Published:Updated:

`சில நாள்களில் தேர்தல்; இந்தியக் கட்சிகளின் ஸ்டைலில் பிரதமரை மாற்றிய ஜப்பான்' - திட்டம் எடுபடுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஃபுமியோ கிஷிடா - ஜப்பான் பிரதமர்
ஃபுமியோ கிஷிடா - ஜப்பான் பிரதமர் ( Twitter/@JPN_PMO )

ஜப்பானில், ஒரு சில வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த நாட்டுப் பிரதமர் மாற்றப்பட்டிருக்கிறார். ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி, ஆட்சியைத் தக்கவைக்கப் போட்டிருக்கும் அரசியல் கணக்குகள் எடுபடுமா?!

இந்திய மாநிலங்களில், மக்களின் அதிருப்தியைச் சந்தித்திருக்கும் ஆளுங்கட்சிகள், தேர்தலுக்கு முன்பாக முதல்வரை மாற்றுவது அவ்வப்போது நடைபெறும். சமீபத்தில், பா.ஜ.க ஆட்சி செய்யும் சில மாநிலங்களில், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் ஆளும் பஞ்சாபிலும், தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மாற்றப்பட்டிருக்கிறார். இதுபோலவே, மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க, ஜப்பானிலும் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மாற்றப்பட்டிருக்கும் நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

யோஷிஹிடே சுகா
யோஷிஹிடே சுகா
twitter/ @XHNews
`அரச பட்டமும் வேண்டாம்; நிதியுதவியும் வேண்டாம்!' - காதலுக்காக துறந்த ஜப்பான் இளவரசி மகோ

யோஷிஹிடே சுகாமீது அதிருப்தி!

ஜப்பானை நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உடல்நலக் குறைவு காரணமாகப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஷின்சோ அபேவின் நம்பிக்கைக்குரியவரான யோஷிஹிடே சுகாவைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது ஜப்பான் நாடாளுமன்றம். முதலில், மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றுவந்த சுகாமீது நாளடைவில் விமர்சனங்கள் எழத் தொடங்கின. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்காதது, பொருளாதாரச் சரிவை சரிக்கட்ட முடியாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக மக்கள் மத்தியில் சுகாமீது அதிருப்தி ஏற்பட்டது. அவரது செல்வாக்கும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், கொரோனா தொற்று பரவிக்கொண்டிருந்த நேரத்தில், ஜப்பான் மக்களின் எதிர்ப்பையும் மீறி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதும் சுகாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

புதிய பிரதமர்!

ஜப்பானில், ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவர்தான், அரசின் தலைவராகவும் இருப்பார். ஜப்பானை ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த யோஷிஹிடே சுகா, கடந்த மாதத்தில் நடந்த கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். இதையடுத்து, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஃபுமியோ கிஷிடா லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரானார். ஜப்பான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படி கடந்த அக்டோபர் 4-ம் தேதியன்று ஜப்பான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிஷிடா.

ஃபுமியோ கிஷிடா
ஃபுமியோ கிஷிடா
Twiiter/@fumiokishida

இதையடுத்து, கிஷிடா டோக்கியோவிலுள்ள இம்பீரியல் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவரோடு சேர்ந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். புதிய அமைச்சரவையில் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரும் மாற்றப்பட்டிருக்கின்றனர். யோஷிஹிடே சுகாவின் அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தோஷிமிட்சு மோட்டோகியும், பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நொபுவோ கிஷியும், கிஷிடாவின் அமைச்சரவையிலும் தொடர்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் திட்டம் எடுபடுமா?

ஜப்பானில், ஒரு சில வாரங்களில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தநிலையில், `புதிய பிரதமர் மாற்றப்பட்டிருப்பது லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு பலம் சேர்க்குமா?' என்கிற விவாதங்கள் ஜப்பான் அரசியலில் எழத் தொடங்கியிருக்கின்றன.

``யோஷிஹிடே சுகாமீது விமர்சனங்கள் எழ, தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பாக பிரதமரை மாற்றியிருக்கிறது லிபரல் ஜனநாயகக் கட்சி. புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் மாற்றப்படவில்லை. எனவே, சுகாவின் சர்வதேசக் கொள்கைகளிலிருந்து கிஷிடா பெரிதாக மாறுபடுவார் என்று சொல்ல முடியாது. மற்ற கொள்கைகளிலும் பெரிய மாற்றம் இருக்காது என்றே நம்பலாம்.

ஜப்பான் நாடாளுமன்றம்
ஜப்பான் நாடாளுமன்றம்
Twitter/@JPN_PMO
முக்கியத்துவம் பெறும் `கிம் ஜாங் உன்'னின் சகோதரி; வடகொரிய அரசியலில் மாற்றம் நிகழுமா?

வரும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்குள்ளாகச் சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தைக் கிஷிடாவால் சரிசெய்ய முடியாது. ஆனால் கிஷிடா, வரும் நாள்களில் சில வளர்ச்சித் திட்டங்களையும், நிலைப்பாடுகளையும் அறிவிக்கவிருக்கிறார். புதிய பிரதமரின் வளர்ச்சித் திட்டங்களை மக்கள் முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டால், எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்கிற திட்டம் லிபரல் ஜனநாயகக் கட்சியிடம் இருக்கிறது. தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிடலாம் என்று லிபரல் ஜனநாயகக் கட்சி நினைக்கிறது.

ஆனால், புதிய பிரதமர் கிஷிடாமீது ஜப்பான் இளைஞர்களுக்குப் பெரிய ஈர்ப்பு இல்லை என்றே தெரிகிறது. கட்சித் தொண்டர்களிடையேயும் பெரிய ஆதரவு இல்லை என்றே சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், யூகியோ எடானோ தலைமையிலான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி பலமான எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சி மேலும் வலுப்பெற்றிருக்கிறது. எனவே, இதையெல்லாம் சமாளித்து லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சியைத் தக்கவைப்பது சற்றே கடினம். இருந்தும், அடுத்த சில நாள்களில் புதிய பிரதமர் எடுக்கும் முடிவுகள் ஜப்பான் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, ஜப்பானில் ஆட்சி மாற்றம் நிகழுமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு