அனைவரும் வேடிக்கை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்

அடுத்த கட்டுரைக்கு