``தமிழகம் முழுவதும் 600 கலைஞர் உணவகம் திறக்கப்படும்” என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருக்கிறார். இது அம்மா உணவகங்களை மூடுவதற்கான முன்னெடுப்பு என்று அஞ்சுகிறார்கள் அ.தி.மு.க-வினர். திமுக அரசின் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பவும் தவறவில்லை. பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம் பேசினார்கள். ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்ததிலேயே மிக நல்ல திட்டம் அம்மா உணவகம்தான். ஆரம்பத்தில் பா.ம.க உள்ளிட்ட சில கட்சிகள், ‘சாப்பாடு போடுவதுதான் அரசின் வேலையா?’ என்று எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மக்களின் ஆதரவைப் பார்த்த பின்னர் எல்லாக் கட்சிகளும் அடங்கிவிட்டன.

முதலில் சென்னையில் மண்டலத்துக்கு தலா ஒன்று எனத் தொடங்கப்பட்டது. பிறகு, வார்டுக்கு தலா ஒன்று என 200 உணவகங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. கூலி வேலை செய்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள், ஏன் யாசகம் செய்வோர்கூட கிடைக்கும் 5 ரூபாயில் உணவருந்திவிடுகிறார்கள். எனினும், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே உணவகத்தின் தரம் குறைந்துவிட்டது என்ற குற்றசாட்டு எழுந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிதில், முகப்பேரிலிருக்கும் அம்மா உணவகத்திலிருந்த ஜெயலலிதா படத்தை தி.மு.க-வினர் அடித்து நொறுக்கினர். அவர்களைக் கட்சியைவிட்டே நீக்கிய முதல்வர் ஸ்டாலின், அம்மா உணவகம் தடையின்றித் தொடர்ந்து இயங்கும் என்றும் உறுதியளித்தார்.
ஆனால், திடீரென உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, `கலைஞர் உணவகம் திறக்கப்படும்’ என்கிறார். கூடுதலாக உணவகம் திறப்பது நல்லது என்றாலும், அதற்கு, `கலைஞர்’ எனப் பெயரை மாற்றுவது பொருத்தமாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில், ஊரெங்கும் அம்மா உணவகம் என்ற பெயர் மனதில் பதிந்துவிட்டது. சிறு குழந்தைகளிடம் சொன்னால்கூட, பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இட்லி வாங்கச் சென்றுவிடுகிறார்கள்.

கலைஞர் காப்பீடு திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சர் காப்பீடு திட்டம் என மாற்றியதுபோல, பொதுவாக அம்மா பெயரையும் எடுத்துவிட்டு அரசு உணவகம் அல்லது பொதுப் பெயரை வைத்தால்கூடப் பரவாயில்லை. புதிதாக, கலைஞர் உணவகம் திறக்கப்பட்டு, காலப்போக்கில் இருக்கும் அம்மா உணவகங்களையும், `கலைஞர் உணவகம்’ எனப் பெயர் மாற்றிவிடுவார்களோ என்பதுதான் அதிமுக-வினரின் அச்சம்!” என்றனர்.

இது தொடர்பாக தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``பாடப்புத்தகத்தில் ஜெயலலிதா படத்தை நீக்க வேண்டாம், அப்படியே தொடரட்டும் என்று பெருந்தன்மையாகச் சொன்னவர்தான் எங்கள் முதல்வர் ஸ்டாலின். ஒரு திட்டம் நல்லதாகத் தோன்றினால் அதைத் தொடர்ந்து செயல்படுத்துவது அரசின் கடமை. ஆனால், அந்தத் திட்டத்தை அதே பெயரில் தொடரச் செய்ய வேண்டும் என்கிற சட்டம் எதுவுமில்லை” என்றார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வினரின் கருத்தறிய அந்தக் கட்சியின் கலைப்பிரிவு இணைச் செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகனிடம் கேட்டோம். ``பசிப்பிணி போக்கிய உன்னத திட்டமான அம்மா உணவகத்தை இந்தியாவிலேயே முதலில் தொடங்கியது அம்மாதான். முன்னோடித் திட்டமான இதைப் பார்த்து ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் உணவகங்களைத் திறந்திருக்கின்றன. யார் வேண்டுமானாலும், எந்தப் புதிய திட்டத்தையும் தொடங்கலாம். ஆனால் பெயர் நிலைக்க வேண்டுமே! அம்மாவுக்குத் தொடர்ந்து பெயர் போய்க்கொண்டிருக்கிறதே என்று தி.மு.க-வுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை போலும்.
மழை வெள்ளம், புயல், கொரோனா காலங்களில் ஊரிலிருக்கும் அத்தனை உணவகங்களும் மூடப்பட்டுக்கிடந்தன. அப்போதெல்லாம் மக்களுக்கு அட்சயப் பாத்திரமாக உதவியது அம்மா உணவகங்கள்தான். பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அனைவரும் சமத்துவமாக உணவருந்தியது அங்குதான். அ.தி.மு.க திட்டங்களிலேயே மாஸ்டர் திட்டம் என்பதால், அ.தி.மு.க-வுக்குத் தொடர்ந்து புகழ் சென்றுகொண்டிருப்பதை தி.மு.க-வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் கலைஞர் உணவகம் தொடங்கினாலும், திட்டத்தின் மூலவரான அம்மா பெயர்தான் காலந்தொட்டு ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.