Published:Updated:

மோடி பின்பற்றும் `அமைதியோ அமைதி' - உ.பி விவசாயிகள் படுகொலைச் சம்பவத்திலும் எடுபடுமா?

நரேந்திர மோடி

மாதம்தோறும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிற பிரதமர், 'நாட்டையே உலுக்கும் விஷயத்தில் இப்படி கனத்த மௌனம் காப்பது ஏன்?' என்ற கேள்வி சாமானியர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

மோடி பின்பற்றும் `அமைதியோ அமைதி' - உ.பி விவசாயிகள் படுகொலைச் சம்பவத்திலும் எடுபடுமா?

மாதம்தோறும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிற பிரதமர், 'நாட்டையே உலுக்கும் விஷயத்தில் இப்படி கனத்த மௌனம் காப்பது ஏன்?' என்ற கேள்வி சாமானியர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

Published:Updated:
நரேந்திர மோடி

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதாக, மத்திய இணை அமைச்சர் மகன் கைதுசெய்யப்பட்டுவிட்ட பிறகும்கூட, இது குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் வழக்கம்போல் கனத்த மௌனம் காத்துவருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கோபமடைந்த உ.பி பா.ஜ.க-வினர் லக்கிம்பூர் கெரி பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்ததாக வெளியான வீடியோ காட்சிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைத்தன. இந்தப் படுகொலைச் சம்பவத்தில் விவசாயிகள் நான்கு பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பா.ஜ.க-வினரும் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கின்றனர்.

விவசாயிகள் மீது கார் மோதும் காட்சி
விவசாயிகள் மீது கார் மோதும் காட்சி

இதையடுத்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திவருகின்றன. பா.ஜ.க-வைச் சேர்ந்த வருண் காந்தி, குஷ்பு உள்ளிட்டவர்களும் இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா உள்ளிட்ட பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சம்பவம் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

உலகையே உலுக்கி எடுத்துள்ள இந்தப் பிரச்னையில், 'பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியிடமிருந்து ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை' என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாதம்தோறும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிற பிரதமர், 'நாட்டையே உலுக்கும் விஷயத்தில் இப்படி கனத்த மௌனம் காப்பது ஏன்?' என்ற கேள்வி சாமானியர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், ``படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஓர் இரங்கல் வார்த்தை தெரிவிக்கக்கூட பிரதமருக்கு மனம் இல்லையே" என்று வேதனைப்பட்டிருக்கிறார். பிரியங்கா காந்தியோ, ``லக்னோ வர முடிந்த பிரதமருக்கு, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற லக்கிம்பூர் வர முடியவில்லையே" எனக் கோபமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மத்தியில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் திட்டங்களை அதிரடியாக அறிவித்துவருகின்றன. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகளுக்கு எதிராக பொதுமக்களின் அறப் போராட்டங்களும் அதிகரித்துவருகின்றன. ஆனால், 'மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகச் சூழலை ஏற்படுத்த அக்கறை காட்டுவதில்லை மத்திய அரசு. மாறாகப் போராட்டம் நடத்திவருகிற மக்களை, 'சமூக விரோதிகள், தீவிரவாதிகள், வெளிநாட்டுக் கைக்கூலிகள்' என பழிச்சொல் சுமத்தி போராட்டத்தை நசுக்குகிற வேலையில் தொடர்ந்து ஈடுபடுகிறது மத்திய பா.ஜ.க அரசு' என்கின்றன எதிர்க்கட்சிகள்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில் கனத்த மௌனம் காத்துவருவது குறித்து பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ``விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் மட்டுமல்ல... நாட்டின் தலையாய பிரச்னைகள் எவற்றிலும் பிரதமர் வாய் திறப்பதே இல்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள், ஊரடங்கின்போது லட்சக்கணக்கான குடிமக்கள் பல்லாயிரம் கி.மீ நடந்தே சென்ற பேரவலம், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், உன்னாவ் சிறுமி கற்பழிப்பு, அஸ்ஸாமில் போலீஸாரால் தாக்கப்பட்டு கீழே கிடந்த நபர் மீது அரசு புகைப்படக்கலைஞர் ஒருவரே ஏறி நின்று நடனம் ஆடிய கொடூரம், விவசாயிகளுக்கான பிரச்னைகள் என தேசிய அளவில் செய்திகளான எந்தவொரு விஷயத்துக்கும்கூட நம் பிரதமர் நரேந்திர மோடி, வாய் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசியதில்லை.

'பிரதமர் மோடி, டிக்டேட்டர் அல்ல' என்று அமித் ஷா சொல்வதிலிருந்தே, பிரதமர் மோடி எவ்வளவு பெரிய டிக்டேட்டர் என்பதை உணர முடிகிறது. ஆக, பிரதமருக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ, அதைப் பற்றி மட்டும் பேசுவார்... அவ்வளவுதான்!'' என்கிறார் அழுத்தமாக.

இதையடுத்து, உ.பி விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசியபோது, ``உ.பி-யில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்தை யாருமே ஆதரிக்க முடியாது. இந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடைபெற்று சம்பந்தப்பட்ட நபரைக் கைதும் செய்திருக்கிறார்கள். ஆக, சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதில், ஒரு பிரதமர் என்ன கருத்து சொல்ல முடியும்?

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

எங்கேயாவது சிறுமி கற்பழிக்கப்படுகிறாளா அல்லது கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுகிறதா என்றெல்லாம் சம்பவங்களைத் தேடியலையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுமானால், இதைவைத்து அரசியல் செய்ய முடியும். இதற்கு மாறாக, 'இந்தியாவை எப்படி முன்னேற்றலாம்' என்பது போன்ற ஆலோசனைகளை ஒரு கருத்தரங்கில் வந்து ராகுல் காந்தியோ அல்லது பிரியங்கா காந்தியோ கொடுப்பார்களா? பிரதமர் நரேந்திர மோடிக்கு நம் தேசம் முன்னேற வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கம். எனவே, இது போன்ற சம்பவங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதற்கு அவருக்கு அவசியம் இல்லை. உ.பி-யில் நடைபெற்றுவரும் சட்டப்படியான நடவடிக்கைகளின் குறுக்கே யாரும் நிற்கவில்லை. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

அடுத்து, பிரதமர் மோடி தொடர்ந்து மக்களைச் சந்திக்கிறார்; `மன் கி பாத்’ மூலம் பேசுகிறார். மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கிறார், திட்டங்களைச் செயல்படுத்துகிற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு பேசுகிறார். எனவே, தேவையான நேரத்தில், தேவையான கருத்துகளை வெளியிட்டுவருபவரைப் பார்த்து 'டிக்டேட்டர்' என்று சொல்வது பொருத்தமில்லாதது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பதவிக்கு வந்த காலத்திலிருந்தே நம் பிரதமர் மோடி மீது இதுபோன்ற தவறான பிரசாரங்கள் செய்யப்பட்டேவருகின்றன. எனவே இதைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை!'' என்கிறார் தெளிவாக.