Published:Updated:

3-ம் ஆண்டு நினைவுநாள்: கருணாநிதியின் கனவுகளை நோக்கி ஸ்டாலின் ஆட்சி..!

கருணாநிதி, ஸ்டாலின்
கருணாநிதி, ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. தி.மு.க-வினர் தங்கள் வீடுகளின் முன்பாக கருணாநிதியின் புகைப்படத்தைவைத்து புகழ் வணக்கம் செலுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேசிய அளவில் முதன்மையான மாநிலக் கட்சிகளில் ஒன்றாக தி.மு.க விளங்கிவருகிறது. அதன் தலைவராக அரை நூற்றாண்டுக் காலம் செயல்பட்டவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அரசியலின் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவர். ஆற்றல்மிக்க அரசியல் தலைவர், சிறந்த எழுத்தாளர், கவிஞர், நாடகம் மற்றும் திரைப்பட வசனகர்த்தா, பத்திரிகையாளர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகச் சிறப்புகள் வாய்ந்தவர் கருணாநிதி.

கருணாநிதி
கருணாநிதி

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அவர். 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்வரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அவரது ஆட்சிக்காலத்தில் சமூகநீதிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மகளிருக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு, உழவர் சந்தைகள், சமத்துவபுரங்கள் என கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தமிழ்நாட்டில் பல வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தின.

வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்றுவந்தார். 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மரணத்தைத் தழுவியபோது, ஆட்சியதிகாரத்தில் தி.மு.க இல்லை. அவர் மறைந்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இப்போது, ஆட்சிக்கட்டிலில் தி.மு.க அமர்ந்துள்ளது. கருணாநிதியின் மகனும், அவரின் அரசியல் வாரிசுமான முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆட்சியின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல திட்டங்களை ஸ்டாலின் அரசு மேற்கொண்டுவருகிறது.

கருணாநிதி நினைவிடம்
கருணாநிதி நினைவிடம்

அறுபது ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கருணாநிதி, மரணத்துக்குப் பிறகு, தற்போது நிரந்தரமாக தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றுவிட்டார். தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதியின் திருவுருவப்படத்தை இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்து திறந்துவைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில், ``இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்” என்று கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டினார் ராம்நாத் கோவிந்த்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அமைதிப் பேரணி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அன்றைய தினம், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் உருவச்சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார். அன்று மாலையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டமும் நடைபெற்றது. கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் வந்த சமயத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு தொடங்கிவிட்டது. அப்போது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமது கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் முக்கியமானது.

கருணாநிதி படத்திருப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த், ஸ்டாலின்
கருணாநிதி படத்திருப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த், ஸ்டாலின்

`இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பெரும் சவால் உருவாகியிருக்கிறது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, மத்திய அரசுக்கு சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும், நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாக கருணாநிதி தேவைப்படுகிறார்” என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ``ஜனநாயகத்தை பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம். நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் திசைதிருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி, அதை கருணாநிதி ஓய்விடத்தில் அவரது திருவடிகளில் காணிக்கையாக்குவோம்” என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் கூறியிருந்தார். இன்றைக்குத் தேர்தல் களத்தில் வென்று புனித ஜார்ஜ் கோட்டையில் தி.மு.க அமர்ந்திருக்கிறது.

அலுவல் சாரா கல்விக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் பாரபட்சமா... சர்ச்சைக்கு என்ன காரணம்?

இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்துகொண்டு கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளை தி.மு.க-வினர் அனுசரிக்கிறார்கள். இந்த நினைவுநாளையொட்டி, `உங்களில் ஒருவன்’ என்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``சட்டமன்றத்தில் படமாகத் தோன்றிய நம் தலைவரின் நினைவை வீட்டில் போற்றுவோம்’’ என்று கூறியிருக்கிறார். அவரது வேண்டுகோள்படி, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கூட்டம் சேருவதைத் தவிர்த்து, தி.மு.க-வினர் தங்கள் வீட்டு வாசல்களில் கருணாநிதியின் புகைப்படத்தை மாலையால் அலங்கரித்து மரியாதை செலுத்தினார்கள்.

கருணாநிதி
கருணாநிதி

தமிழ்நாட்டில் தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களும், ஏராளமான சமூகநலத் திட்டங்களும் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. நில உச்சவரம்பு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் சம பங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் எனப் பல முன்னோடித் திட்டங்கள் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. தற்போது ஸ்டாலின் ஆட்சியில், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. இது, பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அந்த வகையில், கருணாநிதி அரசின் நீட்சியாக ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பார்க்கப்படுகிறது. கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்த வகையில், கருணாநிதி உயிருடன் இல்லையென்றாலும், அவரது கனவுகள் ஸ்டாலின் ஆட்சியில் நனவாக வேண்டும் என்பது தி.மு.க-வின் மூத்த தலைவர்களின் ஆவலாக இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு