Published:Updated:

அரசியல்வாதி ஆக்கப்பட்ட பொருளாதார நிபுணர்! - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள் பகிர்வு

தனது 89-வது வயதில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை அரசியல்வாதி எனச் சொல்லிக் கொள்வதைவிட பொருளாதார மாணவராகக் காட்டிக் கொள்ளவே விரும்புவார். மன்மோகன் சிங் பிறந்தநாளில் அவர் பொது வாழ்வில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் பிரதமர்களுள் பெரிய அளவில் பாராட்டப் பட்டதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதும் மன்மோகன் சிங் ஒருவராகத்தான் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதாரம் சார்ந்து முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர். மிகப்பெரிய பொருளாதார பேரழிவின் விளிம்பிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதில் பெரும் பங்கு வகித்தவர். உலக சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் பட்டியலை இந்தியா அடைய மன்மோகன் சிங்கின் பங்கு முக்கியமானது. இதனாலேயே “இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பி” என இவர் அழைக்கப்பட்டார். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். பதவியிலிருந்த காலத்தில் ‘செயல்படாத பிரதமர்’ எனவும் பொருளாதார நிபுணரின் ஆட்சியிலேயே இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றதும் என்பதும்தான் இவர் சந்தித்ததிலேயே மிகப்பெரிய விமர்சனங்கள்.

நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர், ஆக்ஸ்போர்டில் படித்தவர் எனப் பல முகங்கள் இருந்தாலும் இந்திய வரலாறு மன்மோகனை எப்போதும் பொருளாதார நிபுணராகவே அடையாளம் காண்கிறது. மன்மோகனும் அதையேதான் விரும்புவார் என நினைக்கிறேன். அரசியல்வாதியான மன்மோகனுக்குள் இருக்கும் பொருளாதார நிபுணர் குறித்து அவரின் பிறந்தநாளில் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.

`30 ஆண்டுகள் ஆகிவிட்டன, மகிழ்ச்சி; ஆனால்..!’ - தாராளமயமாக்கலை நினைவுகூரும் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதி அல்ல. பொருளாதார நிபுணர். அவரை அரசியலுக்கு அழைத்து வந்த பெருமை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவையே சேரும். ஏறக்குறைய அரசியலிலிருந்து விலக நினைத்த நரசிம்மராவ்வின் வாழ்க்கையை மீண்டும் அரசியலின் பக்கம் திருப்பியது ராஜீவ்காந்தியின் படுகொலைதான். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கட்சி சார்ப்பாக நரசிம்மராவ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அப்போதைய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா, இந்தியாவின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி, எட்டு பக்க அறிக்கையை அவரிடம் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடர்பாக தன்னுடைய நெருங்கிய ஆலோசகர் பி.சி. அலெக்சாண்டரிடம் நரசிம்மராவ் விவாதித்தபோது “சர்வதேச நிலையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒருவரை நீங்கள் நிதி அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கமுடியுமா?” எனக் கேட்டிருக்கிறார். அவர் பரிந்துரை செய்த பெயர் “ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவரும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் இயக்குநராகவும் இருந்த ஐ.ஜி.படேலின் பெயர். ஆனால், ஐ.ஜி.படேல் அதை ஏற்க மறுக்கவே அடுத்த இடத்தில் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்தான் மன்மோகன் சிங்.

உங்களை எனது நிதி அமைச்சராக்க விரும்புகிறேன் என்று அவர் சொன்னார். ``நாம் வெற்றிகரமாக இருந்தால், நம் இருவருக்கும் அதற்கான நற்பெயர் கிடைக்கும். ஆனால் நாம் தோல்வியடைந்தால், நீங்கள் விலக வேண்டியிருக்கும்” எனக் கூறி மன்மோகன் சிங்கை நிதியமைச்சர் ஆக்கினார் நரசிம்மராவ்.

நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்
நரசிம்ம ராவ்; மன்மோகன் சிங்

1991-ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் மன்மோகன் சிங் அதை எடுத்துக் கொண்டு நரசிம்மராவ்விடம் சென்றபோது, ​​அதை அவர் நிராகரித்ததோடு, ‘இதுபோன்ற ஒன்றுதான் எனக்குத் தேவை என்றால் நான் ஏன் உங்களைத் தேர்வு செய்திருக்கப்போகிறேன்’ எனக் கடுமையாகவும் பேசி அனுப்பியிருக்கிறார். ஆனால், அந்தப் பட்ஜெட்தான் நவீன இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொருளாதாரம் குறித்துத் தொடர்ந்து இயங்கி வரும் மன்மோகன் சிங், மத்திய பா.ஜ.க அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதை `இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பேரழிவு’ என விமர்சனம் செய்தார். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதெல்லாம் அதற்குரிய ஆலோசனைகளையும் தரத் தவறவில்லை. மத்திய அரசின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த சமயத்தில், “நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இதைவிடச் சிறந்த வாய்ப்புக்குத் தகுதியானவர்கள். இந்த பாதையில் இந்தியாவால் இனியும் தொடர முடியாது. எனவே, அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.

மேலும் கொரோனா காலங்களில் ``மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்குச் செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும். அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும். நிறுவனத் தன்னாட்சி, செயல்முறைகள் மூலம் நிதித் துறைக்குப் பொறுப்பு அளிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினார்.”

மோடி - மன்மோகன் சிங்
மோடி - மன்மோகன் சிங்

``இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாகக் கூறுகிறேன்” என அரசியலையும் தாண்டி பொருளாதார நிபுணராக அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பொருளாதாரம் மட்டுமல்லாது அண்டை நாடுகளுடனான பிரச்னைகள் தொடர்பாகவும் பா.ஜ.க அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தான் சார்ந்த அரசியல் தாண்டி தன்னை ஒரு பொருளாதார மாணவராக எப்போதும் உணரும் மன்மோகன் இப்போதும் ஏதாவது ஒரு மூளையில் நாட்டின் பொருளாதாரம் குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருப்பார்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு