Published:Updated:

கோயில் நில விவகாரம் டு அர்ச்சகர்கள் நியமனம் வரை - அமைச்சர் சேகர்பாபுவின் நகர்வுகள் எப்படிப்பட்டவை?

கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு
கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு

அனைத்துச் சாதியினரும் அர்ச்சராக நியமிப்பது குறித்த அறிவிப்பு தொடங்கி தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில்களின் நிலங்களை மீட்பது எனப் பல அதிரடி நடவடிக்கைகளைச் செய்துவருகிறார் அமைச்சர் சேகர்பாபு. அவரது நடவடிக்கையின் பின்னணி என்ன?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பதவியேற்றது முதல் தனது துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் சேகர்பாபு. தி.மு.க அரசு பொறுப்பேற்கும் முன்பே அரசுக் கட்டுப்பாட்டிலிருக்கும் கோயில் நிலங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது. ஜக்கி வாசுதேவ் தொடங்கி பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா உட்பட சிலர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து கருத்துகளைப் பகிர்ந்துவந்தனர். இந்தநிலையில்தான் இந்து சமய அறநிலையத்துறைக்கு சேகர்பாபு அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்பட்டுவந்த சூழலில் அவற்றை எதிர்கொள்ள சேகர்பாபுதான் சரியானவர் என்ற எண்ணத்திலேயே, அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அப்போது திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. பொறுப்பேற்றது முதல் எதிர்பார்த்ததுபோல பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சேகர்பாபு எடுத்துவருகிறார்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் மீட்பு...
திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் மீட்பு...

கோயில்களில் கொடுக்கப்படும் அன்னதானங்களை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருக்கும் நோயாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டதில் தொடங்கியது அவரது அதிரடி. “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாள்களில் செயல்படுத்துவோம். இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார்” என அறிவித்ததில் உச்சம் அடைந்தது.

கோயில்களின் சொத்து விவரம்:  அதிரடிகாட்டும் அறநிலையத்துறை அமைச்சர்! -  அரசின் நோக்கம் என்ன?

சமீபத்தில் தனியார் ஆக்கிரமித்திருந்த வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இருக்கும் கோயில்களின் சொத்துகள் குறித்து இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘திருக்கோயில்களுக்குச் சொந்தமான 4,78,272 ஏக்கர் நிலங்கள் தொடர்பான உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. அவை விரைவில் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள `தமிழ் நிலம்’ மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு விவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  கோயிலில் ஆய்வு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலில் ஆய்வு

முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலம் தொடர்பான விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. `திமுக ஆட்சிக்கு வந்து 30 நாள்கள் ஆகி உள்ளன. இப்போது நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் வெறும் டிரைலர்தான். இனிமேல்தான் மெயின் பிக்சரை பார்க்கப்போகிறீர்கள்” என மேலும் அதிரடி காட்டத் தயாராகியிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

அமைச்சர் சேகர்பாபுவின் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். “தலைவர் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் இயற்றி, அதற்காக ஒரு பயிற்சி பள்ளியை உருவாக்கி, அதில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், எங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் அடிப்படையிலும் அவர்களுக்குப் பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது கழக ஆட்சியின் முக்கியக் கடமை. அதைத்தான் அமைச்சர் சேகர்பாபு பயிற்சி பெற்ற அனைத்து அர்ச்சகர்களுக்கும் 100 நாள்களுக்குள் பணி வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எந்தக் கோயிலின் கீழ் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது தெரியாது. அதனால்தான் கோயில் நிலங்கள் அனைத்தையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யச் சொல்லியிருக்கிறார். அப்படிச் செய்தால் எந்தக் கோயிலின் கீழ் எத்தனை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன, யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதில் ஆக்கிரமிப்பில் எவ்வளவு இருக்கிறது எனத் தெரியவரும். இதனால், கோயில் நிலங்கள் தொடர்பாக ஏதாவது புகார் வந்தால் எளிதில் நடவடிக்கை எடுக்க வசதியாகவும் இருக்கும். அரசாங்கம் நிர்வாகம் செய்யும் வரைதான் கோயில் சொத்து, கோயில் சொத்தாக இருக்கும். தனியாரிடம் ஒப்படைத்தால் அது என்ன கதியை அடையும் என்றே யாருக்கும் தெரியாது.

டி.கே.எஸ்.இளங்கோவன்
டி.கே.எஸ்.இளங்கோவன்
விகடன்

தி.மு.க அரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடப்பது. தி.மு.க ஆட்சியில் திருவாரூர் தேரோட்டம் நடத்திவைக்கப்பட்டது, பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கிறது, எந்தக் கோயில் விழாக்களிலும் இதுவரை குழப்பங்கள் நடந்ததில்லை. இப்படியிருக்கும்போது தி.மு.க அரசை இந்து விரோத அரசு என்றே சொல்ல முடியாது. அரசாங்கம் அனைவருக்கும் பொதுவானது. அரசாங்கம் என்பது வேறு; கட்சி என்பது வேறு. முதலில் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

பா.ஜ.க மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “சென்னை உயர் நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பின் அடிப்படையிலேயே அரசின் நடவடிக்கை அமைந்துள்ளன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் நிலம் தொடர்பான விவரங்களை இணையத்தில் ஏற்றி, டிஜிட்டலாகப் பதிவு செய்வது வரவேற்கத்தக்க முயற்சிதான். அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகலாம் என்பதிலும் பா.ஜ.க-வுக்கு எந்தவிதமான மறுப்போ, ஆட்சேபனையோ எப்போதும் இருந்ததில்லை. பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலேயேகூட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகளால் இன்றும்கூட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லையே ஏன் என்பதை அவர்களிடமே கேள்வியாக வைக்கிறேன்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

அன்னதானத்தைப் பொறுத்தவரையில் அரசு கொடுப்பதாக இருக்கக் கூடாது. கோயில் கொடுப்பதாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், கோயில்கள் அரசின் சொத்துகள் இல்லை என உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. எனவே, அரசு கோயில்களின் சொத்துகளைப் பராமரிக்கக் கூடாது. அவற்றைத் தங்கள் சொத்துகளாகக் கொண்டாட முடியாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு