Published:Updated:

இலங்கை:`ஒரே நாடு ஒரே சட்டம்'; புத்த பிக்குவின் தலைமையில் 13 பேர் குழு; புறக்கணிக்கப்பட்ட தமிழர்கள்!

இலங்கையில் `ஒரே நாடு, ஒரே சட்டம்' அமல்படுத்துவதற்கான சட்ட வரைவு அறிக்கையை தயாரிக்க, 13 பேர்கொண்ட குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் குழுவில் ஒரு தமிழ் உறுப்பினர்கூட இடம்பெறவில்லை.

இலங்கையில் `ஒரே நாடு, ஒரே சட்டம்' அமல்படுத்துவதற்கான சட்ட வரைவு அறிக்கையைத் தயாரிக்க, 13 பேர்கொண்ட குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் குழுவின் தலைவராக இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் தொடர்புடைய, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற குற்றவாளி, கலகொட அத்தே ஞானசார தேரர் என்ற புத்த பிக்கு நியமிக்கப்பட்டிருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தக் குழுவில் ஒரு தமிழ் உறுப்பினர்கூட இடம்பெறவில்லை. இது தமிழ் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிணாமம் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே சட்டத்தின் பின்னணி:

கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையிலுள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சுமார் 270 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் கோரச் சம்பவம், அதே ஆண்டு நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதானமாக எதிரொலித்தது.

இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜபக்‌சேவின் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சி, `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் போன்ற இதர சட்டங்கள் அப்புறப்படுத்தப்பட்டு `ஒரே நாடு ஒரே சட்டம்' கொண்டு வரப்படும்’ எனத் தீவிரமாக பிரசசாரம் செய்தது. அந்தத் தேர்தலில் பொதுஜன பெராமுனா கட்சி வெற்றிபெற்று கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், மஹிந்த ராஜபக்சே பிரதமராகவும் அதிகாரத்தில் அமர்ந்தனர்.

இலங்கை குண்டுவெடிப்பு
இலங்கை குண்டுவெடிப்பு
நாடு நாடாகக் கடன்பெறும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது எதனால்? - ஓர் அலசல்

தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு முதலே 'ஒரே நாடு ஒரே சட்டத்தை' அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தீவிரம் காட்டிவந்தார்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

13 பேர்கொண்ட குழு:

தமிழர்கள் புறக்கணிப்பு:

இந்த நிலையில், தற்போது ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான முழு வரைவு அறிக்கையைத் தயார்செய்ய சிறப்புக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மொத்தமாக 13 பேர் கொண்ட இந்தக் குழுவில் ஒன்பது சிங்களவர்களும், நான்கு இஸ்லாமியர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால், ஒரு தமிழருக்குக்கூட இடம்கொடுக்காமல் முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறது ராஜபக்சே அரசு.

இலங்கைத் தமிழ் மக்கள்
இலங்கைத் தமிழ் மக்கள்
Mohan E

குற்றவாளி தலைமையில் குழு:

இதுமட்டுமல்லாமல், இந்தக் குழுவின் தலைவராக `புத்த பிக்கு' கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara Thero) அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் அதிகரித்திருக்கிறது. காரணம், ஞானசார தேரர்மீது ஏராளமான சட்ட, ஒழுங்குப் புகார்கள் உள்ளன. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருபவராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் தொடர்புடையவராகவும் இவர் அறியப்படுகிறார். குறிப்பாக, 2013-ம் ஆண்டு நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஞானசார தேரரின் 'போடு பாலா சேனா' (பி.பி.எஸ்) அமைப்பு முக்கியப் பங்குவகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ம் ஆண்டு காவல்துறையினரின் கடமைகளுக்கு எதிராக பிரச்னை ஏற்படுத்தியதாகக் கூறி கைதுசெய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆறு ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. பின்னர், 2019-ம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

கலகொட அத்தே ஞானசார தேரர்
கலகொட அத்தே ஞானசார தேரர்
ட்விட்டர்
“ராஜபக்சே ஒன்றும் நெல்சன் மண்டேலா அல்ல!”

இது போன்ற குற்றப் பின்னணிகொண்ட ஒரு பௌத்த பிக்குவின் தலைமையில், சட்ட வரைவு அறிக்கை தயார் செய்ய முடிவெடுத்திருப்பது, தமிழர்களை மட்டுமல்லாமல் இதர தரப்பினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொந்தளிக்கும் தமிழர்கள்:

``ஒரே நாடு ஒரே சட்டம் எனும்போது தற்போது நடைமுறையில் இருக்கும் `ரோம டச்சு சட்டம், ஆங்கிலச் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் சட்டம்' ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள, பௌத்த நாடாக மாற்றியமைக்க, இந்த ஒற்றைச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே, இந்தக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது" என வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஷ்வரன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

விக்னேஷ்வரன்
விக்னேஷ்வரன்

மேலும், ``ஒரே நாடு ஒரே சட்டமானது, இந்த நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்கள மாகாணங்களுடன் சேர்த்து, அவை சிங்கள பௌத்தத்துக்குள் அடங்கியவை என எடுத்துக்காட்டவே, இந்த இனரீதியிலான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

எனவே, ``தமிழர்களைப் பொறுத்தவரையில் 1948-ம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே இந்த சட்டமும், குழுவும்" என அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் சி.வி.விக்னேஷ்வரன். இவரைப்போலவே இதர தமிழ் அரசியல் கட்சியினரும் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.

இலங்கை
இலங்கை

இந்த ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த வரைவு அறிக்கையை, வருகிற 2022 பிப்ரவரி மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என 13 பேர்கொண்ட குழுவுக்கு இலங்கை அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு