Published:Updated:

கனிமொழி கருணாநிதியின் தனி அரசியல் கணக்கு பலிக்குமா?!

கனிமொழி
News
கனிமொழி

ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க நிர்வாகிகளால் வைத்துக் கொண்டாடப்பட்டவர் கனிமொழி. ஆனால், இன்று தி.மு.க-வின் இரண்டாம் கட்ட வரிசை தலைவர்களில் ஒருவராக அவர்  அடையாளப்படுத்தப்படுகிறார்.

கருணாநிதி தலைவராக இருந்தபோது, தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், ஸ்டாலினுக்கு அடுத்த இடத்திலும் தி.மு.க நிர்வாகிகளால் வைக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டவர் கனிமொழி. ஆனால், இன்று தி.மு.க-வின் இரண்டாம் கட்ட வரிசைத் தலைவர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்த, அதை மௌனமாக வேடிக்கை பார்த்துவருகிறார் கனிமொழி.

கருணாநிதி-கனிமொழி
கருணாநிதி-கனிமொழி

கருணாநிதியின் மனைவியான ராஜாத்தி அம்மாளின் ஒரே வாரிசு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. 2ஜி விவகாரத்தில் சிக்கி திகார் சிறைக்கு கனிமொழி சென்றபோது, அவரைக் காப்பாற்ற அன்றைக்கு டெல்லி வரை விஜயம் செய்தார் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி. தி.மு.க-வில் கனிமொழிக்கு என்று தனி ஆதரவாளர்கள் வட்டமே அப்போது உருவானது. குறிப்பாக தென்மாவட்ட தி.மு.க-வில் அவருக்கென பெருகிய ஆதரவு அலை ஒருகட்டத்தில் ஸ்டாலினையே யோசிக்கவைத்தது. அதன் விளைவுதான் இப்போது கனிமொழியின் அரசியல் அந்தத் தென் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தோடு சுருங்கக் காரணமாகிவிட்டது என்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜனவரி 5-ம் தேதி... இன்று கனிமொழியின் பிறந்தநாள். அரசியல் களத்துக்குள் கனிமொழி இன்று தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தாலும், தி.மு.க-வில் அவரின் முக்கியத்துவம் தொடர்ந்து குறைந்துவருகிறதா என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, ``கருணாநிதியின் காலம் வரை கனிமொழியின் அரசியல் ஏற்றத்திலிருந்தது. குறிப்பாக 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓரளவு தனது ஆதரவாளர்களுக்கு சீட்களை வாங்கிக் கொடுத்தார். ஆனால், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கனிமொழியின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவந்தது. ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தவரை, துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடவைத்து, அந்த மாவட்டத்துக்குள் அரசியல் செய்ய வைத்தனர். ஒருபுறம் மகளிர் அணிச் செயலாளர் என்கிற பதவியில் அவர் இருந்தாலும், அவர் பெரிதும் எதிர்பார்த்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை அவருக்குத் தரவில்லை.

கனிமொழி - ஸ்டாலின்
கனிமொழி - ஸ்டாலின்

ஸ்டாலின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவரின் மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியதால், கனிமொழியின் அரசியல் களம் பின்னுக்குப் போய்விட்டது. கனிமொழியின் ஆதரவாளர்களாக இருந்தவர்களே இப்போது உதயநிதிக்கு ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள். காரணம், இனியும் கனிமொழி பின்னால் நின்றால் தங்களையும் ஓரங்கட்டிவிடுவார்கள் என்கிற அச்சம் கட்சி நிர்வாகிகளிடம் உள்ளது. இது கனிமொழிக்குத் தெரியும். அவரால் ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி எதுவும் செய்ய முடியவில்லை. முன்பு டெல்லி தி.மு.க-வின் முகமாக கனிமொழியை உருவாக்க நினைத்தது தி.மு.க தலைமை. ஆனால், ஸ்டாலின் தலைவராக வந்த பிறகு அந்த இடத்துக்கு டி.ஆர்.பாலுவைக் கொண்டுவந்துவிட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனாலேயே அரசியல் களத்தில் தன்னை அடையாளப்படுத்த வேறு சில யுக்திகளைக் கையில் எடுக்க ஆரம்பித்துள்ளார் கனிமொழி. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையும், 21 வயதே பெண்களின் திருமண வயது என்பதற்கான சட்டதிருத்த மசோதாவிலும் அவர் கூறிய கருத்து அகில இந்திய அளவில் பேசப்பட்டது. தன்னை தி.மு.க-வின் ஒரு முகமாக அறியப்படாமல், ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் கனிமொழி இறங்கியுள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களுக்குத் தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை, என்கிற கவலை அவரிடம் இருக்கிறது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர் அரசியல் செய்துவருகிறார். தற்போது சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் பொதுக்கூட்டங்களி்ல் அதிகம் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் தி.மு.க-வில் கருணாநிதியின் மகள் என்கிற அடையாளத்தைத் தாண்டி தனக்கான தனி ஓர் அடையாளத்தை உருவாக்க அவர் முனைகிறார்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி
நாடாளுமன்றத்தில் கனிமொழி

ஸ்டாலினுடன் அவர் நல்ல உறவைப் பேணி வந்தாலும், ஸ்டாலின் குடும்பத்தினருடன் கனிமொழிக்குச் சொல்லிக்கொள்ளும்படி நெருக்கம் இல்லை. இந்த இடைவெளியைத் தணிக்க வேறு வழியும் இப்போதில்லை, எனவே, அரசியல் களத்தில் புதிய அடையாளத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் எண்ணம் கனிமொழியிடம் இருக்கிறது” என்கிறார்கள்.

கனிமொழிக்கு தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இல்லை என்றாலும், தொண்டர்கள் ஆதரவு கணிசமாக இருக்கிறது. குறிப்பாக அவரின் பிறந்தநாள் அன்று தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியது தி.மு.க தலைமைக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது. எதிர்காலத்தில் தி.மு.க-வில் தான் ஓர் அசைக்க முடியாத சக்தியாக இருக்க வேண்டும் என்கிற கனிமொழியின் கனவு பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.